13/08/2025
நல்லூர் முருகா நீ தங்கத்தேர் ஏறி வாறாய்.
நான் செம்மணியில் புதைந்து கிடக்கிறேன்!
சந்நிதியானே நீ தினந்தோறும் அன்னதானம் உண்கிறாய்.
நான் செம்மணியில் பசியோடு கிடக்கிறேன்!
வல்லை முனியனே நீ வெளிச்சத்தில் இருக்கிறாய்.
நான் புதைகுளிக்குள் இருட்டில் கிடக்கிறேன்!
ஏசு பிரானே நீ மடுமாதா கையில் இருக்கிறாய்.
நானோ உயிரற்ற என் தாயின் மார்பில் கிடக்கிறேன்!
எனக்கான நீதியும் எனக்கடியில் புதைக்கப்பட்டுள்ளது!
அது என் பால்போச்சிக்கு கீழே இருக்கக்கூடும்.
கவனமாக தேடுங்கள்!
தோண்டுங்கள் ...
இன்னும் அகலமாக
இன்னும் கொஞ்சம் தள்ளி என் அப்பாவின் எலும்புக்கூடு கிடக்கும்!
அவதானமாக தோண்டுங்கள்.
அப்பாவின் வலக்காலை முறித்தார்கள்.
அப்பாவுக்கு நோகும்.
இன்னும் கொஞ்சம் தள்ளி...
என் அக்கா இருப்பாள்.
கொஞ்சம் பொறுங்கோ.
அதுக்குமுதல்...
அவளின் சிவத்த பூச்சட்டை இன்னும் கொஞ்சம் தள்ளி புதைக்கப்பட்டிருக்கும்.
தேடி எடுத்து முதலில் அவளிடம் கொடுங்கள்.
இடப்பக்கமாக தோண்டுங்கள்.
என் அண்ணா இருப்பான்.
அவனுக்கு அருகில்தான் சின்னக்கா இருப்பாள்.
கடைசியாக அவள் அண்ணாவின் கைகளில்தான் இருந்தாள்.
நான் அம்மாவோடுதான் இருக்கிறேன் என்று சொல்லிவிடுங்கள்.
பல ஆண்டுகளாக என் கையில்
கிடக்கும் விளையாட்டு பொம்மையை என் சின்னக்காவிடம் கொடுத்துவிடுங்கள்!
புதைக்கும் போது;
அது அவள் கையில் தான் இருந்தது.
நான் அழுகிறேன் என்று அதைப்புடுங்கி என்னிடம் கொடுத்தார்கள்.
அது அவளிடமே இருக்கட்டும்.
ஏனெண்டால்;
அப்ப எனக்கு ஒரு வயசு.
இப்ப எனக்கு முப்பது வயசு!!!
நான் இனிமேல் அழமாட்டேன்.
#தமிழ்ப்பொடியன்