05/08/2025
இஸ்ரேலிய நாட்டினருக்கு இலவச விசாக்களை வழங்க வெளியுறவு அமைச்சின் உயர் அதிகாரிகளிடமிருந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன.
இது தொடர்பில் இன்று (05) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் தலையீட்டுடன் சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் அவர்கள் நாட்டிற்கு கொண்டு வரும் டொலர் வருமானத்தின் அடிப்படையில் தொடர்புடைய நாடுகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
"நாம் எந்த நாட்டையும் வேறு கோணத்தில் பார்த்ததில்லை. நீங்கள் பார்த்தால், இவற்றில் வெவ்வேறு நாடுகள் உள்ளன. இந்த நாடுகளைத் தேர்ந்தெடுப்பதற்கான அடிப்படை நாம் பெறும் டொலர் வருமானம் மற்றும் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆகும். அந்தப் பட்டியலில் நாடுகளைப் பற்றி மிகவும் தெளிவாக உள்ளது." என்றார்.
இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் காலத்தில் இஸ்ரேலில் இருந்து வரும் விமானங்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து இஸ்ரேலிய விமானங்கள் நாட்டிற்கு வரவில்லை என்றும் கூறிய அமைச்சர், ஒருவேளை இந்த ஆண்டின் பிற்பகுதியில் இஸ்ரேலிய விமானங்கள் நாட்டிற்குத் வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், அறுகம்பை பகுதியில் இஸ்ரேலியர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவது அவர்கள் சுற்றுலாப் பயணிகள் என்பதற்காக மட்டுமே என்று கூறிய அமைச்சர், அதற்காக பொலிஸர் மற்றும் முப்படையினரும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அவர்கள் கூடும் இடங்கள் இருந்தால், அரசாங்கம் அவர்களை பொதுவான சுற்றுலாப் பயணிகளாகக் கருதி அவர்களுக்குப் பாதுகாப்பை மட்டுமே வழங்குகிறது.
சுற்றுலாப் பயணிகள் தனியாகவோ அல்லது குழுக்களாகவோ எங்கும் கூடினால், அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு இருப்பதால் இது சிறப்புப் பாதுகாப்பு அல்ல.
இங்கு வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை. இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கைக்கு வரும் அனைத்து வெளிநாட்டினருக்கும், அவர்களின் நாட்டைப் பொருட்படுத்தாமல், பாதுகாப்பை வழங்குவதற்கு நாங்கள் முன்னுரிமை அளித்துள்ளோம்" என்றார்.