28/07/2026
🚨 இலங்கையில் புகையிலை மற்றும் சிகரெட் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு – புதிய சட்டம் தயாரிப்பு!
இலங்கையில் புகையிலை மற்றும் சிகரெட் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய சட்டமொன்றை கொண்டு வருவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் விசேட மருத்துவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் வாய் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், வெற்றிலையுடன் புகையிலை கலந்து விற்பனை செய்வது மற்றும் புகையிலை சார்ந்த பொருட்களின் விற்பனையை மேலும் கடுமையாகக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தற்போதுள்ள சட்டங்களின்படி, பாபுல், மாவா மற்றும் புகையிலை கலந்த வெற்றிலை போன்ற புகையிலை சார்ந்த பொருட்களை விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால், சாதாரண வெற்றிலை மற்றும் பாக்கு விற்பனைக்கு தடை இல்லை.
புகையிலை தொடர்பான சட்டங்களை அமல்படுத்தும் அதிகாரம் பொது சுகாதார பரிசோதகர்கள் (PHI), உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், மதுவரித் திணைக்களம் மற்றும் இலங்கை காவல்துறை ஆகிய நான்கு தரப்பினருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டங்களை மீறுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.2,000 அபராதம், ஒரு வருடத்திற்கு குறையாத சிறைத்தண்டனை, அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ தகவலின்படி, புகையிலை மற்றும் பாக்கு பயன்பாட்டால் ஆண்டுதோறும் 3,808 புதிய வாய் புற்றுநோய் நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். மேலும், நாளொன்றுக்கு சராசரியாக 3 பேர் உயிரிழக்கின்றனர். வெற்றிலையுடன் புகையிலை பயன்படுத்துவதைத் தவிர்ப்பதன் மூலம் இவ்வுயிரிழப்புகளில் சுமார் 80% வரை தடுக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த அனைத்து இலங்கைப் பிரஜைகளுக்கும் வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்குவதையும் விற்பனை செய்வதையும் தடை செய்யும் வகையிலான "To***co Free Generation" சட்ட முன்மொழிவை அமைச்சரவைக்கு விரைவில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
⚠️ குறிப்பு: இந்தச் சட்டம் இன்னும் அமலுக்கு வரவில்லை. தற்போது இது தொடர்பான சட்ட உருவாக்கப் பணிகள் மட்டுமே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
***coBan