
07/21/2025
தந்தையின் பெயர்
==============
குழந்தையை பெற்றுக் கொள்வது என்பது திருமணம் செய்து கொள்ளும் பலருக்கும் இருக்கும் ஒரு பொதுக் கனவு. இது உலகில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் பொருந்தும். ஆனால் இந்த விடயம் ஆண்களுக்கு அவர்களின் ஆண்மைக்கு அடையாளமாகவும் பெண்ணிற்கு தன்னை தகுதியை நிரூபிக்கும் சுட்டியாகவும் எமது சமூகத்தில் பார்க்கப்பட்டு வருகிறது.
அதேவேளை, அவ்வாறு திருமணம் ஆகாத சூழலில் ஒரு பெண் கர்ப்பம் தரித்தால் அந்தப் பெண் பழிச்சொல்லுக்கு ஆளாவதுடன் பிறக்கும் பிள்ளையும் காலத்திற்கும் கேலிக்கும் அவமானப்படுத்தலும் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இது தெற்காசிய சமூகத்தில் மிகவும் ஆழமாக புரையோடிப் போன பிற்போக்குத்தனமான ஒரு விடயமாக இன்றும் இருந்து வருகிறது.
இவ்வாறு திருமணம் செய்யாத நிலையில் பிள்ளை பெற்றுக் கொள்ளும் அனைத்துக் பெண்களையுமே ஒழுக்கமற்றவர்கள் என்று குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது மிகவும் தவறான பார்வையே. குறிப்பாக காதலிக்கும்போது கர்ப்பம் தரிக்கும் பெண்களும் ஏற்கனவே திருமண ஆண்களால் ஏமாற்றப்பட்ட பெண்களும் பாலியல் பலாத்காரத்தினால் கர்ப்பமான பெண்களும் குற்றவாளிகள் இல்லை என்பதை எமது சமூகம் புரிந்து கொள்வதில்லை. அதனாலேயே இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் பல குழந்தைகள் ஆலய வாசல்களிலும் பொது இடங்களிலும் அனாதைகளாக விட்டுச் செல்லப்படுகிறார்கள்.
இவ்வாறான சமூகப் பின்னணியுள்ள ஒரு நாடான இலங்கையில் தற்போது பதவியில் உள்ள அரசினால் பிறந்த பிள்ளைக்குப் பெயரிடல் தொடர்பாக ஒரு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் பெற்றோரின் திருமணப் பதிவு விபரம் தேவையில்லை, தந்தையின் பெயரைக் குறிப்பிடவும் அவசியம் இல்லை என்பதுதான் அந்த அறிவித்தல்.
அந்த அறிவித்தல் தற்போது சில கலாச்சாரக் காவலர்களையும் ஆணாதிக்க சமூகத்தைக் கட்டிக் காக்க நினைப்போரையும் கவலைக்குள்ளாக்கியிருப்பதை சமூக வலைத்தளப் பதிவுகள், கருத்துகள் மூலம் அறிய முடிகிறது. “இனிப் பெண்கள் திருமணம் செய்வதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள்; அப்பா இல்லாத பிள்ளைகள்தான் அதிகரிக்கப் போகிறது; இவ்வாறு செய்தால் பிள்ளையின் நிலை என்னவாகும்?” என்று அநியாயத்திற்குக் கவலைப்படுகிறார்கள்.
எமது கலாச்சாரக் காவலர்களுக்குப் பிடிக்காவிட்டாலும் குறித்த பெண்கள், அவர்களின் குழந்தைகள் எதிர்கால நலன் குறித்து நோக்கும்போது இதனை நல்லதொரு நகர்வாகவே பார்க்க முடிகிறது. ஏனெனில், இது பச்சிளம் குழந்தைகள் அனாதைகளாக வீசப்படுவதையும் வளரும்போது “உன் தந்தை யார்?” என்று சமூகத்தால் காயப்படுத்தப்படுவதையும் கணிசமாகக் குறைக்க உதவக் கூடும். அந்தப் பெண்களும் தமது பிள்ளைகளை தைரியமாக வளர்க்கவும் உதவக் கூடும்.
ஆனால் இந்த விடயம் நடைமுறைப்படுத்தப்பட்டால், இவர்கள் கவலைப்படுவது போல இந்த அணுகுமுறை பெண்களை முன்னரை விட அதிகம் பாலியல் உறவில் ஈடுபடவும் கண்டபடி பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளவும் வழிவகுக்கும் என்பது ஒரு முட்டாள்தனமான ஆருடம் கூறல் மட்டுமே.
பழமையில் ஊறி அங்கேயே தேங்கி நிற்போருக்கும், பிள்ளையைப் பெற்று, பிள்ளையின் பெயரில் தனது பெயரை ஒட்டி விடுவதில்தான் தனது ஆண்மை இருக்கிறது என்று நம்பும் “ஆண்”களுக்கும் இது அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் நல்ல விடயங்களை ஏற்று நடைமுறைப்படுத்துவதே ஒரு சமுதாயம் முன்னோக்கி நகர உதவும் என்பதை இதனை எதிர்ப்போர் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்னும் சிலர், இந்த விடயத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு திருமணமானவர்களுக்கும் இதே விடயத்தை நடைமுறைப்படுத்துவார்கள் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மகளிர் விவகார அமைச்சர் அவ்வாறு எதனையும் சொல்லவில்லை. ஆனால் இவ்வாறு வாய்க்கு வந்தபடி பேசுபவர்கள் சந்தேகப்பட்டு சொல்லுவதை நடைமுறைப்படுத்தினால் அதுவும் நல்லதுதான்.
- வீமன் -
பின்னிணைப்பு:
++++++++++++
தாயின் பெயரை பிள்ளையின் குடும்பப் பெயராகப் பயன்படுத்துவது ஏற்கனவே பல நாடுகளில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஒரு விடயம்தான்.
• கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, நோர்வே, சுவீடன், டென்மார்க் ஆகிய நாடுகளிலும் தாயின் பெயரை மட்டும் பயன்படுத்தும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
• கிரீஸில் இது 1983 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
• ஸ்பெயின் மற்றும் தென்னமெரிக்க நாடுகளில் பெற்றோரின் விருப்பம் போல தந்தை அல்லது தாயின் பெயரை தெரிவு செய்யும் உரிமை 1999 முதல் நடைமுறையில் இருக்கிறது.
• பிரான்ஸ், ஜெர்மனியிலும் இது நடைமுறையில் உள்ளது.
• பிலிப்பைன்ஸில் தந்தை யார் என்று தெரியாத நிலையில் தாயின் பெயரைப் பயன்படுத்தும் நடைமுறை இருக்கிறது.
• இஸ்ரேலுக்கு வெளியே வாழும் சில யூதர்கள் மத்தியிலும் தாயின் பெயரை வழங்கும் நடைமுறை உள்ளது.
• இந்தோனேசியாவில், மேற்கு சுமாத்திராவில் இன்றும் தாய்வழிச் சமூகமாக தாயின் பெயரே சந்ததிக்குக் கடத்தப்படுகிறது.
• இந்தியாவின் மேகாலயாவிலும் தாயின் பெயரே பிள்ளைகள் வழி கடத்தப்படுகிறது.
• சீனாவில் Mosuo சமூகத்திலும் இந்த நடைமுறை இருக்கிறது.
இவ்வாறு இந்தப் பட்டியல் நீண்டு செல்கிறது. ஆர்வமுள்ளவர்கள் தேடிப் பாருங்கள்.