01/02/2025
ஊடகவியலாளர்களை கொத்துக் கொத்தாக காவு வாங்கும் "லைகா"?
லைகா புரெடக்ஷன் (Lyca Production) தலைமையில் இலங்கையில் செயற்படும் ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர் பலர், முன்னறிவிப்பின்றி அண்மையில் திடீர் பணி நீக்க கட்டளையினை நிறுவனத்திடம் இருந்து எதிர்கொண்டுள்ளனர்.
இதனால், எதிர்பாராத இந்த அறிவிப்பானது பல சிரேஷ்ட மற்றும் இளம் ஊடகவியலாளர்களின் வாழ்க்கையினையும் எதிர்காலத்தையும் கேள்விக் குறியாக்கியுள்ளது.
ஊடகவியலாளர்கள் மாத்திரமின்றி, அத்துறையில் பணியாற்றும் புகைப்படப்பிடிப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் பெரும் இன்னல்களையும், சிரமங்களையும் எதிர்கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
எது வித முறையான ஆயர்த்தமுமின்றி கடந்த சில வருடங்களுககு முன்னர் பிரித்தானியாவை தலைமையமாக கொண்டு செயற்படும் அல்லிராஜா சுபாஷ்கரனின் லைகா நிறுவனம் ஊடகத்துறை தொடர்பான மோகத்தினாலும், பல அரசியல் காரணங்களினாலும் இலங்கையில் பல ஊடக நிறுவனங்களை ஆரம்பித்தது.
அது மாத்திரமின்றி, சுவர்ணவாஹினி போன்ற இலங்கையில் செயற்படும் பல ஊடக நிறுவனங்களையும் லைகா தனது பண பலத்தை வெளிப்படுத்தி வலைத்துப் போட்டது.
ஒரு சில வருடங்களுக்குள்ளேயே தனது பண பலத்தை வெளிப்படுத்தி, ஒருவன், ஆதவன் செய்தித்தளம், ஆதவன் தொலைக்காட்சி, ஆதவன் வானொலி, தமிழ் எப்.எம். வானொலி போன்ற தமிழ் ஊடக நிறுவனங்களையும் வாங்கியும், வலைத்தும் போட்டும் இருந்தது.
அதேநேரம், சுவர்ணவாஹினி தொலைக்காட்சி, மொனரா தொலைக்காட்சி, மெனரா செய்தித் தளம், ரன் எப்.எம். சித எப்.எம்., சிறி எப்.எம். போன்ற பல சகோதர மொழியான சிங்கள ஊடகங்களை வாங்கியும், வலைத்தும் போட்டும் இருந்தது.
இது தவிர ஆங்கில மொழியிலும் பல ஊடக நிறுவனங்களை முன்னெடுத்த வந்தது.
இந்த ஊடக நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் கண்காணிப்புக்களை லைகாவின் தலைமையில் இலங்கையில் பென் ஹோல்டிங்ஸ் ( Ben Holdings) தனியார் நிறுவனம் மேற்பார்வையிட்டு வந்தது.
இலங்கையில் தமது ஊடக செயற்பாடுகளை ஆரம்பித்ததிலிருந்து லைகா நிறுவனம், நாட்டின் பல ஊடகத்துறையில் கடமையாற்றும் சிரேஷ்ட மற்றும் இளம் ஊடகவியலாளர்களை கவர்ச்சியான வேலைவாய்ப்பு என பாசாங்கு செய்து தனது சூட்சி வலைக்குள் வலைத்துப் போட்டது லைகா.
ஆரம்பத்தில் தமது பண பலத்தைக் கொண்டு ஆடம்பரமான நடவடிக்கைகளை லைகா மேற்கொண்டிருந்தாலும், பின்னர் காலம் போககப் போக மெதுவாக தமது ஊடக தொழிலாளர்களின் நலன்களையும், கருத்துக்களையும் கேளாது பல திடீர் தீடீர் முடிவுகளை எடுத்தது.
