05/07/2025
தௌஹீதின் பேரில் சில தவளைகள்
இலங்கை மற்றும் இந்தியாவில் சில தௌஹீத் பேர் தாங்கிகள் இஸ்லாம் என்றால் சவூதி அரேபிய மன்னர்களின் மனம் கோணாமல் நடப்பது என்று புரிந்து வைத்துள்ளார்கள் போலும். அதன் காரணமாக இஸ்லாம் என்ற பேரிலும், தௌஹீத் என்ற பேரிலும் இந்தத் தவளைகள் கத்தும் காட்டுக் கத்தல் காதுக்கு நாராசமாக இருக்கின்றது.
அண்மைக்காலமாக இஸ்ரேல்-ஈரான் போரிலும் இந்தத் தவளைகள் தங்கள் கிறுக்குத்தனமான உளறல்களை அள்ளிக் கொட்டிக் கொண்டிருக்கின்றார்கள். ஈரான் சீயா கொள்கை கொண்ட நாடாம். அதன் காரணமாக இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரானை ஆதரிக்க முடியாதாம். இஸ்ரேலுடனான போர் நிறுத்தம் தொடர்பான நிபந்தனைகளில் காசாவில் தாக்குதலை நிறுத்தும் வகையில் ஈரான் நிபந்தனை எதையும் முன்வைக்கவில்லையாம்.
முதலில் இந்தத் தௌஹீத் தவளைகளுக்கு சர்வதேச சட்டங்கள் , ராஜதந்திர நடைமுறைகள் குறித்து பாடம் எடுக்க வேண்டியுள்ளது. மோதல் நடைபெற்றது இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையில். அவ்வாறான சந்தர்ப்பத்தில் காசா என்பது பலஸ்தீனம் என்றொரு இன்னொரு நாட்டின் பிரதேசம். அதனை முன்னிறுத்தி எந்தவொரு நிபந்தனையும் முன்வைக்கும் உரிமை ஈரானுக்கு இல்லை. ஏனெனில் ஈரான் பலஸ்தீனத்தின் அண்டை நாடு கிடையாது. அதுவும் தவிர பலஸ்தீனம்-ஈரானுக்கு இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தங்களும் கிடையாது.
ஆனால் ஈரானிய ஆதரவாளர்களான ஹமாஸ் மற்றும் லெபனானிய ஹிஸ்புல்லாக்கள் அடித்த அடியில் தான் இன்றைக்கு இஸ்ரேல் , ஹமாஸுடன் போர்நிறுத்தம் என்று இறங்கி வருகின்றது. அதுவும் தவிர சுன்னி பிரிவைச் சேர்ந்த ஹமாஸ் போராளிகளுக்கு ஆகட்டும், லெபனானிய ஹிஸ்புல்லாக்களுக்கு ஆகட்டும், அசாத்தின் ஆட்சிக்காலத்தில் சிரியாவின் வழியாக ஏராளம் ஆயுதங்களை அள்ளிக் கொடுத்ததில் ஈரான் தான் முன்னின்று செயற்பட்டது.
இன்றைக்கு வரைக்கும் ஹமாஸ் மற்றும் லெபனானிய போராளிகளுக்கு எல்லா வகையான உதவிகளையும் ஈரான் செய்து கொண்டிருக்கின்றது. அவர்கள் சீயாக்களா? சுன்னிகளா என்று ஈரான் பாகுபாடு பார்க்கவில்லை..
இப்படியான நிலையில் இஸ்ரேல்- ஈரான் மோதலின் போது இஸ்ரேலின் தாக்குதல்களை ஒப்புக்கு கண்டித்த சவூதி , இரகசியமாக இஸ்ரேலின் பாதுகாப்புக்கு தேவையான ஒத்துழைப்புகளை செய்துள்ளது. இஸ்ரேலின் Israel hayom செய்திச் சேவையின் தகவல்களின் பிரகாரம் சவூதி தனது புலனாய்வுத் தகவல்கள் மற்றும் ரேடார் தகவல்களை இஸ்ரேலுடன் பரிமாறிக் கொண்டுள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் ஏவிய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இடைமறிப்பதில் ஒத்தாசைகளை வழங்கியுள்ளதுடன், இஸ்ரேலிய விமானங்களுக்கு சவூதி தனது வடக்கு வான்பரப்பையும் திறந்து கொடுத்துள்ளது.
அதற்குப் பதில் உபகாரமாக அமெரிக்கா தனது ஏவுகணை இடைமறிப்பு கட்டமைப்பை (THAAD) இஸ்ரேலுக்கு அடுத்ததாக தற்போது சவூதி அரேபியாவுக்கு வழங்க முன்வந்துள்ளது
சுமார் 15 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதி கொண்ட இந்த பாதுகாப்பு உபகரணக் கொள்வனவின் ஊடாக 07 தாட் (THAAD) பற்றரிகள், 44 ஏவுகணை செலுத்தும் கருவிகள் 44, இடைமறிப்பு ஏவுகணைகள் 360 என்பன சவூதி அரேபியாவுக்கு கிடைக்கப் பெறவுள்ளது.
இவ்வாறான ஆயிரக்கணக்கான உபகரணங்களை இஸ்ரேலுக்கு நன்கொடையாகவே அமெரிக்கா அள்ளிக் கொடுத்துள்ளது. அதற்கான செலவுகளை ஈடுகட்டிக் கொள்ளத் தான் ட்ரம்ப் தனது மத்திய கிழக்கு சுற்றுலாவின் போது சவூதி மற்றும் கட்டாரிடம் இருந்து பல்லாயிரம் பில்லியன் டொலர்களை நன்கொடையாகப் பெற்றுக் கொண்டிருந்தார்.
காசாவில் அப்பாவி குழந்தைகளை கொல்வதற்கு இஸ்ரேலிய அரக்கர்களுக்கு ஆயுதங்களை அள்ளிக் கொடுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு பெரும் தொகைகளை அள்ளிக் கொடுத்த சவூதியை எல்லாம் இந்த தௌஹீத் தவளைகள் தவறியும் கூட வாய்திறந்து கண்டிக்க மாட்டார்கள்.
போங்கய்யா..நீங்களும் உங்கள் அரைவேக்காட்டுத் தௌஹீத் கொள்கையும்..