25/07/2025
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை ரூ.7,500 ஆக உயர்வு – 10 ஆண்டு தேசிய செயல் திட்டம் உருவாக்கம்
மாற்றுத்திறனாளிகளுக்காக வழங்கப்படும் மாதாந்த உதவித் தொகையை எதிர்காலத்தில் ரூ.5,000 இலிருந்து ரூ.7,500 வரை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரச தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், அடுத்த 10 ஆண்டுகளுக்கான மாற்றுத்திறனாளிகள் தொடர்பான தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசாங்க தகவல்கள் திணைக்களத்தில் நேற்று (ஜூலை 24) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்,
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா (Sugath Wasantha de Silva) உரையாற்றியபோது இந்த தகவலை வெளியிட்டார்.
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 8.7% பேர் மாற்றுத்திறனாளிகள் என தெரிவித்து, அவர்கள் இல்லாமல் ஒரு வளமான சமுதாயத்தை உருவாக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தின்படி, மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும்,
அவர்களது வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் நோக்கில் கட்டுமான, நிதி, காப்பீட்டு உள்ளிட்ட துறைகளில் புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கான வீடமைப்புத் திட்டங்களில் வழங்கப்படும் நிதி உதவியை அதிகரித்தல் . மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்துதல் ஆகியவை முக்கியமாக செயல்படுத்தப்பட உள்ளன. இந்த திட்டங்கள் எதிர்காலத்தில் மேலும் விரிவுபடுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.