
05/07/2025
மணிநாக(ன்) தீவும் மணிமேகலையும்
====================≈=============
ஈழத்தீவின் சரித்திரத்தை எழுதிச் சென்ற அத்தனை வரலாறுகளும் அநுராதபுர வரலாற்றினையே எழுதிச் சென்றன. ஆனால் அந்த அநுராதபுர வரலாற்றினை எழுதிச் சென்ற ஓர் இடத்தின் வரலாறு என்ற ஒன்று உண்டு. அதுதான் மணிநாக(ன்) தீவு எனும் மணிபல்லவ வரலாறு. அது ஈழச்சரித்திரத்தை எழுதிச் சென்றதன் பின் அதன் சரித்திரம் அமைதியாக உறங்குகிறது.
ஈழச்சரித்திரத்தின் வரலாற்றில் எழுதப்பட்ட அத்தனை நூல்களுக்கும் அடிப்படையாக திகழ்ந்தது. மணிமேகலை எனும் காப்பியம். காப்பியம் என்றாலே அதில் உயர்வு நவிற்சி எனும் பெரும் கற்பனைகளும் ,அதன் கதாபாத்திர புனைவுகளும் மிகுதியாகக் இடம்பெற்றிருக்கும். அத்தகைய புனைவுகளும்,கற்பனைகளும் பெரும் புகழோடு வாழ்ந்திருந்த நாகநாட்டு வரலாற்றையே புரட்டிப்போட்ட விடயங்களை இங்கு நாம் காணவிருக்கிறோம்.
நாகநாடு என்றாலே அது நாகர்களுடையது என்பதும் அது ஈழத்தினுடைய வடபகுதியை குறிப்பாக கொண்டிருந்தது என்பதுவும் தெளிவானது. அத்தகைய நாகநாட்டு தலைப்பட்டினமாக பெரும் புகழோடு விளங்கியது. மணிநாக(ன்) தீவு இப்பட்டினத்தின் புகழை சிலப்பதிகாரம் " நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடு போகநீள் புகழ் மன்னா புகார் என்று குறிப்பிடுகிறது. அது மட்டுமல்லாது அது தமிழக புகார்,கொற்கை,முசிறி போன்ற பல புகழ்பெற்ற துறைமுக பட்டினங்களை விடவும் சிறப்பு வாய்ந்தது என விதந்துரைக்கின்றது.
அத்தகைய நாகநாட்டின் தலைப்பட்டினமாக திகழ்ந்த மணிநாகன் தீவு அல்லது மணிபல்லவம் என்பது அவ்வாறான பெயர் அத்தீவிற்கு தோன்றக் காரணமாக அமைந்தது அங்குள்ள மணிநாகன் எனும் நாகர்களுடைய மிகப் பழமை வாய்ந்த ஐந்துதலை நாக வழிபாட்டுச் சொரூபம்தான்.இச் சொரூபம் பதினான்காயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என காபன் கணிப்பு உறுதிப்படுத்துகிறது. இந்த சொரூபம் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய கருவறை மூர்த்தியாக விளங்குகிறது.
ஆனால் மணிமேகலை உட்பட
மணிமேகலைக்கு பிந்தைய தீபவம்சம், மகாவம்சம், சூளவம்சம், மற்றும் இராசாவலிய போன்ற புராண நூல்களின் வாயிலாக கூறப்பட்டுள்ள விடயங்களில் பேரளவான கற்பனை வரலாறுகள் இணைக்கப்பட்டுள்ளன. அதன் உண்மையான வரலாற்றுக்கு புறம்பாக அவை மணிபல்லவ தீவின் வரலாற்றை கூறுகின்றன. மணிபல்லவம் என்ற நயினாதீவின் வரலாற்றில் அம்மண்ணின் பூர்வீக மக்களுக்கே இதுவரை அகப்படாத அத்தீவு பற்றிய கூற்றுக்கள் நகைப்புக்குரியது. மேலும்
ஈழத்தீவு பிரதேச ரீதியில் தனிப்பட்ட நிலப்பரப்பைக் கொண்டிருந்தாலும் அதன் பண்பாட்டு வளர்ச்சி அது இந்தியாவுடன், சிறப்பாக தென்னிந்தியாவுடன் மட்டுமே பண்டைய காலம் தொட்டு நெருங்கிய தொடர்பைக் கொண்டு வந்துள்ளது. ஆனால் இலங்கையின் புராதன வரலாற்றை ஆராய்ந்த பலரும் வட இந்தியத் தொடர்புக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுத்து தென்னிந்தியாவைப் பகைமை நாடாகவும், வட இந்தியாவைப் பாரம்பரிய நட்புறவு கொண்ட பிரதேசமாகவும் கூறப்பட்டுள்ளது.
