25/10/2025
வருடங்கள் கடந்தாலும்
அழியாத வரலாறு.
-------------------------------------------
வடக்கு முஸ்லிம்களின் அகதி வாழ்க்கை ; ஒரு நாள் இரு நாளாகி,இரு நாள் பலநாளாகி, பலநாள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகி இன்றுடன் 35 வருடங்களை எட்டிக் கொண்டு தொட்டுவிட்டது. பலர் இன்றும் தம் அகதி வாழ்க்கையை நினைத்து வருத்தப்பட்டாலும் சிலரே அகதிகளின் வருத்தத்திற்குரிய வரலாற்றை அறிந்திருக்கின்றனர். எனவே ஒவ்வொரு தனிப்பட்ட இலங்கை பிரஜையும் வடக்கு முஸ்லிம்கள், தம் சொந்த பிரதேசத்தை விட்டு எவ்வாறு வெளியேற்றப்பட்டார்கள், ஏன் வெளியேற்றப்பட் டார்கள், எப்போது வெளியேற்றப்பட்டார்கள் மற்றும் அவர்களுக்கு தஞ்சமளித்து தங்குமிடம் கொடுத்து உதவியோர் யார்? என்ற பல்வேறு அம்சங்களை விபரமாக நோக்குவதற்கே இக்கட்டுரை சமர்ப்பணமாகிறது.
இலங்கையின் இனப்பிரச்சினையது பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரை பலி கொண்டுள்ளதுடன் இலட்சக்கணக்கான மக்களை அவர்களின் வாழிடத்தை இழக்கச் செய்து அநாதரவாக்கியது. குறிப்பாக இனப்பிரச்சினையின் தாக்கம் வடக்கு மாகாண முஸ்லிம்களை பாரதூரமாக தாக்கியது. இப்பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட உயிர் இழப்பு, பொருள் சேதம் என்பன ஒரு புறம் இருக்க இம்மக்கள் அனைவரும் 1990 ஆம் ஆண்டு வட மாகாணத்தை விட்டு வெளியேற்றப்பட்டமை மிகப் பாரதூரமாக இம்மக்களின் வாழ்க்கையைப் பாதித்தது.
1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 05 ஆம் திகதி இலங்கை இராணுவத்திற்கும்
விடுதலை புலிகளுக்குமிடையில் கடுமையான போர் பரவலாக ஏற்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி மன்னார்தீவின் சில முஸ்லிம் கிராமங்களில் விடுதலைப் புலிகள் உள் நுழைந்து அம்முஸ்லிம்களின் பணம், நகைகள்
போன்றவற்றை அபகரித்துச் சென்றார்கள். இந்நிகழ்வு மன்னார் பிரதேசத்தில் வாழ்ந்தோருக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. ஏனெனில் இந்நிகழ்வு விடுதலைப்புலிகளின் வழமையான நடவடிக்கைகளுக்கு முரணாக இருந்தது. மன்னார் பிரதேச மக்கள் 22ஆம் திகதி, இவ் இரவு நிகழ்ச்சியின் அதிர்ச்சியிலிருந்து விடுபடுவதற்கு முன்னர் மற்றுமொரு அதிர்ச்சி 23ஆம் திகதி அவர்களுக்கு காத்திருந்தது. அதுவே. "அன்று காலை 10 மணியளவில் விடுதலைப் புலிகளால் மன்னார் தீவின் முஸ்லிம் கிராமங்களில் கட்டாய வெளியேற்றம்" பற்றிய அறிவித்தல் செய்யப்பட்டிருந்தமை ஆகும். இதனால் மன்னார் தீவின் அதிர்ச்சியடைந்த முஸ்ஸம்கள்,சிலர் விடத்தல்தீவு வழியாக மன்னாரை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.
சூழ்நிலை இவ்வாறிருந்தாலும் விடத்தல்தீவு, பெரியமடு போன்ற மாந்தை முஸ்லிம் கிராமங்கள் வழமையான நிலையில் காணப்பட்டன. இப்பிரதேச முஸ்லிம்கள் கட்டாய வெளியேற்றம் பற்றி விடுதலை புலிகளிடம் விசாரித்த போதும் கூட அவ்வாறான அதிர்ச்சி உமக்கு ஏற்படாது என்றவாறான வாக்குறுதி பிரதேசமட்ட விடுதலைப்புலி உறுப்பினர்களால் அளிக்கப்பட் டது. ஆனால் அதே நேரத்தில் வீடத்தல்தீவு, பெரியமடுப் பிரதேச முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளால் வேறொரு வகையான வற்புறுத்தலுக்கு உள்ளானார்கள். யாதெனில், 23 ஆம் திகதி காலை விடத்தல்தீவு முஸ்லிம்கள் தம்மிடம் பெறுமதியான பொருட்கள் பற்றிய
விபரங்களை எழுத்தில் எழுதித் தரும்படி கேட்கப்பட்டிருந்தார்கள். 24 ஆம் திகதி அவ்வாறு எழுதிக் கொடுக்கப்பட்ட பொருட்களை விடத்தல்தீவு விடுதலைப் புலிகளின் தலைமையகத்தில் சமர்ப்பித்து பற்றுச்சீட்டுப் பெற்றுக் கொள்ளும்படி பணிக்கப்பட்டார்கள். இவ்வாறு விடுதலைப் புலிகளிடம் சமர்ப்பிக்கப்படும் பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் என்ற பொய்யான உறுதி மொழியும் முஸ்லிம்களுக்குக் கூறப்பட்டது.
