
14/06/2025
Zakat போன்று இந்தியர்களுக்கு MIA; டாக்டர் சத்தியா பிரகாஷ் பரிந்துரை
(ரா.தங்கமணி, கோ.பத்மஜோதி)
கோலாலம்பூர், ஜூன் 14-
இந்தியர்களுக்கு பொருளாதார ரீதியில் உதவிடும் வகையில் Zakat போன்று MIA எனப்படும் மலேசிய இந்தியர் பொருளாதார அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று சிலாங்கூர் இந்தியர் நிர்வாக இயக்கத்தின் தலைவர் டாக்டர் சத்தியா பிரகாஷ் தெரிவித்தார்.
அரசாங்கத்தையே முழுமையாக நம்பி கொண்டிருக்காமல் இந்தியர்களுக்கு இந்தியர்களே உதவிடும் வகையில் MIA- வின் செயலாக்கத் திறன் வடிவமைக்கப்படும்.
இந்திய சமுதாயத்தில் உள்ள வணிகர்கள், தொழிலதிபர்கள் தாங்கள் செலுத்தும் வரி பணத்தை MIA-வில் பங்ளிக்கச் செய்வதன் வழி இந்தியர்களுக்கு உதவிடும் ஓர் நிதிவளமாக MIA உருவாக்கப்படும்.
நாடு தழுவிய நிலையில் இதன் செயலாக்கம் விரிவுப்படுத்தி அதன் மூலம் MIA செயல்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று நேற்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் டாக்டர் சத்தியா பிரகாஷ் தெரிவித்தார்.
இந்திய சமுதாயத்திற்காக அரசாங்கம் ஒதுக்கும் மானியம் தொடர்பில் தொடர்ந்து கேள்விகளை எழுப்புவதை விடுத்து நமக்கு நாமே என்ன செய்து கொள்ள முடியும் என்பதை சாத்தியமாக்கவே MIA திட்டத்தை முன்மொழிந்துள்ளேன்.
இது தொடர்பான பரிந்துரை முழுமையாக தயாரிக்கப்பட்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் பார்வைக்குக் கொண்டுச் செல்லப்படும்.
பிரதமர் இதனை அங்கீகரித்தால் நிச்சயம் அது இந்திய சமுதாயத்திற்கு பயனுள்ளதாக அமையும் என்று டாக்டர் சத்தியா பிரகாஷ் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பிரதமரின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன், நெகிரி செம்பிலான் மாநில முன்னாள் துணை சபாநாயகர் டத்தோ ரவி உட்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.