24/07/2025
போதை எனும் கொடிய நோயிலிருந்து எமதூரை காக்க அனைவரும் ஒன்றிணைவோம்!
எமது சம்மாந்துறை பகுதியில் அண்மைக்காலமாக மிக அதிகளவில் போதைப்பொருள் விற்பனையும், அதன் பயன்பாடும் விரைந்து பரவி வருவது நாம் அனைவரும் அறிந்த விடயமாகும்.
இது ஒரு சாதாரண சமூகப் பிரச்சனை அல்ல, உண்மையில் எமது சமுதாயத்தின் வேரையே பலவீனப்படுத்தக்கூடிய மிகப் பெரிய அபாயமாகும்.
போதைப்பொருள் விற்பனையும், அதன் அடிமைத்தனமும் இளைஞர்களை கல்வி, வேலைவாய்ப்பு, குடும்ப நலன் என அனைத்திலிருந்தும் விலக்கி,
இளம் சமுதாயத்தின் எதிர்காலத்தை முற்றிலும் அழிக்கக்கூடியதும், எமதூரின் எதிர்காலத்தை இல்லாமலாக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது எம் அனைவரின் கடமையாகும்.
எமதூரின் அரசியல் தலைவர்கள், மதத்தலைவர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் இணைந்து பாதுகாப்புப் படையின் உதவியுடன் இதனை முற்றாக அழிக்க வேண்டியதானதொரு நிலையில் இருக்கின்றோம்.
அத்தோடு, இது வெறும் சட்டபூர்வ நடவடிக்கைகளால் மட்டுமே தீரும் பிரச்சனையல்ல. சமூக விழிப்புணர்வுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இது எமதூரின் எதிர்காலம் குறித்த போராட்டம்!
இப்போது நாம் கண்விழிக்காவிட்டால், நாளை நாம் இளைஞர் சமூகத்தையே இழக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவோம்.
அத்தோடு இந்நிலை தொடருமானால், எமதூரின் அடையாளமே அழிந்துவிடும்.
எனவே, இளைஞர்களை பாதுகாப்பதற்கும், போதை ஒழிப்பிற்கான ஒரு கூட்டு முயற்சியை உருவாக்குவதற்கும், தக்க நடவடிக்கைகளை உடனடியாக எடுப்போம்.
ஊருக்காக நாமும் ஒன்று சேர்வோம். போதைக்கு எதிராக செயல்படுவோம்!
சமூகப் பொறுப்புடன்,
ஐ.எல்.எம்.நாஸிம்
( ஊடகவியலாளர்)
சம்மாந்துறை.