பெளத்தம் தோன்றிய காலத்துக்கு முந்திய நுண்கற்கால வரலாறாயினும் சரி,அதற்குப் பிந்தைய வரலாறாயினும் சரி இந்நாட்டின் ஆதி மக்களின் வரலாறு என்பது தென்னிந்திய வரலாறுதான் என்பதற்கு
அகழ்வாராய்ச்சி, மானிடவியல் ஆராய்ச்சி என்பன நன்கு உதவுகின்றன. அத்துடன் இலக்கியங்கள், கல்வெட்டுகள், நாணயங்கள், முத்திரைகள், சின்னங்கள் ஆகியவையும் தகுந்த சான்றுகளாகக் காட்டுகின்றன. ஒரு நாட்டின்மீது இன்னொரு நாட்டின் பண்பாட்டுப் பரவல் அல்லது செல்வாக்கு ஏற்படுகின்றபோது அந்நாடு அப்பண்பாட்டை அப்படியே உள்வாங்கிக் கொள்வதில்லை. அந்நாட்டின் பௌதீக, அரசியல், சமூக, சமய, பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப சில தனித்துவம் அல்லது சில மாற்றங்கள் ஏற்படக்கூடும். அந்த வகையில்தான் பெளத்தம் இங்கு கால்பதித்த போதும் அம்மதத்தின் மொழியான பிராகிருத மொழியில் தமிழின் செல்வாக்கு மிகுந்து காணப்படுகின்றன.
பௌத்த மதத்தின் அறிமுகத்தையும் அதன் வளர்ச்சியையும் தொடர்புபடுத்திக் கூறும் பாளி இலக்கியங்களும், வரலாற்று ஆசிரியர்களும்
தேவநம்பியதீசன் அநுராதபுரத்தை ஆண்ட காலத்தில் (கி.மு. 247) மௌரிய மன்னன் அசோகனது மகன் மகிந்தனும், மகள் சங்கமித்திரையும் இலங்கைக்கு அனுப்பப்பட்டமையே பௌத்த மதம் இலங்கையில் பரவக் காரணம் எனக் கூறப்படுகிறது (M. V .XII. 15).
ஆனால் பாளி இலக்கியங்கள் தவிர்ந்த ஏனைய தமிழக சான்றுகளை நோக்கும்போது ஏனைய பண்பாட்டுச் சக்திகளைப் போல் பௌத்த மதமும், பௌத்தப் பண்பாடும் தென்னிந்தியத் தொடர்பால் இங்கு பரவியதென்ற முடிவுக்கு வரமுடிகிறது. அது தமிழகத்தின் ஊடாகவே இங்கு பரவியது என்ற விடயமே வெளிப்படுகின்றது. புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் வின்சுடன் சுமித் அவர்கள் கி.மு. 483 முதல் கி.பி. 124 வரையான, 607(483+124) வருடகால, ‘வசப’ என்கிற மன்னனின் ஆட்சிகாலத்துக்கு முந்தைய மகாவம்ச நூலின் வரலாற்றை, அதன் ஆண்டுகளை முழுமையாக நிராகரித்துள்ளார். தேவநாம்பியதீச என்கிற மன்னன் சார்ந்த 10 அத்தியாயங்களை “அபத்தங்களால் முடையப்பட்ட வேலைப்பாடு” என்கிறார் அவர்.அதனால்தான் புகழ் பெற்ற வரலாற்று அறிஞர் கூல்ட்ச்(Hultzsch) அவர்கள் சேரன் செங்குட்டுவன், கயவாகுவின் காலத்தைச் சேர்ந்தவன் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நூல், எந்த வெளிநாடும் செல்லாத புத்தர் மூன்றுமுறை இலங்கை வந்ததாகக் கதை சொல்லுகிறது. தனது 99 சகோதரர்களைக்கொன்றபின் அசோகர் ஆட்சிக்கு வந்தார் என்கிறது-புத்தசமயத்துக்கு மாறுவதற்கு முன் அசோகர் தீயவராக, கொடூரமானவராக இருந்தார் என அந்நூல் சொல்வதற்கு வரலாற்றுச் சான்றுகள் எதுவும் இல்லை என்கிறார் வின்சுடன் சுமித் அவர்கள்.
