25/06/2025
பல உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களை கைப்பற்றிய கட்சிகளின் விபரம்
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நாவலப்பிட்டி நகர சபையின் தலைவர் பதவயை இன்று (25) சுயேச்சைக் குழுவொன்று கைப்பற்றியது.
அதேபோல, மாத்தறை - முலட்டியன பிரதேச சபையின் தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்று அதிகாரத்தை கைப்பற்றியது.
முந்தைய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின்படி, எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேட்சைக் குழுவோ பெரும்பான்மையைப் பெறாத உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை நிறுவுவதற்கான நடவடிக்கை இன்று (25) உள்ளூராட்சி ஆணையாளர்களின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, நாவலப்பிட்டி நகர சபை இன்று மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சமிலா அத்தபத்து தலைமையில் கூடியது.
அங்கு நடைபெற்ற திறந்த வாக்கெடுப்பில், ஒரு சுயேட்சைக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமல் பிரியங்கர 9 வாக்குகளைப் பெற்று தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், அதே நேரத்தில் அவருடன் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தியின் திலக் சிறிசேனவினால் 5 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.
தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமல் பிரியங்கர, முன்னர் நாவலப்பிட்டி நகர சபையின் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.
உப தலைவர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியும் ஒரு சுயேட்சைக் குழுவும் போட்டியிட்டன. இதில் சுயேட்சைக் குழுவிலிருந்து போட்டியிட்ட கே. சுரேஷ்வரன் பெரும்பான்மை வாக்குகளுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதேவேளை, மாத்தறை - முலட்டியன பிரதேச சபையின் தவிசாளர் பதவியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றியுள்ளது.
தலைவர் பதவிக்கு இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது, அதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பாகப் போட்டியிட்ட ரேணுக கோமசாரு 13 வாக்குகளைப் பெற்றார், அதே நேரத்தில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் 10 வாக்குகளை மட்டுமே பெற்றார்.
உப தலைவர் பதவி ஐக்கிய மக்கள் சக்தியின் மகேந்திர லியனகேவுக்கு வழங்கப்பட்டது.
இதற்கிடையில், வலல்லாவிட்ட பிரதேச சபையின் முதலவாது கூட்டம் இன்று காலை மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா கல்ஹாரி ஜயசுந்தர தலைமையில் ஆரம்பமானது.
தவிசாளர் பதவிக்கு மூன்று பெயர்கள் முன்மொழியப்பட்டன, அதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சுனில் அபயசிறி, ஐக்கிய மக்கள் சக்தியின் இந்திக மல்லவராச்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த உதேனி அதுகோரல ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர்.
இதனையடுத்து நடந்த இரகசிய வாக்கெடுப்பில், தேசிய மக்கள் சக்தி 16 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சக்தி 5 வாக்குகளையும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 3 வாக்குகளையும் பெற்றன.
இதற்கிடையில், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற களுத்துறை-பலிந்தநுவர பிரதேச சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
23 உறுப்பினர்களைக் கொண்ட பிரதேச சபையில், ஐக்கிய மக்கள் சக்தி 9 உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தி 7 உறுப்பினர்கள், மற்ற கட்சிகளுக்கு 7 உறுப்பினர்களும் உள்ளனர்.
இந்நிலையில், தவிசாளர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் சனத் ஜீவந்தவின் பெயரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நிஹால் ஜயசிங்கவின் பெயரும் முன்மொழியப்பட்டன.
இதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது, அதில் தேசிய மக்கள் சக்தி 12 வாக்குகளைப் பெற்றதோடு, ஐக்கிய மக்கள் சக்தி 11 வாக்குகளை மட்டுமே பெற்றது.
சுயேச்சைக் குழுவிலிருந்து போட்டியிட்ட மல்காந்தி குமாரசிங்க, இரகசிய வாக்கெடுப்பு மூலம் அதன் உப தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும், நாவிதன்வெளி மற்றும் காரைதீவு பிரதேச சபைகளில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியும், வெங்கலச்செட்டிகுளம் மற்றும் அயகம ஆகிய பிரதேச சபைகளில் ஐக்கிய மக்கள் சக்தியும் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி கட்சி இன்று கொத்மலை, நானாட்டான், முசலி, வலல்லாவிட்ட, பாலிந்தநுவர மற்றும் குருவிட்ட ஆகிய உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளன.
அதன்படி, உள்ளாட்சித் தேர்தலில் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 151 உள்ளூராட்சி சபைகள் உட்பட 209 உள்ளாட்சி சபைகளின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி இதுவரை 30 சபைகளையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 4 சபைகளையும், இலங்கை தமிழ் அரசு கட்சி 18 சபைகளையும் வென்றுள்ளன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 4 சபைகளையும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 3 சபைகளையும் வென்றுள்ளன.
மற்ற அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களால் நிர்வகிக்கப்படும் உள்ளூராட்சி சபைகளின் எண்ணிக்கை 16 ஆகும், மேலும் கருத்து மோதல்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் காரணமாக சபை அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளின் எண்ணிக்கை 10 ஆகும்.