26/06/2025
வரலாற்றில் முஸ்லிம் மக்கள் மன்னிக்கவே முடியாத முனாஃபிக்குகளே மக்கள் காங்கிரஸின் தாஹீர், மாஹீர், காதர் ஆகியோர்-நாவிதன்வெளி முஸ்லிம்களுக்கு துரோகமிழைத்தது மரமும், மயிலும். - அபூபக்கர் நளீர் காட்டம்!
-:நூருல் ஹுதா உமர்:-
நாவிதன்வெளி பிரதேச சபை ஆட்சியமைப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.பி.நவாஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் நவாஸும் எங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறி முனாபிக் தனமாக நடந்து கொண்டார்கள்.
மட்டுமின்றி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரமுகர்களான எம்.ஏ.தாஹீர் எம்பி, உயர்பீட உறுப்பினர் எம்.ஐ.எம்.மாஹீர், மாவட்டத்தலைவர் காதர் ஆகியோரும் நாவிதன்வெளிக்கு முஸ்லிம் ஒருவர் உப தவிசாளராக வருவதைத்தடுத்து இப்பிரதேச முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்து முனாபிக்குகளாக நடந்து கொண்டார்கள் என நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஏ.நளீர் தெரிவித்தார்.
இன்று அவரது அலுவலகத்தில் வேட்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் சகிதம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,
அண்மையில் நடைபெற்ற நாவிதன்வெளி பிரதேச சபைத் தேர்தலில் முஸ்லிம் பிரதேசங்களிலிருந்து எனது தலைமையிலான சுயேட்சைக்குழு காற்பந்து சின்னத்தில் போட்டியிட்டு இரண்டு ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒரு ஆசனமுமாக மொத்தமாக நான்கு பிரதேச சபை உறுப்பினர்கள் முஸ்லிம்கள் சார்பில் தெரிவாகியிருந்தனர்.
கடந்த முறை ஏ.கே.சமட் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் போட்டியிட்டு இரண்டு ஆசனங்களைப்பெற்று இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஆதரவு வழங்கி பிரதேச சபையின் உப தவிசாளர் பதவியைப்பெற்று முஸ்லிம் மக்களுக்கு பல சேவைகளைச்செய்தார். உப தவிசாளராகவும் சிறிது காலம் பதில் தவிசாளராகவும் பதவி வகித்து நாவிதன்வெளி பிரதேசத்தில் வாழும் சுமார் 35 விதமான முஸ்லிம் மக்களைக் கௌரவப்படுத்தினார்.
சிற்றூர்களுக்காக பெரிய ஊர்களை
காவு கொடுக்க முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.தாகீர் தெரிவித்து எங்களின் ஊருக்கு அநியாயம் செய்துள்ளார்.
இது வரலாற்றுத்துரோகமாகும். இத்துரோகத்தை வரலாற்றில் எப்போதும் மன்னிக்க முடியாது. எதிர்வரும் மாகாண சபைத்தேர்தலில் சிற்றூர்கள் எல்லாம் இவர்கள் ஓரங்கட்டி தகுந்த பாடம் கற்பிக்க முன்வர வேண்டும்.