இவ்வாறான நிகழ்வு முல்லைத்தீவு முஸ்லிம்களுக்கும் ஏற்பட்டது. அதாவது 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் 25ஆம் திகதி விடுதலை புலிகள் தங்களின் வாகனங்களில் முல்லைத் தீவு முஸ்லிம்களை அவசர அவசரமாக ஏற்றிக் கொண்டு வட மாகாணத்தின் எல்லையில் அதாவது வவுனியா நகருக்கருகில் இறக்கிவிட்டனர். அதாவது 1990 ஆம் ஆண்டு முஸ்லிம்கள் ஏன் வாலில்லாப்புலிகளால் வெளியேற்றப் படுகின்றோம் என்று அன்று யாருக்கும் தெரியவில்லை. வெறுங்கையுடன் உடுத்திய உடையுடன் வயோதிபர்கள். நோயாளிகள், கர்ப்பிணி தாய்மார்கள், கைக்குழந்தைகள் மற்றும் இரண்டு முன்று வயது பாலகர்கள் போன்ற அனைவரும் பல மைல் தூரம் சேறும் சகதியும், கல்லும் முள்ளும், குன்றும் குழியும் நிறைந்த காட்டுப்பாதை வழியாக வெளியேற்றப்பட்டார்கள். எங்கு செல்வது இன்றிரவுப் பொழுதை எங்கு கழிப்பது என்று எதுவுமே அறியாமல் தெரியாமல் வெளியேற்றப்பட்டார்கள். ஆண்டாண்டு காலமாக பரம்பரையாகச் சேர்த்த சொத்துக்கள், வீடுகள்,விளைபொருட்கள்,விளை நிலங்கள் மற்றும் ஆயிரக் கணக்கான கால்நடைகள் அத்தனையையும் பறி கொடுத்து விட்டு வெறுங்கையுடன் வெளியேற்றப்பட்டார்கள்.
விரக்தியுற்று வெளியேற வேண்டும் என்ற முடிவுக்குத்தள்ளப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள் தமக்கு கிடைத்த பாதைகளின் மூலம் தமது சொந்தபிர தேசத்தை விட்டு வெளியேற தொடங்கினார்கள். மேலே முல்லைத்தீவு முஸ்லம்களின் வெளியேற்றம் குறிப்பிட்டது போல ஒவ்வொரு கிராம மக்களினது அனுபவங்களும் வெவ்வேறாக காணப்பட்டன. அதனை விரிவாக நோக்குகையில் விடத்தல்தீவு முஸ்லிம்கள் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதியிலிருந்து கூட்டம் கூட்டமாக கிராமத்தை விட்டு வெளியேறினர். அக்காலத்தில் இவர்கள் வெளியேறுவதற்கு வசதியாக காணப்பட்ட பாதை பெரியமடு, பாலம் பிட்டி வழியான மடுப்பாதை ஆகும். விடத்தல்தீவு முஸ்லிம்கள் தமது ஊரிலிருந்து ஏறக்குறைய 18 மைல்கள் கால்நடையாக வந்து பெரியமடுவை அடைந்தார்கள். 27 ஆம்திகதி இரவு மடுக்கோயிலில் தங்கி மறுநாள் கால்நடையாகப் பூந்தோட்டம் வழியாக வவுனியாவை அடைந்தார்கள். வவுனியாநகரில் அன்று அவர்களுக்கு ஒரு பாடசாலையில் தஞ்சம் கொடுக்கப்பட்டது. அங்கிருந்து அனுராதபுரத்தில் நொச்சியாகமக் கிராமத்திற்கு வந்து பின்னர் புத்தள மாவட்டத்திற்கும், ஏனைய இடங்களுக்கும் அகதிகளாக அபயம் தேடிச் சென்றார்கள்.
பெரியமடு முஸ்லிம்கள் மடு, பண்டிவிரிச்சான் வழியாக வவுனியாவை அடைந்தார்கள். பண்டிவிரிச்சானில் வைத்து விடுதலை புலிகளால் தாம் அனுமதிக்காத ஏதாவது பொருட்களை எடுத்துச் செல்கின்றார்களா என்று பரீட்சிக்கப்பட்டார்கள். பெரியமடு முஸ்லிம்களில் அநேகமானோர் அரசாங்கப் பாடசாலை ஒன்றில் 07 நாட்கள் தங்கிவிட்டு நிரந்தர அகதி தளமாக பிரதானமாக புத்தள மாவட்டத்தை நோக்கி சென்றார்கள்.
வட்டக்கண்டல் முஸ்லிம்கள் 26 ஆம்திகதி தமது சொத்து சுகங்களை விட்டு விட்டு மடு வழியாக வெளியேறினார்கள். மூன்று நாட்கள் வவுனியாவில் தங்கியருந்து கெக்கிராவை G.P.S அகதி முகாமுக்கும், புத்தள பிரதேச அகதி முகாம்களுக்கும் சென்றார்கள். ஆய்வுகளின்படி ஒக்டோபர் இறுதி வாரத்தில் ஏறக் குறைய 40000 வட மாகாண ; யாழ்ப்பாண; முல்லைதீவு,வவுனியா, மன்னார் மாவட்ட முஸ்லிம்கள் அகதி வெள்ளமாக வவுனியாக நகரினூடாக இடம் பெயர்ந்தாக கூறப்படுகிறது.
