01/08/2024
#பூமியின் 'பொறுப்பு துறப்பு' அறிவிப்பு*
அகழ்வாரை தாங்கும் நிலம் போல...
தாங்கவில்லை இப்போது
தாக்கத் தொடங்கி விட்டது
மண்ணில் தான் அமையும் நம் கல்லறை
இப்போது மண்ணே நமக்கு கல்லறை அமைக்கத் தொடங்கி விட்டது
பொழுதெல்லாம் பெய்த மழை இறுதிக் குளியலாய்..
பூப்பூவாய் உதிரும் பூமியின் மண் சரம்
இறுதி மலர்த் தூவலாய்...
மனிதன் பேதம அறிவான்..
மண்ணறியாது...
முதியோர் குழந்தை பெண்கள் நோயுற்றோர்
யாவரையும் ஒன்றாய் தனக்குள் இணைத்துக் கொள்கிறது
"மனிதனே நீ மண்ணாய் இருந்தாய், மண்ணுக்கு திரும்புவாய்'
வேதம் சொன்ன நீதம்..
மனிதன் ஒரு மட்பாண்டம் மறை சொன்ன உரை
நிறைவேறுவது நியாயம்தான்...
ஆனால், நிறைவடையாதவர்களையும்
நிறைத்துக் கொள்வது தான் நியாயமாய் தெரியவில்லை
கடலின் கடும் பசி கண்டோம் சுனாமியில்
காற்றின் கொடூரம் அறிந்தோம் ஒக்கியில்
ஆகாய வக்கிரம் அழிவுப் பெருமழை...
அனைத்திலும் நம்பியது உன்னை மட்டும் தான்...
ஆம், மண்ணை மட்டும் தான்...
மண் மீதான நம்பிக்கையும் மண்ணாய் போனால்,
மலை போன்ற விசுவாசம் இடிந்து போனால்...
எங்கே போவது மனித வர்க்கம்?
மண்ணே நமக்கு முகவரியாய் இருந்தது
மண்ணிலேயே நமக்கு முகவுரை எழுதப்பட்டது...
அந்த மண்ணே நமக்கு முடிவுரை எழுதினால்
வாழ்க்கை வாழ்வதற்கா சாவதற்காக?
'எல்லாம் சரிதான்
என் மீது இழைத்த
வன்கொடுமை மறந்து
வாயாரப் பேசுகிறாயே'
பூமித்தாய் கேட்கிறாள்
சுரங்கமாய், எண்ணெய் கிணறாய், நியூட்ரினோ ஆய்வு மையமாய்....
தோண்டுகிறாய் என்னை சீண்டுகிறாய்
வயல்வெளியால் உடல் மறைத்தால் கலப்பையால் கீறிக் காயப்படுத்துகிறாய்
வனத்தால் போர்த்தினால் தேயிலைத் தோட்டங்களால் குடியிருப்புகளாய் வகிருகிறாய்
அடிக்கு ஒரு ஆழ்குழாய் கிணறு,
தோன்றுமிடமெல்லாம் குண்டு, குழி
மேனியில்ல
மெல்லிய தோலுள்ள
ஆற்றுப்படுகையையும் பொக்லைனால் குத்தி புண்ணாக்குகிறாய்
அகழ்வாரை தாங்கும் நிலம் என்று
எனக்கான ஆறுதலை நீயே கூறிக் கொள்கிறாய்
எனக்கான வலியை நீ தாங்குவாயா
எனக்கான துயரை உன் தலைமுறை தாங்குமா
பூமி என்றாலே பொறுமை என்று
நீயே என் சார்பில் எழுதினால் நிறைவேறுமா?
இது
என்னை உனக்கு அறிவிக்கும் அறிவிப்பு
இனியேனும் நிறுத்து சூழல் அழிப்பு
நடந்தவை யாவும் துயரமாயினும் அவற்றுக்கெல்லாம் நீயே பொறுப்பு!
என் மீது மட்டுமல்ல
இதர பூதங்கள் மேலும்
இனியும் காட்டாதே உன் திமிர்ப்பு!
வயநாடு தொடக்கமே,
நீலகிரிக்கும் மாஞ்சோலைக்கும் நீளுமே....
அதற்கு முன் அடங்கட்டும் உனது நில அழிப்பு!
#பரிதிபாலன்