
21/07/2025
https://youtu.be/1GH7SItaiYI?si=7dvF3ybRN7qEfgtH
கொழும்பு கொம்பெனித் தெரு அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தங்கத் தேர் திருவிழா...
இலங்கைத் திருநாட்டின் தலைநகரமாக விளங்கும் கொழும்பு மாநகர் கொம்பனித்தெருவில் வீற்றிருந்து வேண்டுவோர்க்கு வேண்டுவன அருள்பாலித்துவரும் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத அருள்மிகு சிவசுப்பிரமணியப்பெருமானின் வருடாந்த மஹோற்சவம் நிகழும் விசுவாவசு வருடம் ஆனித்திங்கள் 27ம் நாள் (11-07-2025) வெள்ளிக்கிழமை காலை பூராட நட்சத்திரமும், சித்தயோகமும் கூடிய சுபமுகூர்த்த வேளையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து காலை, மாலை உற்சவங்கள் நடைபெற்று கார்த்திகை தினமான ஆடித்திங்கள் 4ம் நாளாகிய நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ ஆறுமுகப்பெருமான் தங்கத்தேரில் வெளிவீதி வலம் வந்து அடியார்களுக்கு அருள்பாலித்தார்...
கொழும்பு மாநகரில் தனித்துவமிக்க தங்கத்தேரை தன்னகத்தே கொண்ட வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமிக்கு மகோத்சவ குருவும் ஆலய பிரதம குருவுமாகிய "சிவாலய பிரதிஷ்ட கலாநிதி" சிவ ஸ்ரீ வரத அரவிந் சிவாச்சாரியாரினால் ஸ்நபனாபிஷேகம், ஸ்தம்ப பூஜை மற்றும் வசந்த மண்டப பூஜை ஆகியவை செய்யப்பட்டு தங்கத்தேரிற்கு எழுந்தருளச் செய்யப்பட்டதோடு, தங்கத்தேரானது புனித யானை முன்செல்ல மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம் மற்றும் கேரள சண்டை மேள தாளம் முழங்க கொம்பனித்தெருவின் முக்கிய வீதிகளில் வெளி வீதியுலா வரச்செய்யப்பட்டது. இத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதுடன், அடியார்கள் அங்கப்பிரதட்சணம் செய்தும் அடி வழிபாடு செய்தும் பறவை காவடி மற்றும் அலகு குத்தியும், கற்பூர சட்டி ஏந்தியும், தேர் வடம் பிடித்தும், பஜனைகள் பாடிக் கொண்டு தேரோடு பக்திப் பரவசத்துடன் முருகப்பெருமானின் அரோகரா கோஷங்களை எழுப்பியவாரு தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியமையை காணக்கூடியதாக இருந்தது.
அத்துடன் நண்பகல் வேளையில் ஆலயத்தை தங்கத்தேர் வந்தடைந்ததுடன் சுவாமிக்கு பச்சை சாத்தி ஆலயத்தினுள் கொண்டு சென்று பிராயச்சித்த அபிஷேகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து அடியார்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டதோடு தங்கத்தேர் திருவிழா இனிதே நிறைவுபெற்றது.
கொழும்பு கொம்பெனித் தெரு அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தங்கத் தேர் திருவிழா...இலங...