16/09/2024
#மீலாது_விழாவும், #மீளாத_வழிகேடும்.
அல்லாஹுத்தஆலா தனது திருமறைக் குர்ஆனில்:
''நம்முடைய தூதர் உங்களுக்கு கொடுத்ததை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். அவர் எதைவிட்டும் உங்களை தடுத்தாரோ, அதைவிட்டும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். (இவ்விஷயத்தில்) நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ் கடும் தண்டனை தருபவன்.''
(அல் குர்ஆன் - 59 : 07)
என்று அல்லாஹ், நபி ﷺ
அவர்கள் ஏவியதை மட்டும் எடுத்து செயல்படுத்த வேண்டும் என்றும். ஏவாத காரியங்கள் எதனையும்
புதிதாக ஏற்படுத்த கூடாது எனவும் எச்சரிக்கை செய்கிறான்.
ஆனால், இன்று நமது சமூகத்தில் பெரும்பாலான மக்கள் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையை
தகர்க்கக்கூடிய 'பித்அத்' (புதியசெயல்) மற்றும் 'ஷிர்க்' (இணைவைத்தல்) போன்ற காரியங்களை சர்வ சாதாரணமாகச் செய்து வருவதைக் காணமுடிகிறது.
நபி ﷺ அவர்களை கண்ணியப்படுத்துகிறோம் என்ற பெயரில் அவர்கள் பிறந்த மாதமான
ரபீஉல் அவ்வல் முதல் நாளிலிருந்து பள்ளிவாசல்கள் தோறும் மவ்லீது திரை இசை மெட்டில் பாடுவதும்
அம்மாதத்தின் 12-வது நாளை நபி ﷺ அவர்களின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுவதும், மார்க்கம்
தடுத்த காரியங்களாகும். பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது பிற மதத்தவர்களின் பழக்கமாகும்.
''யார் பிற மதத்தவரை பின்பற்றுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல'' என நபி ﷺ அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
கிறித்துவர்கள் இறைத்தூதர் ஈஸா ﷺ அவர்களின் பிறந்த தினத்தை கிறிஸ்மஸ்ஸாகவும், பௌத்தர்கள் புத்தரின் பிறந்த தினத்தை புத்த பூர்ணிமாவாகவும், மகாவீரர் பிறந்த தினம் மகாவீரர் ஜெயந்தியாகவும், கிருஷ்ணன் பிறந்த தினத்தை கிருஷ்ண ஜெயந்தி என்றும் கொண்டாடுவது போல உங்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று நிருபிக்கும் விதமாக 'மீலாது விழா' கொண்டாடுகிறார்கள்.
''உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாய
மக்களின் நடைமுறையை நீங்கள் பின்பற்றிகொண்டேயிருப்பீர்கள், அவர்கள் உடும்பின் பொந்தில் நுழைந்தால், அவ்வாறே நீங்களும் செய்வீர்கள் என நபி அவர்கள் கூறியதும், நபித்தோழர்கள் யூத, கிறிஸ்தவர்களையா? என்று கேட்டதற்கு வேறு யார்? என நபி ﷺ அவர்கள் பதிலளித்தார்கள். (முஸ்லிம்)
இது போன்ற செயல்களிலிருந்து ஒரு முஸ்லிம் விலகி இருக்க வேண்டும்
என நபி ﷺ அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
''நமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை ஒருவன் புதிதாக உருவாக்கினால், அது
நிராகரிக்கப்பட வேண்டியதாகும்'' என நபியவர்கள் கூறினார்கள்.
(ஸஹீஹ் புகாரி : 2697, ஸஹீஹ் முஸ்லிம் :1713)
''நம் கட்டளை இல்லாத ஒரு செயலை ஒருவன் செய்தால் அது நிராகரிக்கப்பட வேண்டும்'' (முஸ்லிம்)
இத்தகைய நபிமொழிகளுக்கு மாற்றமாக மார்க்கம் அனுமதிக்காத காரியங்களை ஒவ்வொரு
பள்ளிவாசல் நிர்வாகிகள், ஆலிம்கள் முன்னின்று நடத்துகிறார்கள்.
இதற்காக பொருளாதாரத்தையும்
செலவிடுகிறார்கள். இத்தகைய காரியங்களை செய்பவர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்குகிறது.
இத்தகைய விழாக்களை கொண்டாடுபவர்களில் பலர் நபி ﷺ அவர்களின் நடைமுறைகளைப்
பின்பற்றுவதில்லை.
செய்தியில் சிறந்தது குர்ஆன், வழிகாட்டுதலில் சிறந்தது முஹம்மது நபியவர்களின் வழியாகும். மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக உண்டுபண்ணுவது மிக மோசமான காரியமாகும்.
மார்க்கத்தில் இல்லாத எல்லா காரியங்களும் வழிகேடாகும், வழிகேடுகள் நம்மை நரகத்தின்பால் சேர்க்கும். அத்தகைய நிலையிலிருந்து விலகி யாரெல்லாம் நேர்வழியில் பயணிக்கிறார்களோ அவர்களை அல்லாஹ் பாதுகாப்பானாக.
🥏WhatsApp : https://chat.whatsapp.com/KbmHeK8apH1JDdxSW7bDdt
Www.jmslk.com
♡ ㅤ ⎙ㅤ ⌲
ˡᶦᵏᵉ ˢᵃᵛᵉ ˢʰᵃʳᵉ
┈┉┅━❥︎⚪️❥︎━┅┉┈