இவ்வகதி வெள்ளத்தின் வாழ்க்கைக்கான அமைவிடம் தீர்மானிக்கப்பட்ட முறையை விபரிக்கையில் ; விடத்தல்தீவு முஸ்லிம்களில் மிகப் பெரும்பான்மையானோர் (சுமார் 70 சதவீதமானோர்) புத்தளம் நகருக்கு வந்தார்கள். ஆரம்பத்தில் இவர்களுக்குப் புத்தளம் நகரத்தின் சாஹிராக் கல்லுாரியில் அபயம் கொடுக்கப்பட்டது. ஏறக்குறைய ஒரு வாரத்திற்குப் பின்னர் இவர்களில் ஒரு பகுதியினர் கரம்பைக்கும், வேறு சிலர் கொத்தாந்தீவுக்கும் மற்றும் சிலர் நுரைச்சோலைக்கும் செல்ல வேறு சிலர் புத்தளம் நகரத்திலேயே தங்கத் தீர்மானித்தார்கள்.
பெரியமடு அகதிகள் புத்தளத்தில் பாடசாலை ஒன்றில் ஒருகிழமை தங்கிவிட்டு, பின்னர் புத்தளம் நகரம், விருதோடை,கரம்பை, பூலாச்சேனை, கனமூலை, கொத்தாந்தீவு மற்றும் புளிச்சாக்குளம் போன்ற இடங்களில் அமைக்கப்பட்ட அகதி முகாம்களில் வாழச் சென்றார்கள்.
முல்லைதீவு நகர அகதி முஸ்லிம்களில் ஏறக்குறைய 35 சதவீதமானோர் புத்தள நகரத்திலும், 40 சதவீதமானோர் கற்பிட்டியிலும் வந்து தஞ்சமடைந்தனர். விரிவாக நோக்கு கையில் அவர்கள் தஞ்சமடைந்த பிரதேசங்களாக; ஆலங் குடா, நுரைச்சோலை, நல்லாந்தழுவை, கடையாமோட்டை, விருதோடை, கனமூலை, சமீராகம மற்றும் பெருக்குவட்டான் ஆகிய மரதேசங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 1990 ஆம் ஆண்டு ஒக்டோபரில் இவ்வாறான நிகழ்வு நிகழ முன்னரே, 1990 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முல்லைதீவு முஸ்லிம் மக்கள் பெருமளவில் அகதிகளாக தம் சொந்த பிரதேசத்தை விட்டு வெளியேறி வந்த போது இம்மக்களுக்கு அபயமளித்த இடங்களில் ஒன்று புத்தள மாவட்டத்திற்குரிய ஆலங்குடா முஸ்லிம் கிராமமாகும். பெருந்தன்மையும், பரஸ்பர ஒற்றுமையும் கொண்ட ஆலங்குடா முஸ்லிம்கள் தமது கிராமச் சூழலில் முஸ்லிம் அகதிகளுக்கு முகாம் அமைப்பதற்கு அனுமதி வழங்கியதோடு அகதிகளின் நிவாரண வேலைகளிலும் நேரடியாக ஈடுபட்டு உதவி செய்தார்கள்.
1990 ஆம் ஆண்டு ஜுலையில் இருந்து ஒக்டோபர் கடைசிப் பகுதிவரை முல்லைத்தீவைச் சேர்ந்த முஸ்லிம்கள் மாத்திரமே இப்பிரதேசத்தில் அகதிகளாக வாழ்ந்து வந்தமை தெளிவாக்கப்படுகின்றது. அதே வருடம் ஒக்டோபர் இறுதிப்பகுதியில் புத்தளம் மாவட்டத்தில் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இக்காலத்தில் ஆயிரக்கணக்கான வடமாகாண முஸ்லிம்கள் அகதிகளாக புத்தளம் மாவட்டத்திற்கே அபயம் தேடி வந்தார்கள். இவர்களில் பலர் வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்திலிருந்து கடல் வழியாக கற்பிட்டிக்கும், மற்றவர்கள் தரைவழியாக புத்தளம் மாவட்டத்தின் கரைத்தீவு, புத்தள நகரம், புத்தளத்தின் தெற்கு பிரதேசங்களுக்கும் வரத் தொடங்கினர்.
புத்தளம் நோக்கி வந்த அகதி வெள்ளத்தினால் இப்பிரதேசம் நிலை குலைந்தது. ஆயிரக்கணக்கில் வந்த அகதிகளுக்கு அபயம் கொடுப்பதற்காக பாடசாலைகள், பள்ளிவாயில் வளவுகள், மத்ரசாக் கட்டடங்கள் போன்ற இடங்களில் தற்காலிக அபாயம் கொடுக்கப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியது. மேற்குறித்த கட்டடங்கள் அகதிகளின் உறைவிட வசதிக்குப் போதாமல் போனபோது தனியார் வீடுகளும் ஏனைய பொதுக் கட்டடங்களும் இந்நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியது. இவ்வாறு புத்தளம் மாவட்டத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்ந்த புத்தளம், கற்பிட்டி, முந்தல், வண்ணாத்திவில்லு போன்ற உதவி அரசாங்க பிரிவுகளின் பாடசாலைகள், வணக்கஸ்தளங்கள், பொதுக்கட்டங்கள் மற்றும் தனியார்வீடுகள் முழுமையாக முஸ்லிம் அகதிகளைப் பரிபாலிப்பனவாக மாற்றியமைக்கப்பட்டன.
