10/07/2025
சர்வதேச ஆசிரியர் நாள். ( தமிழ் கட்டுரை )
🎓ஒரு தேசத்தின் எதிர்கால முதலீடு ஆசிரியர்களே. ஆசிரியர்கள் மனித சமூகத்தின் வடிவமைப்பாளர்கள். சமூகத்தில் அனைவரும் சமம் என்பதைக் கல்விமூலம் உணர்த்தி, பகுத்தறிவு, நல்லொழுக்கம், கலை, கலாச்சாரம், மாண்பு, பண்பு, திறன் அனைத்தையும் கற்பித்துச் சான்றோராக உருவாக்குகிறார்கள். இவர்களின் தன்னலமற்ற ஈடுபாடுதான் ஒரு சமூகத்தைச் சிறந்தமுறையில் வடிவமைக்க உதவுகின்றது.
🎓ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு நூலகம். நாட்டின் எதிர்கால வளர்ச்சி அந்நாட்டின் வகுப்பறையில்தான் உருவாக்கப்படுகின்றது. ஒரு தேசத்தின் வளமான எதிர்காலத்தைத் தாங்க இருக்கும் தூண்களுக்கு வைரம் பாய்ச்சுகின்றனர். ஆசிரியரிடம் பழகும் மாணவனுக்கு அறிவின் அற்புத வளர்ச்சியும் பெருமையும் தனித்துவமும் கிடைக்கின்றன.
ஆசிரியர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்லர். மாறாக உயிரூட்டுபவர்கள். "எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு" என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர்கள்.
🎓மாதா,பிதா,குரு,தெய்வம் என்பதில் தாய் தந்தைக்கு அடுத்ததாக ஆசிரியர்களே முதன்மையானவர்கள். அன்னையும் தந்தையும் குழந்தையை உலகிற்குத் தருகின்றனர். ஆனால் ,ஆசிரியர் ஒருவர் உலகத்தையே குழந்தைக்குத் தருகின்றார். கருவறையில் இருந்து வெளிவரும் ஒரு குழந்தைக்குத் தாய் உலகை அடையாளம் காட்டுகின்றாள். அந்த உலகைப் புரிந்து பண்பட்டவனாய் வாழும் கலையை ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்து மனிதனை மனிதனாக மாற்றும் வேலையைச் செய்கின்றனர். சிறந்த ஆசிரியர்களினால்தான் உலகம் இன்றளவும் பல்துறை அறிஞர்களைப் பெற்றுக்கொண்டிருக்கின்றது.
🎓 ஆசிரியர் என்பவர் கற்பித்தால் மட்டும் போதாது அதை முழுவதும் நம்புபவராகவும் அதன்படி நடப்பவராகவும் இருக்கவேண்டும். தங்கள் பணியில் தியாக உணர்வுடனும் பொறுப்புணர்வுடனும் பணியாற்ற வேண்டும். அண்மைக் காலங்களில் நடக்கும் ஒரு சில ஆசிரியர்களின் தவறான செயல்கள் மாணவ சமுதாயத்திலும் பெற்றோர் மத்தியிலும் அச்ச உணர்வை ஏற்படுத்தி ஆசிரியர் மீதுள்ள நன்மதிப்பைக் குறைக்கின்றன. மாணவர் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் காயப்படுத்தும் இடமாக வகுப்பறைகள் மாறக்கூடாது. ஆசிரியர் மாணவர் உறவு, வலுச்சேர்க்கும் எதிர்கால சமூகத்தை வடிவமைக்கும் உறவாக அமையவேண்டும்.
🎓எனவே, ஆசிரியர்களின் தாக்கம் என்றுமே அழியாது. அவர்கள் விதைத்த விதைகள் பல தலைமுறைகளுக்குப் பிறகும் முளைக்கும். நாம் வாழ்க்கையின் தொடக்கம் முதல் இறுதிவரை எப்போதும் ஒருவரிடமிருந்து ஏதனும் ஒன்றைக் கற்றுக்கொண்டுதான் இருக்கின்றோம். அப்படி ஆசிரியராகத் திகழும் அனைவருக்கும் ஆசிரியர் நாள் வாழ்த்துகள்.🙏