13/10/2020
கயத்தார் எல்லாம் சாதி வெறி உச்சத்தில் இருக்கும் பகுதி. அங்கு தேவர்கள் மட்டுமில்லை, தெலுங்கர்கள் கூட அதீத சாதி வெறியில் அலைவார்கள். அவர்கள் மட்டுமா ? தன்னை சாதி இந்துவாக கருதும் அத்தனை பேருமே அப்படித்தான் அலைவான்கள்.
பேச்சில், உடல்மொழியில், நடத்தையில், இவ்வளவு ஏன், நம்மை அளக்கும் அளவுகோல்களே சாதியை அடிப்படையாகக் கொண்டதாகத்தான் இருக்கும்.
சாதி இந்துக்களுக்கு நான் சொல்வதன், அடிப்படை பிரச்சனை கூட புரியாது. இதெல்லாம் கதை என்ற அளவில், நக்கலுக்கு சிரிப்பு ஸ்மைலியை கூட அழுத்தி செல்வார்கள். ஆனால், இந்த சிரிப்பு ஸ்மைலிகளுக்கெல்லாம் உண்மை அடங்காதுதானே.
கயத்தார் அருகே வசிக்கும் அறுபது வயது பால்ராஜ் என்பவரின் ஆடு, சங்குத்தேவர் என்பவற்றின் வயலுக்குள் சென்றுவிடுகிறது. சங்குத் தேவர், பால்ராஜை வழக்கம் போல சாதிப் பெயர் சொல்லித் திட்டுகிறார். (பள்ளர் என்கிறார்கள். பள்ளரென்றால் எனக்கு சந்தோஷமே. தேவேந்திரர் தேவேந்திரர் என்று ஊருக்கு நடுவில் கூவிக்கொண்டிருந்தாலும் சாதி இந்துக்கள் உன்னை என்னவாக பார்க்கிறார்கள் என்பதற்கு இந்த சம்பவமே சிறந்த உதா ) வாய்ததகராறு கைகலப்பாக மாறி, பால்ராஜ், சங்குத்தேவரை அடித்து விட்டதாக செய்திகளில் சொல்லப்படுகிறது. சிறிது நேரத்தில் அவர்களிருவரும் சமாதானத்திற்கு வந்துவிடுகிறார்கள்.
ஆனால், சங்குத்தேவரின் மகன்கள் (எல்லாம் 19 / 24 / 20 வயது இளம் பய்யன்கள் ) உறவினர்கள் எல்லாம் சேர்ந்து, பால்ராஜை அழைத்து வந்து, சங்குத்தேவரின் காலில் விழவைத்து வீடியோ எடுக்கிறார்கள்.
வீடியோவில் குரல்களைக் கேட்டுப்பாருங்க 'நல்லா வீடியோ எடுல / கொதவளையை அறுத்துருவேன்' என்றெல்லாம் சங்குத்தேவரின் ஆட்கள், பால்ராஜை வசைபாடுவதை தெளிவாக கேட்கலாம்.
கிராமங்களில் ஆடு வயலுக்குள் சென்றதற்கும், மாடு வைக்கலை தின்றதற்கும் சாதி சண்டைகள் சுளுவில் நடக்கும். அப்படியொன்றும் அன்பு பொழியும் இடம் கிடையாது இந்தக் கிராமங்கள்.
ஆனால், வேறு எந்த இரண்டு சாதிகளுக்குள் இது நடந்தாலும், பரஸ்பர அடிதடியாக / காவல்துறை புகாராக / பெரிய ஆட்கள் வைத்து மத்தியஸ்தம் / மட்டும்தான் இருக்குமே தவிர, சாதிப் பெயரை சொல்லி இழிவுபடுத்துவது, வீட்டிலிருந்து அழைத்து வந்து காலில் விழ வைப்பது, வீடியோ எடுத்து பரப்புவது எல்லாம் நடக்க வாய்ப்பேயில்லை.
பள்ளரோ / பறையரோ / அருந்ததியினரோ / சக்கிலியரோ / இப்படியான சாதி ஆட்களாக இருந்தால் மட்டுமே காலில் விழவைக்கப்படுவீர்கள். வெளியில் சொல்வதற்கு கூட உங்களுக்கு வாய்ப்பிருக்காது. அப்படியே சொன்னாலும், அதற்குப்பின்னான கலவரங்களுக்கு அதுதான் அடிநாதமாக இருக்ககூடும் என்பதால், அமைதியாகவே கடப்பார்கள். .
இந்த சம்பவம் கூட, சங்குத்தேவர் & கோ எடுத்த வீடியோ காரணமாகவே வெளி வந்திருக்கிறது. பால்ராஜை காலில் விழ வைத்து, வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, தங்களது ஆதிக்கத்தை சமூக ஊடகங்களில் பறைசாற்றியது சங்குத்தேவர் கம்பனியே.
தங்கள் தலையில் தாங்களே மண்ணள்ளிப் போட்டுக்கொண்டு, இப்போது வந்து 'ஆடு வந்து வயலை அழிச்சா பாத்துட்டு இருக்கனுமா' என்று கேட்கிறார்கள்.
அடிதடி சண்டை கூட நடக்கட்டும். அதுதானே நடந்திருக்கிறது. ஆனால் 60 வயது பால்ரஜை, அவரது வீட்டிலிருந்து அழைத்து வந்து, சங்குத்தேவரின் காலில் விழ வைக்கும் அந்த திமிர் எங்கிருந்து வருகிறது ? கொதவளையை அருத்துருவேன் என்று 20 வயது இளைஞன் ஒருவன், 60 வயது பால்ராஜை பார்த்து மிரட்டுவதற்கான அகங்காரம் எங்கிருந்து வருகிறது ?
மனசாட்சியிருந்தால், பால்ராஜிற்கு ஆதரவாக இருங்கள். இல்லையென்றால் பேசாமலாவது கடந்து செல்லுங்கள். ஆதிக்கத்திற்கும், ஆணவத்திற்கும், அகங்காரத்திற்கும் சப்பைக் கட்டு கட்டாதீர்கள்.
ps: உடனே 'பெரியார் மண்' என்று நக்கலடிக்க வராதீர்கள். பெரியார் மண்ணாக இருப்பதால்தான், வன்கொடுமை சட்டத்தில் கைது செய்திருக்கிறார்கள். இல்லையென்றால் ஹத்ராஸ் போல, நள்ளிரவில் பால்ராஜை எரித்து சாமபலை கொடுத்திருப்பார்கள்.
#கவிதா_சொர்ணவல்லி..