தமிழ் பிரதேச சபை உறுப்பினர்களை மட்டும் இணைத்து நாவிதன்வெளி பிரதேச சபையின் ஆட்சியை நிறுவ வேண்டுமென்ற நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள ஒரு முன்னாள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் இனவாத சிந்தனைக்கமைவாக தவிசாளரும், உப தவிசாளரும் தமிழர்களாகத்தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், முஸ்லிம் சமூகத்திலிருந்து ஒருவர் உப தவிசாளராகத்தெரிவு செய்யப்படுவதைத்தடுக்கும் ஈனச் செயலுக்கு ஆதரவு வழங்கி முஸ்லிம் மக்களுக்கு வரலாற்றுத்துரோகத்தை இழைத்த குறித்த பிரதேச சபை உறுப்பினர்கள் இருவருக்கும் இவர்களின் கட்சிகளுக்கும் அதன் தலைமைகளுக்கும் இன்னும் இதனுடன் தொடர்புடைய முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் இந்த இஸ்லாமிய சமூகம் எக்காலத்திலும், எச்சந்தர்ப்பத்திலும் மன்னிப்பு வழங்கக்கூடாது
தமிழ் சமூகத்தைச்சார்ந்த முன்னாள் தவிசாளரும் தற்போதைய பிரதேச சபை உறுப்பினருமான கௌரவ அ.ஆனந்தன் தலைமையிலான மூன்று பிரதேச சபை உறுப்பினர்கள் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மற்றும் முஸ்லிம் சமூகத்தைச்சேர்ந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஆகியோர் இணைந்து நாவிதன்வெளி பிரதேசத்தில் காலாகாலமாக ஒற்றுமையுடன் செயல்படும் தமிழ், முஸ்லிம் மக்களிடையே பிளவுகள், கசப்புணர்வுகள் ஏற்பட்டு விடக்கூடாது என்ற நன்நோக்கத்தின் அடிப்படையில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை உப தவிசாளராகத்தெரிவு செய்ய வேண்டுமென்ற நோக்கோடு மிகவும் அர்ப்பணிப்போடு செயற்பட்டு முஸ்லிம் மக்களின் அமோக ஆதரவால் வெற்றியீட்டிய என்னை உப தவிசாளர் பதவிக்கு பிரேரித்தார்கள்.
இத்தெரிவுக்காக நடாத்தப்பட்ட வாக்களிப்பில் போது சபையிலிருந்த நான்கு முஸ்லிம் பிரதேச சபை உறுப்பினர்களும் தமிழ்ப்பிரதேச சபை உறுப்பினர்கள் மூவருடன் இணைந்து எனக்கு வாக்களித்திருப்பார்களேயானால் இன்று முஸ்லிம் சமூகம் உப தவிசாளரைப்பெற்றிருக்கும்.
ஆனா, ல்மரம், மயில் கட்சிகளைச்சேர்ந்த இரண்டு பிரதேச சபை உறுப்பினர்களும் மாற்று சமூகத்தைச்சார்ந்த ஒருவருக்கு தங்களுடைய வாக்குகளை வழங்கியதன் காரணமாக இன்று எமது சமூகம் உப தவிசாளர் பதவியை இழந்திருக்கின்றது.
இது முஸ்லிம் சமூகத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளால் இழைக்கப்பட்ட மிகப்பெரிய வரலாற்றுத்துரோகம்.
வழமையாகவே தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாவிதன்வெளி பிரதேச சபையில், தவிசாளராக ஒரு தமிழ் சமூகத்தவரும் உப தவிசாளராக ஓர் முஸ்லிமும் வருவது வழமை. ஆனால், இம்முறை அவ்வழமை முஸ்லிம் கயவர்களால் அப்பட்டமாக ஒழிக்கப்பட்டுள்ளது.
நாவிதன்வெளி முஸ்லிம் மக்கள் எமது உரிமைகளையும் அதிகாரங்களையும் பெற்றுத்தருவார்கள் என்று யாரை இவ்வளவு காலமும் நம்பி வாக்களித்தார்களோ அதற்குப் பிரதிபலனாக ஓட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்திற்கே இந்த முஸ்லிம் தலைவர்கள் துரோகமிழைத்துள்ளனர்.
எமது நாவிதன்வெளி முஸ்லிம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அதியுச்ச அதிகாரம் இந்த உப தவிசாளர் பதவி அதுவும் இம்முஸ்லிம் தலைவர்களால் திட்டமிட்ட முறையில் இழக்கச்செய்யப்பட்டுள்ளது.
தனது சமூகத்தின் நியாயமான உரிமையை இன்னொரு சமூகத்திற்கு தாரை வார்த்த இவர்களை நாம் எப்படி நம்புவது.
நாவிதன்வெளி முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பறித்து, அவர்களின் நம்பிக்கையைச் சிதைத்த இந்தத் துரோகத்தை ஒரு போதும் மன்னிக்க முடியாது.
தங்களின் சுயநல அரசியல் இலாபங்களுக்காகச்செயற்படும் இந்தத் தலைவர்களையும் குறித்த பிரதேச சபை உறுப்பினர்களையும் மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் இவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்றார்.
இவ்வூடக சந்திப்பில் நாவிதன்வெளி பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஏ.கே.சமட் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.