மற்றுமொரு ஆய்வின் படி, "புத்தளம் வந்த அகதிகளில் பலர் கற்பிட்டிப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆலங்குடா முஸ்லிம் கிராமத்திற்கும் அபயம் தேடி வந்தார்கள். இவ்வாறு வந்தவர்களில் வடமாகாணத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் உள்ளடங்குவர். இதில் முல்லைத்தீவு முஸ்லிம்களும் மன்னார் மாவட்டத்தின் முசலிப் பிரதேச முஸ்லிம்களும் எண்ணிக்கை ரீதியாக அதிகமாக காணப்பட்டார்கள். 1990 ஆம் ஆண்டு ஜனவரியில் ஏறக்குறைய 5000 முஸ்லிம் அகதிகள் அபயம் தேடி ஆலங்குடா முஸ்லிம் கிராமத்திற்கு வந்திருந்தார்கள்." என கூறப்படுகின்றது. ஏனைய கிராம முஸ்லிம் அகதிகளான; இலந்தை மோட்டை முஸ்லிம்கள் கரம்பை மீளமைவுக் குடியேற்றத்திலும். ஆண்டான்குள முஸ்லிம்கள் அக்கரை வெளி, (உளுக்காப்பள்ளம்) ஹூஸைனியா புரம், றகுமத்புரம் ஆகிய இடங்களிலும், நொச்சிக்குள முஸ்லிம்கள் நுரைச்சோலையில் கொய்யாவாடி சொந்த குடியேற்ற திட்டத்திலும் அகதிகளாக வாழ்ந்ததாக கூறப்படுகின்றது.
1991 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் முஸ்லிம்களின் அகதி வாழ்க்கையை பராமரிக்கும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்டது. மாந்தை-நானாட்டான் முஸ்லிம் அகதிகள் சில முகாம்களில் கிராம உறவினர்களுடன் கூட்டாகவும், தனியாக்கப்பட்டும் வேறு பல கிராம, பிரதேச, மாவட்ட முஸ்லிம் அகதிகளுடன் சேர்ந்தும் தமது முகாம் வாழ்க்கையைத் தொடங்கினார்கள். மாந்தை - நானாட்டான் முஸ்லிம்களின் அகதி வாழ்க்கையில் இவர்களுக்கு மிகவும் கரிசணை யோடு உதவி செய்த புத்தள மக்கள் மீண்டும் மீண்டும் நினைவு கூறத்தக்கவர்களாவர்கள். இதைப்போன்றே விடத்தல் தீவு, பெரியமடு முஸ்லிம்கள்,புத்தளம் மாவட்டத்திற்கு அகதியாகவந்த போது அங்கு வாழ்ந்த புத்தள மக்கள் அகதிகளுக்கு உணவளித்து, உறைவிடமளித்து, ஆறுதல்கூறி அரவணைத்தார்கள். அகதிகளாக வந்தோரை வாழ் வைக்க புத்தள மண்ணும் புத்தள மக்களும் பெரும் பங்காற்றியமை நன்றாக தெளிவு படுத்தப்படுகின்றது. இருப்பினும் அகதிகள் பல்வேறு இன்னல்களை எதிர் நோக்கியமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அகதிகளுக்கான தற்காலக குடிசைகள் அமைப்பதற்கும், அகதி முகாம்களில் வாழ்ந்த மக்களுக்கு நீர், மலசலகூட வசதிகளை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கமும், அரசசார்பற்ற நிறுவனங்களும் உதவி செய்தன. இவ்வுதவிகள் அக்கால கட்டத்தில் அகதிகளுக்கு மிக அத்தியவசியமானவையாக இருந்தன. இவ்வாறான உதவிகளை பெற்றுக் கொண்டாலும் கூட பல முகாம்கள் போதிய நீர், மலசலகூட வசதிகளைப் பெற்றிருக்கவில்லை. உரிய காலத்தில் பொருத்தமான குடிசை கட்டும் பொருட்கள் வழங்கப்படா மையினாலும் பாரிய கஷ்டங்களுக்கு உள்ளாயினர். உதாரணமாக பெரியமடு மக்கள் வாழ்ந்த விருதோடை அகதி முகாம்களில் போதிய கிடுகு, தளபாடங்கள் கிடைக்காமையால் ஒரு ஓலைக்குடிசையில் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் நெருக்கமாக வாழ வேண்டிய நிலையிலும் ஒரு மலசலகூடத்தை நூற்றுக்கணக்கானவர்கள் பாவிக்க வேண்டிய நிலையிலும் இருந்துள்ளனர்.
