30/04/2023
சைவ சமயமும் இந்து மதமும் ஒன்றுதானா? வேதங்கள் என்பவை சைவத்துக்கு ஏற்புடையனவா என்றெல்லாம் நிறைய குழப்பங்கள் நம்மிடையே நிலவுகின்றன. சில அடிப்படை உண்மைகள் வருமாறு:
1) இந்தியா என இப்போது வழங்கப்படும் நாடு அக்காலத்தில் அகண்ட பாரதமாக வழங்கியது. அதில் பல்வேறு தெய்வங்கள் வணங்கப்பட்டன. பல்வேறு சமய வழிமுறைகள் வெவ்வேறு மக்கள் குழுக்களால் பின்பற்றப்பட்டன. ஆனால், அத்தனைக்கும் அடிப்படையாக, சில ஒற்றுமைகள் இருந்தன. ஒரே ஒரு பரம்பொருளானவர் ஐந்தொழில் ஆற்றும் சிவபெருமான் என்ற நம்பிக்கை இமயம் முதல் குமரி வரை அனைத்து மொழி பேசுபவர்களுக்கும் இருந்தது. பிற்காலத்தில் ஆரியர்கள் வருகையினால் வடக்கில் வைதீக வேள்வி முறை வளர்ந்தபோது, பாரதத்தின் பூர்வீக மதங்களைப் பின்பற்றுவோர் எண்ணிக்கை அவ்விடத்தில் கணிசமாகக் குறைந்தது. அவர்கள் தெற்குப் பக்கம் நகர்ந்தனர் என்று அறியப்படுகிறது.
2) வடக்கே மேலோங்கி இருந்தது ஆரிய மதமான வைதீகம். வைதீக மதத்தார் வேள்விகள் செய்வதில் மிகுந்த அக்கறை காட்டினர். அவர்கள் வடக்கே அக்காலத்தில் நிலவிய பூர்வீக இந்திய மதத்தோடு நிறைய முரண்பட்டனர். அதன் விளைவாக நிறைய போர்கள் நிகழ்ந்தன. கௌதம புத்தர் உட்பட்ட பலர் வைதீக வழிமுறையை எதிர்த்தனர். அதனால் ஆரிய வைதீகர்கள் தங்கள் வழிபாட்டு முறையில் பல மாற்றங்களைச் செய்தனர். இந்தியாவின் பூர்வீக மத நம்பிக்கையைத் தாங்களும் ஏற்றுக்கொண்டனர். அதன் விளைவாக, அவர்களின் கருத்துகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால்தான் வேதங்களில் பல முரண்படும் கருத்துகள் இருப்பதைக் காணலாம். பின்னர் அவர்கள் அவ்வாறு சீர்திருத்தப்பட்ட தங்கள் வேத தர்மத்தையே உறுதியாக நிலைநாட்டிவிட்டனர். அதுதான் இன்று சனாதன தர்மம் எனப்படுகிறது.
3) சனாதன தர்மத்தின் அடிப்படை நூல்கள் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள். இவை பல நூறாண்டுகளாக பல்வேறு சமுதாயங்களில் வழங்கப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். ஆரம்பகால வைதீகரின் நம்பிக்கையும், புதிதாக அவர்கள் செய்துகொண்ட மாற்றங்களும் எல்லாம் சேர்ந்தவைதாம் இந்த நான்கு வேதங்கள். இவற்றின் கடைசிப் பகுதியில் உள்ள செய்யுட்கள் வேதாந்தம் எனப்படும். இவை தமிழரின் சைவ சமயக் கருத்துகள் பலவற்றை ஏற்றுக் கொண்டிருக்கின்றன.
4) இந்தியாவின் தெற்கில் வாழ்ந்த மக்கள் ஐந்திணை நிலத்தில், குலதெய்வக் கோட்பாட்டுடனும் திணைக்குரிய தெய்வ வழிபாட்டுடனும் வாழ்ந்தனர். அதே சமயத்தில் அனைத்து தெய்வங்களையும் ஆட்டுவிக்கும் ஒரே இறைவனாம் சிவபெருமானையும் வணங்கிவந்தனர். இவ்வகையில், வேற்றுமையில் ஒற்றுமை கொண்டு இனிது வாழ்ந்தனர். இவ்வுண்மையை சங்க இலக்கியங்கள் வழி அறியலாம்.
