07/09/2026
🔴 எல்நினோ தாக்கம்!
மன்னாருக்கு வரப்போகும் ஆபத்து என்ன?
வறட்சி, கடும் மழை, சூறாவளி மற்றும் வெள்ள அபாயங்களுக்கு மக்கள் தயாராக வேண்டும் என ஆய்வாளர் சின்கிலேயர் பீற்றர் எச்சரிக்கை
எல்நினோ காலநிலையின் தாக்கம் இலங்கையின் காலநிலை, விவசாயம், நீர்வளம் உள்ளிட்ட பல துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில், மன்னார் மாவட்ட மக்கள் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வறட்சி மற்றும் கடும் மழை உள்ளிட்ட காலநிலை மாற்றங்களுக்கு முன்கூட்டியே தயாராக வேண்டும் என ஆய்வாளர் திரு. சின்கிலேயர் பீற்றர் தெரிவித்துள்ளார்.
எல்நினோ என்பது பசுபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு நிலநடுக்கோட்டுப் பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழமையைவிட அதிகரிக்கும் ஒரு காலநிலை நிகழ்வாகும். இதன் தாக்கம் உலகின் பல பகுதிகளில் மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.
🔴 மன்னாருக்கு ஏற்படக்கூடிய தாக்கம்.
மன்னார் மாவட்டம் விவசாயம் மற்றும் கடற்றொழிலை கணிசமாக நம்பியுள்ள நிலையில், நீர்ப்பற்றாக்குறை மற்றும் காலநிலை மாற்றங்கள் இத்துறைகளுக்கு சவாலாக அமையக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மன்னார் தீவு மற்றும் பெருநிலப்பரப்பில் உள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் குறைவடையும் பட்சத்தில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான நீர் பற்றாக்குறை ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டின் பல பகுதிகளில் ஏற்கனவே நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் கணிசமாகக் குறைந்துள்ளதுடன், மன்னார் மாவட்டத்தின் நான்கு முக்கிய நீர்த்தேக்கங்களிலும் மொத்த கொள்ளளவு சுமார் 34 வீதமாக இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
🔴 வறட்சிக்குப் பின்னர் கடும் மழைக்கும் வாய்ப்பு.
எல்நினோ தாக்கம் என்பது வறட்சியை மட்டும் ஏற்படுத்தும் ஒன்றல்ல. பிராந்தியத்துக்கு ஏற்ப கடும் மழை, வெள்ளம் மற்றும் ஏனைய தீவிர காலநிலை நிகழ்வுகளுக்கான அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும் என உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையைப் பொறுத்தவரையில், எதிர்வரும் காலப்பகுதியில் மழைப்பொழிவு முறைகளில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என வானிலைத் திணைக்களமும் எச்சரித்துள்ளது. குறிப்பாக 2027ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் வெப்பநிலை அதிகரித்து, சில பகுதிகளில் வழமையைவிட குறைவான மழைவீழ்ச்சி ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மன்னார் மக்கள் வறட்சி மட்டுமன்றி, அதனைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய கடும் மழை, வெள்ளம் மற்றும் பலத்த காற்று போன்ற நிலைமைகளுக்கும் முன்கூட்டியே தயாராக வேண்டும் என ஆய்வாளர் சின்கிலேயர் பீற்றர் தெரிவித்துள்ளார்.
🔴 விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு அறிவுறுத்தல்.
விவசாயிகள் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளும்போது எதிர்பார்க்கப்படும் காலநிலை மாற்றங்களை கருத்தில் கொண்டு திட்டமிட வேண்டும் எனவும், நீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் கடலுக்குச் செல்லும் முன்னர் அதிகாரப்பூர்வ காலநிலை அறிவிப்புகள் மற்றும் கடல் எச்சரிக்கைகளை அவதானித்து, உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
🔴 குளங்கள், வாய்க்கால்களை முன்கூட்டியே துப்பரவு செய்ய வேண்டும்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள குளங்கள், வாய்க்கால்கள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களை முன்கூட்டியே துப்பரவு செய்து, மழைக்காலத்தில் கிடைக்கும் நீரை முறையாக சேமிப்பதற்கும், அதிகப்படியான நீரை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், குடிநீர், விவசாயம், சுகாதாரம், மின்சாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கருத்தில் கொண்டு அரசாங்க நிறுவனங்கள் முன்கூட்டியே திட்டங்களைத் தயாரிக்க வேண்டிய அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கமும் எல்நினோவினால் ஏற்படக்கூடிய நீர், மின்சாரம், உணவு மற்றும் அனர்த்த அபாயங்களை எதிர்கொள்ள தேசிய அளவிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள விசேட குழுக்களை அமைத்துள்ளது.
“வரும் முன் காப்பது”
எல்நினோவின் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அனர்த்த முகாமைத்துவப் பயிற்சிகள் மற்றும் அவசரகாலத் தயார்நிலைகளை வலுப்படுத்த வேண்டும் என ஆய்வாளர் சின்கிலேயர் பீற்றர் தெரிவித்துள்ளார்.
“வரும் முன் காப்பது” என்ற அடிப்படையில், பெறுமதியான உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாப்பதற்கு மக்கள், அரச நிறுவனங்கள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகள் ஒன்றிணைந்து முன்கூட்டியே தயாராக வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
🔴 குறிப்பு:-
இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளின் துல்லியம் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிகழ்வுகளுக்கான பொறுப்பு, கருத்துகளை வழங்கியவரையே சாரும்.