அகதிகளை பராமரிக்கும் நோக்கில் உணவு நிவாரணம் அரசால் வழங்கப்பட்டது. அரசாங்கம் 05 அல்லது அதற்கு மேற்பட்ட அகதிகுடும்பம் ஒன்றிற்கு மாதாந்தம் 1000 ரூபா பெறுமதியான உலர் உணவு நிவாரணத்தை வழங்கியது. உண்மையில் இவ்வுணவு நிவாரணம் அகதிகளை பட்டினியில் இருந்து பாதுகாத்தாலும் பற்றாக்குறையான ஊட்டச்சத்துள்ள வழங்கலால் போசாக்கின்மை, நோய்கள் என்பவற்றில் இருந்து அகதிகளைப் பாதுகாக்க முடியாது போயிற்று. இவ்வாறு அகதிகள் முகங்கொடுக்கும் இன்னல்களை தம்மாள் இயன்றளவு குறைப்பதற்கு உதவிக்கரம் நீட்டி புத்தள மக்கள் அரவணைத்தார்கள். அதாவது அகதிகளுக்கு கிடைக்கும் உலர்உணவுகளில் மேலதிகமானவற்றை வீணாக்காது அவற்றை பண்டமாற்று முறைப்படி தாம் பெற்று அகதிகளுக்கு தேவைப்படும் உணவு பண்டங்களை அப்பிர தேச மக்கள் கொடுத்துதவினோர் மற்றும் அப்பிரதேச மக்கள் தங்கள் தோட்டங்களில் விளையும் மரக்கறிகளை வாரிவழங்கி அகதிகளுக்கு துணைநின்றனர். மற்றும் தொழில் வாய்ப்புக்களை அகதி களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தும் உதவினார்கள்.
மேலும் அகதிகளின் முகாம் வாழ்க்கையை நோக்குகையில், ஆய்வுகளின்படி; புத்தள மாவட்டத்தில் 150இற்கும் மேற்பட்ட முகாம்கள் காணப்பட்டதாக கூறப்படுகின்றது. முஸ்லிம்களின் அகதி வாழ்க்கை பற்றி சரியாக அறிந்து கொள்ள இம்மக்கள் வாழ்ந்த முகாம்கள் பற்றியும் அதன் வசதிகள் பற்றியும் அறிவது அவசியமாகும். அகதி முகாம் என்பது இனப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சொந்த இடங்களை விட்டு வெளியேறிய மக்களுக்கு அரசு, அரசசார்பற்ற. நிறுவனங்களினால் தற்காலிகமாக அமைத்துக கொடுக்கப்பட்ட வாழ்விடமாகும். பல முகாம்கள் இடப்பற்றாக்குறையால் பொருத்தமான குடியிருப்புக்கான நிலமின்மையால் நெருக்கமாகவும் பொருத்தமற்ற சுற்றுச் சூழலாலும் நெருக்கமான குடிசைகளைக் கொண்டிருந்தமையாலும் அதிகமாகப் பாதிக்கப்பட்டன. இப்பாதிப்புகளில் அகதிமக்கள் உடல் ஆரோக்கியரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டார்கள்.
மாந்தை - நானாட்டான் முஸ்லிம்கள் வாழ்ந்த ஏறக்குறைய 50க்கு மேற்பட்ட முகாம்களில் பெரியமடு, விடத்தல்தீவு முஸ்லிம்கள் வாழ்ந்த முந்தல் பிரதேச முகாம்களை உதாரணமாக நோக்குவோம். 1991 ஆண்டிலிருந்து 1995 ஆம் ஆண்டு வரை புத்தளம் மாவட்ட முந்தல் பிரதேசத்தில் 44 சிறிய, பெரிய முகாம்கள் காணப்பட்டன. இவற்றில் விருதோடைப் பகுதியில் 12 முகாம்கள் அமைவுற்றிருந்தன. விருதோடையில் அக்காலத்தில் ஏறக்குறைய 600 குடும்பங்கள் அகதிகளாக வாழ்ந்தன. இப்பிர தேசத்தில் காணப்பட்ட அகதி முகாம்கள் சூழற் பிரச்சனை கல்வி பிரச்சனைகளினால் பாதிப்புக்கு உட்பட்டிருந்தன.
ஆயினும் இம்முகாமைச் சுற்றிக் காணப்பட்ட சமூகச் சூழல் அகதிகளுக்கு உறுதுணையாக இருந்தது. இச்சூழலில் வாழ்ந்த உள்ளூர் மக்கள் அகதிகளின் நலனில் அக்கறை காட்டினர். தங்களுடைய பள்ளிவாயில், மத்ரசா போன்ற சமய நிலையங்களிலும், பாடசாலை, சனசமூக நிலையங்கள் போன்ற பொதுக்கட்டிடங்களிலும் அகதி முஸ்லிம்களுக்குச் சமஉரிமை கொடுத்து கௌர வித்தார் கள்.
எனினும் துரதிஷ்டவசமாக இம்முகாமின் பௌதீகச் சூழல் மக்கள் வாழ்க்கைக்குப் பொருத்தமானதாக அமைக்கப்படவில்லை. தாழ்நிலமான இம் முகாமின் (விருதோடை) கிழக்கெல்லையாக உவர்நீரோடை காணப்பட்டது. இதனால் மழை காலங்களில் நீரோட்டம் அதிகரிக்கும் போது இம்முகாமில் பெரும்பலான குடிசைகள் வெள்ளத்துள் மூழகின. வெள்ள நீர்மட்டம் அதிகம் உயராத போது நிலக்கசிவினாலும் சுற்றுப்புறப் பள்ளங்கள், கேணிகளில் நீர் தேங்கி நிற்பதாலும் வதிவிடப் பிரச்சனைகள் இக்காலங்களில் அதிகரித்தன. மேலும் மலேரியா, வயிற்றுளைவு போன்ற நோய்களும் அதிகரித்தன. "பட்ட புண்ணிலே படும்"என்றவாறு மென்மேலும் . அகதிகளுக்கு ஏற்படும் இன்னல்களை கண்டு அப்பிரதேச மக்கள் மிகவும் மனம் வருந்தினர். மற்றும் பிரதேச வைத்தியர்கள் மூலம் இலவச மருந்துகளும் அளித்து உதவினார்கள்.