5) தமிழ் ஆகமங்கள், தமிழ் மந்திரங்கள் தமிழ்க் கோவில்கள், தமிழ் வழிபாட்டு முறைகள் முதலியன ஆதிகாலம் முதலே இருந்துவந்துள்ளன. பிற்காலத்தில் நால்வர்ணத்தார் எனப்படும் ஆரிய மக்கள் தமிழரின் கோவில் வழிபாட்டில் தாங்களும் பங்குகொண்டு, தங்கள் நம்பிக்கைகளையும் சேர்த்தனர் என அறியப்படுகிறது. சிலப்பதிகாரத்தின் கடலாடு காதை முதலிய பழைய இலக்கியக் குறிப்புகள் மூலம் இதனை அறியலாம்.
6) நாலு வர்ண முறை என்பது ஆரிய வைதீக முறையைச் சார்ந்தது. ஆர்ய மக்கள் தங்கள் சமூகத்துக்குள் 4 விதப் பிரிவை ஏற்படுத்திக் கொண்டு, வேள்வியின்போது ஓதுபவர் பிராமணர், வேள்வியைத் தடுக்கும் உள்நாட்டு எதிர்ப்பாளர்களிடம் சண்டை போடுபவர் சத்ரியர், பணம் சம்பாதிப்பவர் வைசியர், வேள்விக்குரிய சுள்ளிகள், பலிப் பொருட்கள் முதலானவற்றை எடுத்துக்கொடுத்து ஏவல் செய்பவர் சூத்திரர் என வகுத்துக்கொண்டனர். இந்தப் பகுப்பு முறை வைதீகர்க்கு மட்டுமே உரியது. தமிழர்களுக்கு சம்பந்தமில்லாமல் இருந்தது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தமிழர் வாழ்விலும் இது புகுந்தது.
7) இந்தியாவில் உள்ள பல்வேறு மதங்களின் தன்மை அறியாத காரணத்தால் எல்லா மதங்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக இந்து மதம் என்ற பெயரைச் சூட்டினர் வெள்ளைக்காரர்கள். ஆனால், அவர்கள் பாரதத்தின் வடக்கில் இருந்த வைதீகத்தை மட்டுமே அறிந்திருந்த காரணத்தால் அதுவே இந்தியா முழுமைக்கும் உள்ள மதம் எனத் தவறாகச் சொல்லிவிட்டனர்.
8 )தமிழர்களின் ஆதி சமய நூல்கள் நமக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. எனினும் அவற்றில் சொல்லப்பட்டிருந்த முக்கிய கருத்துகளும் சித்தாந்தங்களும் பிற்காலத்தில் எழுதப்பட்ட தொல்காப்பியம், சங்க இலக்கியம், தொடர்ந்து பக்தி இலக்கியம், சைவ சித்தாந்த சாத்திர நூல்கள் முதலியவை வழி அறியப்படுகின்றன. தமிழரின் சமய நம்பிக்கை வேத கால வைதீக நம்பிக்கையுடன் சிலவிதத்தில் முரண்படுகிறது. சிலவிதத்தில் ஒன்றுபடுகிறது. எ.கா. ஆதியும் அந்தமும் இல்லாத ஒரே பரம்பொருள் சிவன் என்பதில் கருத்து ஒற்றுமை உள்ளது. இந்திரன், வாயு முதலான பல சிறு தெய்வங்கள் பற்றிய கருத்திலும் ஒற்றுமை உள்ளது. ஆனால் வேள்வி வகைகளிலும் நால்வர்ண அமைப்பிலும் கருத்து வேறுபடுகிறது.
9) தெற்கின் தமிழ்ச் சமயமும் வடக்கின் வைதீக சமயமும் ஓரளவு சமரசம் கண்டு ஒற்றுமையுடன் வளர்ந்த விதத்தை பண்டைய இலக்கியங்கள் சுட்டுகின்றன. பௌத்தம், சமணம் முதலியவற்றின் தாக்கத்தை உடைக்க இவ்விரு சமயங்களும் கைகோர்த்து வளர்ச்சிக்கு வித்திட்ட விதத்தை தமிழ் பக்தி இலக்கியங்கள் காட்டுகின்றன. குறிப்பாக சைவ சமயத்தின் அடிப்படை ஆகம நூலாகத் தற்போது விளங்கும் திருமந்திரம், இவ்விரு சமயக் கோட்பாடுகளின் ஒற்றுமை வேற்றுமைகளை நன்கு உணர்த்துகிறது.
ஓம் நம சிவாய!