26/02/2025
கடவுச்சீட்டு பெறுதல்:
சிறந்ததொரு வழிகாட்டிக் குறிப்பு
------------------------------------------------------------
கடவுச் சீட்டு அலுவலகத்தில் எனது அவதானத்தின் பிரகாரம் பின்வரும் விடயங்களை கருத்திற் கொள்வது புதிதாக பெறுவதற்கு அல்லது புதுப்பித்தலுக்கு சிறந்தது. வீணான சிரமத்தைக் குறைக்கும். ஏனெனில் நான் கடவுச் சீட்டை புதுப்பிக்க சென்ற தினம் பலமக்கள் விடயங்கள் புரியாமல் தடுமாறியதை அவதானிக்க முடிந்தது.
நீங்கள் முறையான முன் அனுமதியை பெற்றிருந்தால் உள்ளே கதவு இலக்கம் 2 ஊடாக பிரவேசிக்கமுடியும்.
நீங்கள் முறையான முன் அனுமதியை இனையதளம் ஊடாக பெற்றிருக்காமல் அவசர கடவுச் சீட்டைப் பெற , உங்கள் பயணத்துக்கான அவசர நிலையினை உத்தரவாதப்படுத்தும் ஆவணமொன்றினை கதவு இலக்கம் 1 இற்கு அருகமையில் அறையொன்றில் உள்ள உரிய உத்தியோகத்தரிடம் காண்பித்து அனுமதியை பெற்றபின்னர் , உள்ளே கதவு இலக்கம் 2 ஊடாக பிரவேசிக்கமுடியும்.
உரிய டோக்கன் இனை பெற சாதாரண சேவைக்கு 1ம் மாடியிலும் , ஒரு நாள் சேவைக்கு 2ம் மாடியிலும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் சிறப்பாக வழிகாட்டுவதால் உங்களுக்கு சிரமம் இருக்காது. மக்கள் அதிகமாக வருவதால் காத்திருக்கும் தாமதம் என்பதை தவிர்க்க முடியாதுள்ளது. உங்களுக்கு வழங்கப்படும் டோக்கன் இனை அதிகாரிகள் கேட்காதவிடத்து யாரிடமும் வழங்க வேண்டாம். இறுதிவரை வைத்திருக்கவும். பணத்தை செலுத்த இது அவசியம்.
இணையதளத்தில் பல்வேறு விண்ணப்பப்படிவங்கள் காணப்படுகின்றன. வலைத்தளத்தைப் பார்த்து சரியான விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்யவும். (மூன்று இடங்களில் கையொப்பமிடுவதை உறுதிசெய்யவும்).
உங்கள் தேசிய அடையாள அட்டையின் அசல் மற்றும் பிரதி . பிரதி விண்ணப்பத்துடன் இணைக்கப் பட்டிருக்க வேண்டும் . எண் அல்லது பெயரில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், தொடர்புடைய அதிகாரி உங்களுக்கு வழிகாட்டுவார். சேதமடைந்த அல்லது தெளிவற்ற தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டாம். தாமதங்களைத் தவிர்க்க உங்கள் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் முன் உங்கள் தேசிய அடையாள அட்டையைப் புதுப்பிக்கவும். காலை வேளையில் செல்வதால் அட்டையைப் புதுப்பிப்பதை தவிர்த்து அவ்வாறானா சிக்கல்கள் ஏற்படினும் அதே கட்டிடத்தில் 10ம் மாடியில் அமைந்துள்ள தேசிய அடையாள அட்டை அலுவலகம் ஊடாக அன்றைய தினமே தீர்த்துக் கொள்ளலாம்.
பிறப்புச் சான்றிதழ் - பிரதேச செயலகத்தால் சான்றளிக்கப்பட்ட பிரதி. சான்றிதழ் கடந்த ஆறு மாதங்களுக்குள் வழங்கப்பட்டிருந்தால் நல்லது. விண்ணப்பத்துடன் இணைக்கப் பட்டிருக்க வேண்டும்
உங்களிடம் முன்னர் கடவுச்சீட்டு இருந்தால், அசல் மற்றும் பிரதி இரண்டையும் கொண்டு வாருங்கள். பிரதி விண்ணப்பத்துடன் இணைக்கப் பட்டிருக்க வேண்டும் .
ஸ்டுடியோவிலிருந்து வழங்கப்பட்ட புகைப்பட சான்றிதழ் விண்ணப்பத்துடன் இணைக்கப் பட்டிருக்க வேண்டும் .
உங்கள் கடவுச்சீட்டில் ஒரு தொழிலைச் சேர்க்க விரும்பினால், உங்கள் உயர்கல்விச் சான்றிதழ் மற்றும் பிரதியைக் கொண்டு வாருங்கள். சமீபத்திய சேவை கடிதத்தின் பிரதியையும் இணைப்பது மேலும் உதவியாக அமையும் .சேவை கடிதத்தின் மூலப் பிரதி கைவசம் இருக்க வேண்டும். பிரதி விண்ணப்பத்துடன் இணைக்கப் பட்டிருக்க வேண்டும் .
திருமணத்திற்குப் பிறகு பெயர் மாற்றத்திற்கு, சான்றளிக்கப்பட்ட உங்கள் திருமணச் சான்றிதழை வழங்கவும். (பெண்கள்). விண்ணப்பத்துடன் இணைக்கப் பட்டிருக்க வேண்டும் .
விண்ணப்பதாரர் 16 வயதுக்குட்பட்டவராக இருந்தால், தாய் அல்லது தந்தையின் தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டின் பிரதியை இணைக்கவும். பிரதி விண்ணப்பத்துடன் இணைக்கப் பட்டிருக்க வேண்டும் .
பெற்றோர் விவாகரத்து பெற்றிருந்தால், விவாகரத்து சான்றிதழின் சான்றளிக்கப்பட்ட பிரதியை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் இணைக்கப் பட்டிருக்க வேண்டும் .
தேசிய அடையாள அட்டை தொலைந்திருந்தால் அது தொடர்பான பொலிஸ் அறிக்கை விண்ணப்பத்துடன் இணைக்கப் பட்டிருக்க வேண்டும் .
பணம் செலுத்திய பின்னர் வழங்கப்படும் பற்றுச் சீட்டு உங்கள் கடவுச்சீட்டைப் பெற அவசியமாகும்.
மேலும் விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்க்கவும்.
Thanks - Mohamed Jumaani