மேலும் அகதிகள் எதிர்நோக்கிய பிரச்சினைகளாக; பற்றாக் குறையான நிவாரணம், தொழிலின்மையால் பல விதமான பொருளாதார, கல்வி, உளவியல் பாதிப்புக்கு உள்ளானார்கள். போஷாக்கின்மை அகதிகள் மத்தியில் காணப்பட்ட பொதுவான பிரச்சனையாகும் இதனால் குழந்தைகளும், கர்ப்பிணித் தாய்மார்களும், வயோதிபர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். பொருத்தமான கல்வியின்மை மற்றுமொரு பிரச்சினையாகும். கரம்பை, மெல்சிரிபுர, பூலாச்சேனை போன்ற பிரதேசங்களில் வாழ்ந்த மாந்தை-நானாட்டான் அகதிகள் அதிகம் பாதிக்கப்பட்டார்கள். அது மட்டுமன்றி அகதிகள் வாழ்கின்ற இடங்களுக்கு அருகில் காணப்பட்ட உள்ளூர் பாடசாலைகளில் அகதி மாணவர்களை கட்டிட, தளபாட, ஆசிரியர் பற்றாக்குறையினால் அனுமதிக்கத் தயங்கினர். இதனால் அகதி மாணவர்களின் கல்வி மிகவும் பாதிகப்பட்டதால் அப்பிரதேச மக்கள் மிகவும் வருத்தப்பட்டதுடன். மாந்தை - நானாட்டான் முஸ்லிம் அகதிகள் வாழ்ந்த விருதோடை, புத்தள நகரம்,கொத்தான் தீவு போன்ற பாடசாலை களில் அகதி மாணவர்களுக்கு பி.ப 2.00 மணியிலிருந்து பாடசாலை ஒழுங்கு பி.ப 5.00 மணிவரை மாலை நேரத்தில் செய்து கொடுக்கப்பட்டது. எவ்வாறாயினும் அகதிகளுக்கு கல்வியில் இருந்து ஆர்வமானது இத்தகைய வசதியின்மையால் பாதிக்கப்பட்டது.
மேலும், அகதிகள் தமது உற்றார் உறவினார், ஊரவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு புதிய சூழலில் வாழ்ந்தமையானது, இவர்கள் அகதி வாழ்க்கையில் அனுபவித்த துன்பங்களிலெல்லாம் சிகரம் பொன்று காணப்பட்டது. சொந்த இடத்தில் சிறு எண்ணிக்கையில் மிகக் கூட்டுறவுடன் வாழ்ந்த இப்பிரதேச முஸ்லிம்கள்
தொடர்பற்ற 50இற்கும் மேற்பட்ட முகாம்களில் உற்றார், உறவினர்,ஊரவர் துணையின்றி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவ்வாறு இருந்தும் பல சிரமங்களுக்கு மத்தியில் இம்மக்கள் மேற்கூறியோரின் இன்பங்களிலும். துன்பங்களிலும் பங்கு பற்றி வந்தார்கள். தொடர்ச்சியாக தமது சொந்தப் பிரதேசத்தில் காணப்பட்ட சமூக சூழல் இவர்களை ஈர்த்துக் கொண்டே இருந்தமையால் பின்னர் உறவினர்களை நோக்கிய இடம் பெயர்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கவொரு விடயமாக காணப்படுகிறது.
அகதியாக்கப்பட்டு தற்காலிக வாழ்விடம் கிடைக்கப்பெற்ற காலத்திலிருந்து அகதிகள் தமக்குப் பொருத்தமான சமூக வாழ்விட சூழலை நோக்கி இடம் பெயர்த்து வாழ முயற்சித்து வந்தார்கள். இவ்வாறான இடப் பெயர்வு முயற்சியில் உறவினர்கள் வாழ்ந்த இடத்தினை நோக்கி இடம் பெயர்ந்து செல்ல வேண்டும் என்ற ஆர்வம் அகதிகள் மத்தியில் காணப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக அகதிகளின் அவ்வாறான சுதந்திரமான இடப்பெயர்வை நேரடியாகவும், மறைமுகமாகவும் அரசு கட்டுப்படுத்தி வந்தது. இச் சூழ்நிலையிலும் மாந்தை-நானாட்டான் பிரதேசத்தைச் சேர்ந்த பல கிராமத்தவர்கள் பொருத்தமான வாழ்விடம் தேடி, தொடர்ச்சி யாக இடம் பெயர்ந்து கொண்டிருந்தனர். இவ்வாறான இடம் பெயர்ச்சிகள் புத்தள மாவட்டத்தை நோக்கியும், புத்தள மாவட்டத்திற்குள்ளும் இடம்பெற்றன. உதாரணமாக குருநாகல் மாவட்ட மெல்சிரி புர, கெகுனு கொல்ல கிராமங்களில் வாழ்ந்த விடத்தல் தீவைச் சேர்ந்த முஸ்லிம் அகதிகள் புத்தளம் மாவட்டத்தின் ஹுஸைனியாபுர கிராமத்திற்கு (உளுக்காப்பள்ளம்) இடம் பெயர்ந்து வந்தனர்.