பல அறிஞர்களின் கருத்துப்படி அசோகர் இலங்கை பற்றித் தனது கல்வெட்டில் எதுவும் சொல்லவில்லை. அசோகருக்கு மகிந்த, சங்கமித்ர என்கிற மகனோ, மகளோ இருக்கவில்லை. அவர்கள் இலங்கை போகவும் இல்லை. மகிந்த அவருடைய தம்பி ஆவார். அவர்தான் தமிழகம் வந்தார். இலங்கை போனார். தமிழ்நாட்டில் இருந்துதான் புத்தமத நிறுவனங்கள் இலங்கைக்குப் பரவின. இவை வின்சுடன் சுமித் அவர்கள் தனது அசோகர் என்கிற நூலில் தரும் தரவுகளாகும்.
மகாவம்ச நூல் என்பது பௌத்தமத நம்பிக்கையாளர்கள் ஓதுவதற்கும், நினைவில் வைத்துக் கொள்ளவும், அவர்களுக்கு இன்பமும், பரவசமும் ஊட்டவும் எழுதப்பட்டது என்கிறார் அதனை கி.பி. 6ஆம் நூற்றாண்டு வாக்கில் எழுதிய ‘மகாநாம’ என்கிற புத்த பிக்கு. அந்நூல் புத்த மடாலங்களின் அத்தகதா கதைகளையும், புத்தமத மடாலயங்களுக்கு உதவிய மன்னர்கள், அவர்களின் உதவிகள் பற்றிய தரவுகள் முதலியனவற்றையும் கொண்ட கி.பி. 3ஆம் நூற்றாண்டு தீபவம்ச நூலைப் புதுப்பித்து எழுதப்பட்டதாகும் என்கிறார்
மேலும் தென்னிந்திய தமிழ் அரசர்கள் ஆரியர்களுக்கு எதிரான 1300 ஆண்டுகள் ஒற்றுமையாக போரிட்டுக் கொண்டிருக்கையில்
அசோகன் ஆட்சியில் அவனது செல்வாக்கிற்கு உட்பட்டு இங்கே நேரடியாக பெளத்தம் பரவியது என்பது வரலாற்று முரன்நகை. கலிங்க மன்னன் காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டு ஆரியர் எனப்படும் மோரியர்களுக்கு எதிரான தமிழரசுகளின் கூட்டணி 1300 ஆண்டுகளாக இருந்து வந்தமை குறித்து கூறுகிறது . அந்த
கலிங்க முன்னோர் உருவாக்கிய பித்துண்டா நகரம் அந்த கூட்டணியின் காவல் அரணாக இருந்து வந்தது எனவும் தமிழரசுகளின் ஐக்கிய கூட்டணியை உடைத்து பித்துண்டா நகரத்தை கைப்பற்றி அதனை கழுதை கொண்டு காரவேலன் உழுதான் எனவும் கூறுகிறது.
தமிழரசுகள் கி. மு. 600 முதலே பெரும் கடற்படை கொண்டு இந்தியாவின் கிழக்கு மேற்கு கடற்கரைகளையும் தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் தங்கள் வணிகக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
வின்சென்ட் சுமித் தமிழரசுகள் பல நூற்றாண்டுகளாக பெரும் கடற்படையை பராமரித்து வந்தன எனவும் மௌரியப் பேரரசில் கடற்படை இருக்கவில்லை எனவும் தனது அசோகர் - இந்தியாவின் பௌத்த பேரரசர் என்ற நூலில் கூறுகிறார்.
ஆகவே மௌரியப் பேரரசுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழரசுகள் பெரும் கடற்படையை கொண்டிருந்தன என வின்சென்ட் சுமித் உறுதி செய்கிறார். சுகாப், கென்னடி போன்றவர்களும் அதனை உறுதி செய்துள்ளனர்.
இந்த கடற்படை கொண்டு காரவேலனின் இறப்புக்குப் பின் மீண்டும் பித்துண்டா நகரத்தை தமிழரசுகள் கைப்பற்றி கொண்டன.