நிறுவனத்தின் பொருளாதாரம் சரிவில் செல்கின்றது, பல சீர்திருத்தங்கள் அவசியம், நிதிவசதி இன்மை போதிய காரணங்களை சுட்டிக்காட்டி பல லைகாவின் பல ஊடக நிறுவங்களுக்கான மூடு விழாவினை ஆரம்பித்தது.
இதன்போது, ஊழியர்களின் நலன், அவர்களின் எதிர்காலம் தொடர்பான எந்தவொரு நிலைப்பாட்டினையும் அவர்கள் கருத்திற் கொள்ளவில்லை.
இதனால், தாம் இதுவரை காலமும் (பல வருடங்களாக) பணியாற்றிய ஏனைய ஊடக நிறுவனங்களை விட்டு லைகாவை நம்பி வைந்த ஊடகவியலாளர்கள் நிர்க்கதிக்கு உள்ளாகினர்.
ஒரு கட்டத்தில் கொத்து கொத்தாக பல சிரேஷ்ட மற்றும் இளம் ஊடகவியலாளர்களும் முகாமைத்துவத்தின் தன்னிச்சையான முடிவினால் லைகாவை விட்டு வெளியேறிய சந்தர்ப்பங்களும் அடிக்கடி நிகழ்ந்துள்ளது.
அது மாத்திரமன்றி, இலங்கையின் தொழில் அமைச்சிலும், நிறுவனத்துக்கு எதிராக ஊடகவியலாளர்களின் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளும் ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டே போகின்றது.
இந்த சந்தர்ப்பத்தில் கடந்த ஜனவரி மாதத்தின் இறுதிப் பகுதிகளில் லைகாவின் Southeye என்ற பிரிவின் கீழ் இயங்கும் ஒருவன் செய்தித்தளம், ஒருவன் டிஜிட்டல் பிரிவு, ஒருவன் பிளஸ் பிரிவு மற்றும் சகோதர மொழியில் இயங்கும் மொனரா செய்தித்தளம், மொனரா டிஜிட்டல் பிரிவு என்பவற்றை மூடும் தான்தோன்றித் தனமான திடீர் முடிவு அறிவிக்கப்பட்டது.
அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
அது மாத்திரமில்லாது, கடந்த பாராளுமன்றத் தேர்தலை இலக்கு வைத்து அதி விரைவாக எந்த முன்னோக்க திட்டங்களும் இன்றி ஆரம்பிக்கப்பட்ட ஒருவன் பத்திரைக்கான மூடுவிழாவும் கடந்த ஜனவரி மாத இறுதியில் நடந்தேறியது.
மேற்கண்ட ஊடக நிறுவனங்களை நம்பி தமது கனவுகளை ஆரம்பித்த ஊடகவியலாளர்கள் ஏராளம்.
எனினும் நிறுவனத்தின் தான்தோன்றித்தனமாக மேற்கண்ட அறிவிப்பினால் தொழிலாளர்கள் என்ன செய்வது என்று தெரியாது நிறுவனத்தின் முடிவினை ஏற்றுக் கொள்ளாது திண்டாடி வருகின்றனர்.
