27/08/2025
தமிழ் இனத்தைச் சார்ந்த அந்த மலையாள எழுத்தாளரை பாதுகாக்க வேண்டும்.
பெறுநர் 23/8/2025
மாண்புமிகு முதல்வர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு,
தலைமை செயலகம்,
சென்னை-- 9.
ஐயா,
வணக்கம்.
பொருள்: தமிழ் இனத்தை சார்ந்த மலையாள தலித் எழுத்தாளர் ராகவன் அத்தோளி காசநோயால் அவதி -- பாதுகாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுவது தொடர்பாக
கேரளா மாநிலம் கோழிக்கோடு நகரை ஒட்டிய பகுதியில் சிற்பக் கலைஞரும் கவிஞரும் நாவலாசிரியருமான எழுத்தாளர் திரு .ராகவன் அத்தோளி என்பவர் வாழ்ந்து வருகிறார்.
தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதில் பெருமைப்படும் எழுத்தாளர் ராகவன் அத்தோளி.
70 வயதாகிறது அவருக்கு.
77 புத்தகங்கள் அவர் வெளியிட்டு இருக்கிறார். வெளியிடுவதற்கு 200ககும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி வைத்திருக்கிறார்.
கேரளா அரசின் எந்த உதவியும் அவருக்கு பென்ஷன் முறையில் கிடைக்கவில்லை என்று ஆதங்கத்தோடு கூறுகிறார். அதற்கு காரணமும் உண்டு.
இவர் தமிழ் மொழி பேசும் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தவர். ஆனால் மலையாள எழுத்தாளர்களில் மிக முக்கியமானவரும் கூட. இதனால் சிவப்பு நாடாக்களில் தடைபட்டு அவருக்கான உதவிகள் அரசிடம் இருந்து பெற முடியாமல் தவித்துக் கொண்டு வருகிறார்.
இலங்கை தமிழ் மக்களுக்கு உதவிட அரசும் கட்சிகளும் முனைப்போடு செயல்பட்டது போல தமிழ் பெற்றோருக்கு பிறந்த இந்த கவிஞரை தமிழ்நாடு கைத்தூக்கி விட வேண்டும் என்பது எனது அவா. அதற்காகத்தான் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
அவர் காச நோயால் பாதித்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை கவனிக்க ஒரு மகன் மட்டுமே உள்ளார். அந்த மகனுக்கும் இப்போது காச நோய் பாதிப்பு ஏற்பட்டு எப்போது வாழ்வில் இருள் படரும் என்றும் எப்போது தான் இல்லாமல் ஆகி விடுவேன் என்பது தெரியவில்லை என்றும் கவலையோடு பதிவிடுகிறார் மகனும்.
தனது புத்தகங்கள் அச்சிடப்பட்டு விற்பனை செய்தால் மிகப்பெரிய எழுத்தாளர் செல்வந்தராக வரவேண்டிய ராகவன் அத்தோளி
இன்று இயற்கை மரணம் வரை வாழ்வதற்கு போராடிக் கொண்டும் உதவியை கேட்டுக் கொண்டும் இருக்கிறார்.
பல பல்கலைக்கழகங்களிலும் தலித் இலக்கியம் படிக்கும் மாணவர்கள் ராகவன் அத்தோளியையும் படிக்கிறார்கள். இவரை பல்கலைக்கழகங்களில் அழைத்து பேச வைத்தது கூட உண்டு.
இவர் ஒரு புரட்சியாளர் கூட. இலக்கிய புரட்சியாளர்.
மலையாள இலக்கிய உலகம் ராமாயணம் மொழிமாற்றம் செய்தவரை எழுத்தச்சன் (எழுத்தின் தந்தை) என்று கொண்டாடும்போது எழுத்தசன் அல்ல எனது தந்தை என்று எழுத்தச்சன் சிலை வைத்திருக்கும் துஞ்சன்பறம்பு இலக்கிய முகாமில் அவர் பேசினார்.
கவியரங்கத்திற்கு வந்தவர் இவ்வாறு தான் கூறினார்.
"நான் கவிதை படிக்க வரவில்லை. ஒரு விஷயத்தை சொல்ல வந்தேன் .இங்கு பேசியவர்கள் எல்லாம் சொன்னார்களே மொழியின் தந்தை தான் துஞ்ச்சத்து எழுதச்சன் என்று. ஆனால் நான் சொல்கிறேன் ,எனது மொழியின் தந்தை அல்ல எழுத்தச்சன். இவ்வாறு காண எனக்கு முடியாது. எழுத்தசனோடு நானும் எனது வம்சமும் 18 காதம் அகன்று நிற்க வேண்டும். பிறகு எப்படித்தான் எங்கள் மொழி உங்களது எழுத்தச்சனின்மொழியில் வருவது? அதை திருத்தத்தான் நான் இங்கு வந்தேன்.
கொடும் தமிழ் பேசி இருந்தவர்கள் தான் எனது தாயும் அவரது இனமும். பிறகு எப்படித்தான் என் மொழியின் தந்தை என்று கூறி எனக்கு கௌரவமாக நடக்க இயலும் .இதைச் சொல்வதற்கு தான் நான் இங்கு வந்து இருக்கிறேன்."
ஞானபீடம் பரிசு பெற்ற எம்.டி வாசுதேவன் நாயர் மற்றும் இலக்கிய ஆளுமைகள் முன்னால் தான் ராகவன் அத்தோளி இவ்வாறு கூறினார்.
இந்த கவிஞரை, நாவலாசிரியரை, அனுபவ எழுத்தாளரை ,சிற்பியை தமிழ்நாடு கொண்டாட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.
மலையாள மண்ணில் நின்று நான் தமிழ் இனத்தைச் சேர்ந்த எழுத்தாளன் மலையாளத்தில் எழுதுகிறேன் என்று தீரமுடன் அறிவிக்கிற நெஞ்சு உறுதி மிக்க எழுத்தாளரை தமிழ்நாடு பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கிறது என்பதால் ,கனவு இல்லம் எழுத்தாளர்களுக்கும் வழங்குகின்ற மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு இதை கொண்டு வருகிறேன்.
சென்னையிலோ தகுந்த வேறு இடத்திலோ அவருக்கு உரிய சிகிச்சை வழங்கி அவரது இறுதி காலம் வரை அவரை பாதுகாத்தால் தமிழ் மொழிக்கு இன்னும் மணம் அதிகமாகும் என்று கருதுகிறேன்.
அவரை தொடர்பு கொள்வதற்கான எண்ணும் இருக்கிறது.
91-- 9746285311
தமிழ் இனத்தைச் சார்ந்த அந்த மலையாள எழுத்தாளரை பாதுகாக்க வேண்டுகிறேன்.
-- பொன்மனை வல்சகுமார்
9443596057
(மிகவும் ஏழ்மையான நிலையில் வாழும் எழுத்தாளரை பாதுகாக்க பாதுகாக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தமிழ் இலக்கிய சமூகம் வலியுறுத்திய வேண்ட இக்கடிதம் பிரசுரத்திற்கு சமர்ப்பிக்கிறேன்.)
- Kanavu Subrabharathimanian Tirupur