17/10/2024
எந்த மொழிக்கும் இல்லாத ஒரு சிறப்பு தமிழுக்கு உண்டு. அது தான் ழகரம். இதுபோல பல்வேறு விதமான வார்த்தைகள் தமிழுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன. ஓரெழுத்து ஒரு மொழி அதிகளவில் தமிழில் தான் உள்ளது.
அதுவும் நம்மால் அழகுபட ரசிக்க வைக்கும் வல்லமை படைத்தது. உதாரணத்திற்கு ஒன்றைப் பார்ப்போம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் தானே..!
‘வேல்’ என்றால் கூர்மையான முனை கொண்டது. அது அறிவுக்கூர்மையைக் குறிக்கிறது. அறிவு காண இயலாது. உணரத்தான் முடியும். அதனால் அது மறைக்கப்பட்டுள்ளது.
‘வேவு பார்த்தல்’ என்றால் உளவு பார்ப்பது. எதிரியின் நாட்டைப் பற்றி அறிய ஒற்றர் படை வீரன் உளவு பார்க்க அங்கு ரகசியமாக செல்கிறான். அங்கு மறைந்து இருந்து தனது வேலையைப் பார்க்கிறான்.
‘வேகம்’ என்றால் மின்னல் போல ‘பளிச்’ சென்று மறைந்துவிடும் வேகம். விரைந்து செல்லுதல் என்று பொருள். அந்த அளவு விருட்டென்று மறைந்து விடுவதால் தான் வேகம் என்று பெயர் வந்தது. அதே போல ‘வேதம்’ என்றால் மறைபொருள்.
அது நேரடியாக சொல்லப்படாது. ஆழ்ந்து கவனித்தால் மட்டுமே புலனாகும். அதற்குரிய உண்மைப்பொருள் விளங்கும். அதே போல ‘வேர்’ என்றால் தரைக்குக் கீழ் சென்று தனது வேலையை மறைந்து இருந்து கவனித்து செடிக்குத் தேவையான நீரையும், தாது உப்புகளையும் தவறாமல் கொடுக்கும் பணியை செவ்வனே செய்கிறது.
‘வேதனை’யும் அப்படித்தான். அது ஒரு உணர்வுப்பூர்வமான விஷயம். மறைந்து இருந்து நம் மனதைத் தாக்குகிறது.
அதே போல ‘வேடம்’ என்றால் தனது உண்மை உருவத்தை மறைத்துப் பொய்யான தோற்றத்தைக் கொண்டு வருவது என்று பொருள்படும்.
அது சரி இந்த சொற்கள் எல்லாமே வே என்று தொடங்கும் எழுத்தில் ஆரம்பிக்கிறதே. அது ஏன்னு தானே கேட்குறீங்க. இங்கு தான் தமிழ் தனித்து நிற்கிறது. ‘வே‘ என்றால் மறைத்தல் என்று ஒரு பொருள். தமிழ்னா சும்மாவா... எல்லாரும் நம்ம தாய்மொழிக்கு ஒரு ‘ஜே’ போடுங்க..!