முகாம்களுக்கிடையிலான அகதிகளின் இடப் பெயர்ச்சியால் பல நடைமுறைச் சிக்கல்கள் காணப்பட்டன.முகாம்கள் அவை அமைக்கப்பட்ட போது இடமின்மைப் பிரச்சினையை எதிர் நோக்கி மிக நெருக்கமாகக் குடிசைகள் அமைவுற்ற நிலையில் காணப்பட்டன. இம்முகாம்களில் நீர், மலசலகூடம் மற்றும் ஏனைய அடிப்படை வசதிகள் மட்டுப் படுத்தப்பட்டவையாக இருந்தன. இச்சூழ்நிலையில் புதிய அகதிகளின் வருகை ஏற்கனவே அங்கு வாழ்ந்தவர்களால் வரவேற்கப்படவில்லை. உறவினர்களுடன் ஒன்றாக வாழ விரும்பி இடம் பெயர்ந்துவர நினைத்த அகதிக் குடும்பங்களுக்கு இது ஒரு பெரும் பிரச்சினையாகக் காணப்பட்டது. இப்பிரச்சினை தனியொரு பிரச்சினையாக அல்லாமல் குடும்ப பிரச்சினையாகவும் காணப்பட்டது. இப்பிரச்சினைச்குத் தீர்வு காண மாந்தை-நானாட்டானைச் சேர்ந்த குடும்பங்கள் மற்றொரு வகையில் முயற்சித்தன. அம்முயற்சிகளில் ஒன்று உறவினர், குடும்பங்கள் ஒன்று சேர்ந்து புதிய காணியொன்றைத் தேடி ,அங்கு ஒரு சிறிய முகாமை அமைத்து உற்றார் உறவினருடன் கௌரவமாக வாழ்வ தாகும். இந்த வகையில் பல புதிய முகாம்கள் உருவாகத் தொடங்கின. இதற்கு உதாரணமாக தில்லையடியிலுள்ள அமைக்கப்பட்ட முகாமைக் குறிப்பிடலாம்.
1995 ஆம் ஆண்டுக் காலகட்டம் மாந்தை -நானாட்டான் முஸ்லிம் அகதிகளைப் பொறுத்தளவில் முக்கியமானதொரு கால கட்டமாகும் இக்காலத்தில் பல குடியிருப்பு மாற்றங்கள் இம்மக்கள் மத்தியில் ஏற்பட்டன. அதில் முக்கியமானது புதிய இடத்தில் சொந்தமாகக் காணி வாங்கி உற்றார், உறவினர், ஊரவரோடு வாழ்வதற்கு இம்மக்கள் எடுத்த முயற்சியாகும். இம்முயற்சியின் பிரதிபலனாகப் புத்தளம் மாவட்டத்தில் உளுக்காப்பள்ளம் என்ற இடத்தில் சொந்தக் குடியேற்ற மொன்றைப் பெரியமடு, விடத்தல்தீவுக்கிராம மக்கள் ஏற்படுத்த முயற்சித்தார்கள். இம்முயற்சி 1995 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் எடுக்கப்பட்டது. பாலாவி - கற்பிட்டி பிரதான பாதையில் பாலாவிச் சந்தியில் இருந்து கிட்டத்தட்ட
2 மைல் தொலைவில் உளுக்காப்பள்ளம் அமைந்துள்ளது. இங்கு ஏறக்குறைய 40 ஏக்கர் காணியை சொந்தமாக வாங்கி ஒரு குடும்பத்திற்கு 20 பேர்ச்சு என்ற அடிப்படையில் பிரித்துக் கொடுத்து அங்கு தமது அகதி வாழ்க்கையைத் தொடர முயற்சி எடுத்தார்கள்.
அதே காலகட்டத்தில் இவ் உளுக்காப்பள்ளக் காணியுடன் தொடர்ச்சியாகக் காணப்பட்ட ஏறக்குறைய 25 ஏக்கர் காணியை விடத்தல்தீவு முஸ்லிம்கள் சொந்தமாக வாங்கி அவற்றைத் தமது உற்றார், ஊரவர்கள் மத்தியில் பங்கிட்டுத் தமது சொந்தக் குடியேற்றத்தை அமைத்துக் கொண்டார்கள். இதே போல புத்தளம் நகருக்குத் தெற்காகத் தில்லையடி என்ற பிரதேசத்தில் சிறிய அளவில் மாந்தை-நானாட்டான்பிரதேச முஸ்லிம்களால் சொந்தக் குடியேற்றம் அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மேற்குறிப்பிட்ட சொந்தக் குடியேற்றங்களுக்குள், சிதறி வாழ்ந்த மாந்தை - நானாட்டான் முஸ்லிம்கள் இடம் பெயர்ந்து வந்தார்கள். இதில் உளுக்காப்பள்ள சொந்தக்குடி யேற்றத்தை எடுத்துக் கொள்கின்ற போது புத்தள நகரம், கனமூலை, பூலாச் சேனை, கரம்பை, புளிச்சாக்குளம் ஆகிய இடங்களில் வாழ்ந்த பெரியமடு முஸ்லிம்கள் பெருமளவில் இச்சொந்தக் குடியேற்றத்திற்கு இடம் பெயர்ந்தார்கள். விடத்தல்தீவு மூஸ்லிம்கள்; உளுக்காப் பள்ளம், தில்லையடி போன்ற பிரதேசங்களில் அமையப்பெற்ற சொந்த குடியேற்றங்களுக்கு இடம் பெயர்ந்தனர். கொத்தான்தீவு, விருதோடையில் வாழ்ந்த விடத்தல்தீவு முஸ்லிம்கள்; தில்லையடிக்கும், கரம்பை, பூலாச்சேனையில் வாழ்ந்த விடத்தல்தீவு முஸ்லிம்கள்; உளுக்காப்பள்ளத்திற்கும் ,அதே போல குருநாகல் சியம்பளாகஸ் கொட்டுவ, கெகுனுகொல்ல மக்கள்; உளுக்காப்பள்ளத்திற்கும், பாணந்துறை, கொழும்பு ஆகிய இடங்களில் வாழ்ந்த விடத்தல்தீவு முஸ்லிம்கள்; உளுக்காப்பள்ளத்திற்கும்இடம் பெயர்ந்தனர்.
