13/09/2025
#அரச மருத்துவமனைகளில் சன நெரிசலை குறைக்க புதிய திட்டம்!
அரசு மருத்துவமனைகளில் தற்போது நிலவும் நெரிசலை சமாளிக்க, தாய் மற்றும் சேய் சுகாதார நிலையங்களில் மருத்துவ மையங்களை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன் முதல் கட்டமாக, அடுத்த மாதம், தெரிவுசெய்யப்பட்ட 5 தாய் மற்றும் சேய் சுகாதார நிலையங்களில் முன்னோடித் திட்டங்கள் தொடங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த ஆண்டு இறுதிக்குள் இவ்வாறான 50 மருத்துவ மையங்களை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர்கள் குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அடுத்த ஆண்டு இறுதிக்குள், நாடு முழுவதும் 1,000 மருத்துவ மையங்களைத் தொடங்குவதே அரசாங்கத்தின் இலக்கு என்றும் அதன்போது தெரிவித்துள்ளனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட தாய் மற்றும் சேய் சுகாதார நிலையங்களின் புதுப்பித்தல் மற்றும் விரிவாக்கப் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.
தாய் மற்றும் சேய் சுகாதார நிலையங்கள் வழமையான முறையில் செயல்படும் என்றும், அவற்றிற்கு மேலதிகமாக மருத்துவ மையங்களைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவ மையங்களில் வெளிநோயாளர் பிரிவுகள், பிணியாய்வு நிலையங்கள் மற்றும் ஆய்வக வசதிகள் இடம்பெறும், இது மருத்துவமனைகளில் ஏற்படும் சனநெரிசலைக் குறைக்கும் என கூறப்படுகிறது.
5,000 முதல் 10,000 நோயாளர்களுக்கு ஒரு மருத்துவ மையத்தை ஒதுக்குவதே இதன் நோக்கம்.
மேலும், இந்த மருத்துவ மையங்களுக்கு பயிற்சி பெற்ற சுகாதார ஊழியர்களைத் தேர்தெடுக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.