
10/02/2025
#சுயாதீன பொது வழக்கறிஞர் அலுவலகம் ஸ்தாபிக்கப்படும் – சமூக நீதிக் கட்சி வரவேற்பு
சமூக நீதிக் கட்சியின் நீண்ட கால கோரிக்கையான "சுயாதீன பொது வழக்கறிஞர் அலுவலகத்தை" (Office of Independent Public Prosecutor) ஸ்தாபிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதையீட்டு,
சட்டம், நீதி, ஜனநாயக நெறிமுறைகள் ஆகியவை உறுதியாக நிலைத்திருக்க, அரசின் சட்ட ஆலோசகர் (State Attorney) மற்றும் பொது வழக்கறிஞர் (Public Prosecutor) என்ற இரண்டு பணிகளும் தனித்தனியாக இயங்குவது அவசியமாகும். தற்போது இரண்டும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் கீழ் செயல்படுவதால், முறையான நீதியாற்றலில் அடிப்படை முரண்பாடுகள் உருவாகுகின்றன. இதனை மாற்றிக்கொண்டு, சுயாதீன பொது வழக்கறிஞர் அலுவலகத்தை உருவாக்க வேண்டும் என்பதே சமூக நீதிக் கட்சியின் நிலைப்பாடு.
அண்மைய வரலாற்றில், அரசியலுடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி தப்பித்ததற்கான காரணங்களில் ஒன்று, இந்த அலுவலகத்தின் சுயாதீனமின்மையே. எனவே, அரசியல் தலையீடுகள் இல்லாத நீதிமுறையை உருவாக்க, சுயாதீன பொது வழக்கறிஞர் அலுவலகம் அவசியம் என்று சமூக நீதிக் கட்சி வலியுறுத்துகிறது.
இதற்கான கோரிக்கை 2024 ஆகஸ்ட் 16ம் தேதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஊடகவியலாளர் மாநாட்டிலும், 2025 பெப்ரவரி 4ம் தேதி சமூக நீதிக் கட்சியின் மூன்றாம் ஆண்டு நிறைவுவிழா தீர்மானத்திலும் வலியுறுத்தப்பட்டது. இந்த முயற்சிக்கு இப்போது அரசாங்கத்திடம் இருந்து நேர்மையான பதில் கிடைத்துள்ளது என்பதில் சமூக நீதிக் கட்சி மகிழ்ச்சி தெரிவிக்கிறது.
அரசாங்கம் இதற்காக நியமிக்கப்படும் குழுவில், நீதித்துறை, சட்டமா அதிபர் திணைக்களம், நீதியமைச்சு, சட்டத்தரணிகள் சங்கம், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் இடம்பெற வேண்டும் என்ற சமூக நீதிக் கட்சியின் கோரிக்கையை வலியுறுத்துகிறது.
இதற்காக நீண்ட காலமாக போராடிய ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரதிநிதிகள் அனைவருக்கும் சமூக நீதிக் கட்சி தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.