31/08/2024
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள திம்பம் மலைப்பகுதி தொடர் மழையால் பச்சை பசுமையாகக் காட்சியளிக்கிறது. சத்தி புலிகள் காப்பகம் திம்பம் மலைப்பாதை கடல் மட்டத்திலிருந்து 1200 மீட்டர் உயரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ளது. தமிழக - கர்நாடக மாநிலத்தை இணைக்கும் திம்பம் மலை பாதை 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்டது.
புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான புலி, சிறுத்தை, யானை, மான், காட்டு எருமை உள்ளிட்ட பல்வேறு வகை விலங்குகள் வாழ்கின்றன. வனப்பகுதி முழுவதும் அரிய வகை மரங்கள், மூலிகை செடி கொடிகள் உள்ளன. கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மரங்களில் இலைகள் துளிர்த்து வனப்பகுதி பச்சை பசுமையாக மாறிக் காட்சியளிக்கின்றது.
பசுமையான தாவரங்கள் நிறைந்த அழகான மலைகளும், பள்ளத்தாக்குகளும் அங்கு அவ்வப்போது பெய்யும் சாரல் மழையும் அதிகாலை, மாலை நேரங்களில் பனித்துளிகள் விழுவதும் என இதமான சூழல் காணப்படுகிறது. மாலை வேளையில் சொல்ல முடியாத அளவுக்கு அற்புதமான சூழல் நிலவுகிறது. இவ்வளவு இயற்கைகளுக்கும் இடையே வனப்பகுதி வழியாக செல்லும் ரோட்டில் வாகன ஓட்டிகள் பார்த்து ரசித்து செல்வதோடு ஆங்காங்கெ நின்று போட்டோ, செல்பி வீடியோ எடுத்து நண்பர்கள், உறவினர்களுக்கு சோஷியல் மீடியாவில் பரப்பி வருகின்றனர்.