அகதி முஸ்லிம்களின் அண்மைக்கால மாற்றங்களை அறிந்து கொண்ட அரசு,அகதியாக்கப்பட்ட ஆறு வருடங்களுக்குப் பின்னர், முஸ்லிம் அகதிகளின் அகதி வாழ்க்கைக்கு மாற்றுத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த முற்பட்டது. இத்திட்டத்தின் மூலம் வட மாகாணத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை அவர்கள் அகதிகளாக வாழ்கின்ற பிரதேசங்களில் நிரந்தரமாகக் குடியேற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு இம் மக்களை அவ்வப்பிரதேசங்களில் நிரந்தரமாகக் குடியேற்றுவதன் மூலம் இம்மக்களின் அகதிப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவது அரசின் நோக்கமாகக் காணப்பட்டது.
மாந்தை - நானாட்டான் முஸ்லிம்களால் ஏற்படுத் தப்பட்ட சொந்தக் குடியேற்றங்களில் முக்கியமானதொன்று உளுக்காப்பள்ளச் சொந்த குடியேற்றமாகும். இக்குடியேற்றத் திட்டத்தில் ஏறக்குறைய அன்று 2000 மக்கள் குடியிருப்பு அடிப்படை அற்ற நிலையில் வாழ்ந்து வந்தார்கள். மற்றும் அன்றைய நிலையில் தொழில் வாய்ப்பும் அகதிகளுக்கு உரியவாறு அமையவில்லை. ஆயினும் உளுக்காப்பள்ளக் குடியிருப்பை விட வசதிகள் குறைந்த நிலையில் தில்லையடி, கரம்பை,றகுமத்புரம் ஆகிய மாந்தை - நானாட்டான் முஸ்லிம் களின் சொந்தக் குடியேற்றங்கள் காணப்பட்டன. இதைவிட இலந்தை மோட்டை, வட்டக்கண்டல், ரசூல் புது வெளி, நொச்சி க்கும் ,பூவரசன்குளம், சொர்ணபுரி, ஆண்டான்குளம், கட்டைக்காடு. மினுக்கன், விளாங்குளி போன்ற மாந்தை - நானாட்டான் முஸ்லிம் கிராமங்களின் முஸ்லிம்கள் தொடர்ந்து அகதி முகாம்களில் வாழ்ந்துள்ளதுடன், சொந்த முயற்சியில் ஒரு மாற்று வாழ்க்கைமுறையை ஏற்படுத்திக் கொள்ள முடியாத நிலையிலும் காணப்பட்டுள்ளனர். ஆகவே இவ்வாறு மீள் குடியேற்ற திட்டத்தில் பலவீனமான நிலையில் காணப்பட்ட பிரதேசங்களுடன் உளுக்காப்பள்ளம்,தில்லையடி, கரம்பை, 25 ஏக்கர், றகுமத்புரம் போன்ற புத்தள மாவட்டத்திற்குரிய மீள்குடியேற்ற பிரதேசங்களை ஒப்பிடுகையில் புத்தள மாவட்டத்தில் தஞ்சமடைந்த அகதிகள் புண்ணியவாதிகளாகவே காணப்படுகின்றனர்.
அதாவது புத்தள மாவட்டத்திற்கு வெறுங் கையுடன் அநாதாரப்பட்ட நிலையில் வந்த அகதிகள் இன்று பல அபிவிருத்தியுடன் கூடிய வாழ்க்கையை வாழ்ந்த வருகின்றனர். இவர்களுக்கு சொந்தக் குடியேற்றம் நிறுவதற்கு, புத்தள மாவட்ட ஊர்மக்களே தங்களுடைய காணிகளை குறைந்தவிலையில் விற்று ஒவ்வொரு குடும்பங்களுக்கும் பிரித்துக் கொடுத்து உறுதுணையாக நின்றனர். இந்தவகையில் இன்றும் என்றும், வந்தோரை வாழவைக்க புத்தள மண்ணும்,அம்மக்களும் பட்ட அர்ப்பணிப்புக்களை மறவாதே நன்றியுள்ளத்துடன் கட்டுரைக்கு முடிப்புரை வழங்கும் இவள் அகதிகுடும்பங்களின் பேரப்பிள்ளை.
Hadheeja Faizal