குறிப்பாக லைகாவை நம்பி, தாம் பல வருடங்களாக பணியாற்றிய இலங்கையின் ஏனைய முன்னணி ஊடக நிறுவனங்களை விட்டு வந்த பல ஊடகவியலாளர்கள் கடந்த நாட்களில் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் அங்கு இதுவரை காலமும் தொழில் புரிந்த பெயர் குறிப்பிடப்படாத பல ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
"லைகாவை நம்பி நாங்கள் வந்தோம், நாங்கள் பல வருடங்களாக பல முன்னணி ஊடக நிறுவனங்களில் பணியாற்றியுள்ளோம், இங்கு வந்து ஓரிரு மாதங்களுக்குள்ளேயே நாங்கள் பணிநீக்கம் தொடர்பான நிர்வாகத்தின் தன்னிச்சையான முடிவினை எதிர்கொண்டுள்ளோம், எங்களிடம் திறமை உள்ளது, பல வருடம் தொழிலாற்றிய அனுபவம் உள்ளது, இருந்தாலும் லைகாவின் இந்த செயல் எங்களின் பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளது, ஏனைய ஊடக நண்பர்களிடம் உரையாற்ற முடியாத சூழ்நிலையினையும் தலை குனிவையும் நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம், எங்களுக்கான எதிர்காலம் என்ன வேண்டு தெரியவில்லை, இதனால், கடும் மன உழைச்சலுக்கு உள்ளாகியுள்ள தொழிலாளர்கள் எதுவும் விபரீத முடிவினை எடுத்தால் அதற்கு லைகா நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும்" - என்றும் பலர் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதேநேரம், நிறுவனத்தில் ஒரு வருட காலத்துக்கும் அதிகமாக பணியாற்றும் பல தொழிலாளர்களும் நிரந்தர நியமனக் கடிதங்களை நிறுவனம் இதுவரை வழங்கவில்லை என்றும், அதேநேரம் நியமனக் கடிதங்களைக் கூட நிறுவனம் உரிய முறையில் இதுவரை வழங்கவில்லை என்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் தற்சமயம் வெளியாகியுள்ள நிறுவனத்தின் பதவி நீக்கம் தொடர்பான அறிவிப்பு, தொழிலாளர்களுக்கு எந்தவிதமான முறையான சலுகைகளையும் வழங்குவது தொடர்பில் எடுத்துரைக்கவில்லை.
பணி நீக்கப்படும், தொழிலாளர்கள் ஒரு புறம் இருக்க அங்கு ஏனைய ஊடக நிறுவனங்களில் பணி புரியும் ஏனைய தொழிலாளர்களும் அன்றாடம் தமது எதிர்கால நிலை, தொழில் உத்தரவாதம் குறித்த கேள்விகளுக்கு மத்தியில் கடமைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வாறு பணி நீக்கம் செய்யப்படுவதற்கான லைகாவின் பிரதான காரணம் யாதெனில், " நிறுவனம் நட்டத்தில் இயங்குகின்றது " என்ற போலியான வார்த்தைகள் ஆகும்.
இவ்வாறான ஒரு கருத்தினை முன்வைக்கும் லைகா நிறுவனம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது நூற்றுக் கணக்கான கோடிகளை செலவிட்டு ஒலி வாங்கி சின்னத்தில் பல வேட்பார்களை களமிறக்கி படு தோல்வியை சந்தித்து இருந்தது.
லைகாவுக்கு சொந்தமான கொழும்பு, வெள்ளவத்தை சப்பாரி ஹோட்டலில் நாடாளுமன்ற தேர்தல் காலத்தின் போத மேற்கொண்ட பொலிஸாரின் சோதனையில் வாக்குகளை பெறுவதற்காக வாக்காளர்களுக்கு வழங்கப்படவிருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களும் மீட்கப்பட்டிருந்தன.
அதேநேரம், நட்டத்தில் இயங்குவதாக கூறும் லைகா நிறுவனம் நூற்றுக் கணக்கான கோடிகளை தென்னிந்திய சினிமாவிலும் செலவிட்டு வருகின்றது என்பதை மறைத்து விட முடியாது.
எனவே, லைகாவின் தான்தோன்றித்தனமான முடிவுகள் மற்றும் பணத் திமிரினால் இலங்கையின் பல முன்னணி ஊடகவியலாளர்கள் மற்றும் இளம் ஊடகவியலாளர்கள் தங்களின் எதிர்காலத்தை தொலைத்து விட்டு வாழ்கின்றனர் என்பது தான் நிதர்சனமாகியுள்ளது.
எனவே, லைகா நிறுவனத்தின் இந்த அட்டூழியங்களுக்கு வெகுஜன ஊடக அமைச்சும், தொழிலாளர் அமைச்சும் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அங்கு பணியாற்றும் ஊடகவியலாளர்களும், தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.