23/08/2024
நேற்றொரு காணொலி பார்த்தேன். தமிழ் பொதுவேட்பாளர் திரு.பா.அரியநேத்திரன் அவர்கள் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவஞானம் சிறீதரன் அவர்களைச் சந்தித்து ஆசி பெறும் வீடியோ அது.
அடிப்படையில் தமிழரசுக் கட்சியினராகிய இருவரும் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளும் காட்சி. அதாவது தன் கட்சியின் தலைவரை சக உறுப்பினர் சந்திக்கும் காட்சி. மாண்பு மிகு மாணவன் ஒருவன் தான் ஆஸ்தான குருவை சந்தித்து ஆசி பெறும் காட்சி. இந்தக் காட்சியில் ஒளிர்ந்த மின்குமிழ்களுக்கு நடுவில், பல உண்மைகள் ஒளிர்ந்ததை அவதானித்திருப்பீர்கள். அவற்றில் சில.
1. என்னதான் பொதுவேட்பாளரான பொதுச்சபை கட்சிகளுக்கு வெளியே பொதுவேட்பாளரைத் தேடினாலும், இறுதியில் அது தமிழரசுக் கட்சியிடம் சரணடைந்துவிட்டது.
2. பொதுவேட்பாளர் விடயத்தில் பல தீர்மானங்களின் மையசக்தியாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவஞானம் சிறீதரன் இருக்கின்றார்.
3. உதாரணத்திற்கு, தமிழ் பொதுவேட்பாளர் திரு.பா.அரியநேத்திரன் உதிர்த்த வசனமொன்று முக்கியமானது. ”தமிழ் பொதுவேட்பாளருக்கான தேர்தல் சின்னமான சங்கினை தெரிவுசெய்தவர் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களே" ஆகவே பொதுவேட்பாளரை மட்டுமல்ல அவருக்கான சின்னத்தைக்கூட தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவஞானம் சிறீதரன் அவர்கள்தான் தீர்மானித்திருக்கிறார். ஒரு சின்னத்தை தெரிவுசெய்வதற்குக்கூட வலுவற்றதாகப் பொதுச்சபை இருந்திருக்கின்றது.
4. தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவஞானம் சிறீதரன் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியினூடாக நாடாளுமன்றத்திற்குள் காலடியெடுத்து வைத்தமை, பின்னர் தமிழரசுக் கட்சியில் சேர்ந்தமை, அதன் பின்னரான பரஸ்பர விமர்சனங்கள், விவாதங்கள் எல்லாவற்றையும் கடந்த காலத்தில் பார்த்திருக்கிறோம். தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவஞானம் சிறீதரன் அவர்கள் கூட கடந்த சில வருடங்களுக்கு முன்னர், ”ஈ.பி.ஆர்.எல்.எவ் அடித்த அடி இன்னும் வலிப்பதாக” எங்கேயோ குறிப்பிட்டிருந்தார். இப்படியாக இருதரப்பிற்குமிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், தமிழ் பொதுவேட்பாளர் விடயத்தின் தொடக்க கர்த்தா அல்லது அந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் என்ற தகவல் பல இடங்களிலும் பேசப்பட்டதொரு விடயம். அவரால் முன்னெடுக்கப்பட்ட ஒரு அரசியல் வேலைத்திட்டத்தின் பிரதான முடிவெடுப்பாளராகத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவஞானம் சிறீதரன் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்.
5. தமிழ் அரசியல் உளறலாளர்கள் தேசியப் பட்டியலுக்கூடாக நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து, படிப்படியாக முன்னேறி இன்று ஜனாதிபதி கதிரையையே பிடித்திருக்கின்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இராஜதந்திரக் கெட்டித்தனங்கள் பற்றி புளகாங்கிதப்பட்டுக்கொண்டிருக்க, அவரைவிட பன்மடங்கு இராஜதந்திர பேராற்றல் மிக்க தமிழ் அரசியல்வாதி ஒருவர் கிளிநொச்சியில் இருக்கிறேன் என்கிற செய்தியும் சொல்லப்பட்டுள்ளது.
- இவ்வளவு உண்மைகளும் மிளிர்ந்த இந்தக் காட்சியின் முடிவில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவஞானம் சிறீதரன் அவர்கள் எள்ளலோடு ஒரு வசனத்தை உதிர்வார். ”எங்கள் ஜனாபதியை வரவேற்கிறோம்” என்பதே அந்த வசனம். தமிழர் ஒருவர் இலங்கை திருநாட்டில் ஜனாதிபதியாக வரமுடியாது என்பது தமிழ் குழந்தைக்கும் தெரிந்த விடயம். இந்நிலையில், ஊடகங்கள் முன்னிலையில் அவர் உதிர்ந்த வசனத்தில் எள்ளல் தொனிப்பட்டது. அவர் இயல்பான போக்கில் அந்த வசனத்தை சொல்லியிருப்பினும்கூட ஊடகங்கள் முன்னிலையில், மக்கள் முடிவெடுக்கக் காத்திருக்கும் ஒரு விடயத்தை அவ்வாறாக பொறுப்புவாய்ந்த ஒருவர் சொல்லும்போது, பார்க்கின்றவர், இவர் விருப்பமில்லாமல் நக்கலாக வரவேற்கிறார் என்கிற அர்த்தத்தைப் பெறுவாரல்லவா? தமிழர்களின் அரசியல் அபிலாசைகளின் குறியீடாக நிற்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் பொதுவேட்பாளருமான திரு.பா.அரியநேத்திரனுக்கு முன்பாகவே அப்படி எள்ளலாகச் சொல்வது கிண்டலாகத் தோன்றவில்லையா?
இந்தக் கிண்டலுக்கு மறுத்தானாக அல்லது இதனை எய்வதரே தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவஞானம் சிறீதரன் அவர்கள்தான் என்பதை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் பொதுவேட்பாளருமான திரு.பா.அரியநேத்திரனும் உடனடியாகவே போட்டுடைத்தார். அதுதான் சங்கு சின்னத்தின் தெரிவு விடயம். இப்படியாகக் குறிப்பிட்ட சில நிமிடக் காணொலியிலேயே கண்டறியப்படவேண்டிய பல உண்மைகள் இருந்தன. அந்த உண்மைகளில், தமிழ் பொதுவேட்பாளர் விடயத்தில் இவர்கள் யாருமே உண்மையாக இல்லை என்பதையும் மறைத்து வைத்திருந்தன.
(நேரம் ஒதுக்கி வாசித்த உங்களுக்கு நன்றி. இரண்டு தினங்களுக்கு எனது தொலைபேசி செயலிழந்திருக்கும்)