ஆகவே பிற்காலச் சோழர்களுக்கு 1500 வருடங்களுக்கு முன்பே தமிழரசுகள் பெரும் கடற்படையை பராமரித்து வந்ததோடு அதனைக் கொண்டு தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் இந்தியாவின் கிழக்கு மேற்கு கடற்கரைகளையும் தங்கள் வணிகக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அதுமாத்திரமல்ல முதல் கரிகாலன் கி. மு. 275 வாக்கில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை தோற்கடித்தான்.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கி. மு. 325 வாக்கில் ஈழத்தீவின் மாந்தையில் இருந்து இமயம் வரை படையெடுத்து வட ஆரியர் பலரையும் வென்று திரும்பியவன். பெரும்புகழ் பெற்றவன்.
இருந்தபோதிலும் அவன் தனது முதிய வயதில் தோற்கடிக்கப்பட்டான். அவன் தோற்றதாலும் முதுகில் அம்பு பாய்ந்ததாலும் நாணி வடக்கிருந்து உயிர் துறந்தான். இவன் தோற்றது குறித்தும் நாணி வடக்கிருந்து உயிர் துறந்தது குறித்தும் வெண்ணிக்குயத்தியார் கழாத்தலையார் மாமூலனார் ஆகிய புலவர்கள் பாடியுள்ளனர்.
இவன் இறந்த போது சேர நாடு முழுவதும் துக்கத்தில் ஆழ்ந்து போனது. உழவு கைவிடப்பட்டது, விழாக்கள் நிறுத்தப்பட்டன, முழவுகள் ஒலி அடங்கின, மக்கள் மதுவை மறந்தனர், யாழ் மீட்டப் படவில்லை என சேர நாட்டு மக்களின் துயரத்தை கழாத்தலையார் தனது புறம் 65ஆம் பாடலில் பாடுகிறார்.
குயவர் குலப் பெண்ணான வெண்ணிக்குயத்தியாரோ புறம் 66 ஆம் பாடலில்,வெற்றி பெற்ற கரிகாலனிடமே, 'நீ தோற்கடித்த சேரன் உன்னை விட நல்லவன் புகழ் பெற்றவன்' எனப் பாடுகிறார்.
இதுதான் பழந்தமிழ் நாட்டின் சிறப்பு எனவே இவர்களைத் தாண்டி அசோகனுடைய மோரிய அரசின் கூட்டணியாக தேவநாம்பியதீசன் என்ற கற்பனை பாத்திரம் இருந்திருக்க வாய்ப்பே கிடையாது. மேலும்
பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதியின் காலம் கி.மு. 320-290. அவனது பெருவழுதி நாணயங்களில் 'பெருவழுதி' என்ற பெயர் தமிழி எழுத்தில் இருமுறை பொறிக்கப்பட்டிருக்கும். இவன் பெரும் கடற்படை கொண்டு பல நாடுகளை கைப்பற்றியவன். இவனை நெட்டிமையார், காரி கிழார், நெடும் பல்லியத்தனார் ஆகிய மூவர் பாடியுள்ளனர். நடன காசிநாதன் இவனது நாணயங்களின் காலம் கி.மு. 4ஆம் 3ஆம் நூற்றாண்டு என உறுதி செய்துள்ளார். இதுவே தமிழக வரலாற்றில் கிடைத்த மிகத் தொன்மையான பெயர் பொறித்த நாணயமாகும்.
வலிமை வாய்ந்த பெரும் கடற்படை கொண்டு வணிகத்துக்கு எதிராக இருந்த பிற தேயத்து எதிரிகளின் கடற்கரை நகரங்கள் மீது தாக்குதல் தொடுத்து பெரும் செல்வத்தை கைப்பற்றியவன் என காரி கிழார் முதலான புலவர்கள் பாடியுள்ளார்.
இவன் காலத்தில் தான் பிராமணர்களுக்கு நிலம் தானமாக வழங்கப்பட்டது என பொய்யாக வேள்விக்குடி செப்பேடு கூறுகிறது. ஆகவே தமிழர் ஆதிக்கம் நிறைந்த ஈழத்தீவாயினும் சரி சேர,சோழ,பாண்டிய தேசங்களிலும் சரி தமிழர்களே இம்மதப் பரம்பலுக்கு காரணமாக இருந்தார்கள். ஆனால் அதற்கு காற்றிலே பறத்தல் , அட்சய பாத்திரம், போன்ற கற்பனை வளங்களை சிறகடிக்க விட்டார்கள். ஆனால் உண்மைகள் எப்போதும் உறங்குவதில்லை, அது காலம் கடந்தாயினும் ஓர்நாள் வெளிப்பட்டே தீரும்.