24/10/2024
இயல்பான நடிப்புக்கு
இலக்கணமானவர்
இலட்சிய நடிகர்
*எஸ்.எஸ்.இராஜேந்திரன்!*
நினைவு நாள் கட்டுரை.
(கரிகாலன்)
தமிழ்த் திரையுலகில் தனக்கென்ற ஒரு பாணியை வளர்த்துக்
கொண்டு தனது நடிப்புத் திறமையால் ஏராளமான ரசிகர்களை தன் வசம் ஈர்த்தவர் இலட்சிய நடிகர் என்று புகழப்பட்ட, 'எஸ்.எஸ். இராஜேந்திரன்' ஆவார்.
1928 ஆம் ஆண்டில் பிறந்தவரான எஸ்.எஸ்.ராஜேந்திரன்,
சிறு வயது முதற் கொண்டே மேடை நாடகங்களில் தீவிர
ஈடுபாடு கொண்டு, நடிப்புத் துறையில் கால் பதித்தார். அந்தக் காலத்தில் பிரபலமான பல மேடை நாடகங்களில் முக்கியப் பாத்திரங்களில் அவர் தோன்றினார். தமிழை அருமையாகப் பேசி அற்புதமாக நடித்ததோடு மட்டுமின்றி, சொந்தக் குரலில் நன்றாகப் பாடும் ஆற்றலும் அவரிடம் குடி கொண்டிருந்ததால்,
குறுகிய காலத்திலேயே அவர் புகழ் பெற்றார்.
1947 ஆம் ஆண்டில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின்
நாடகமான ‘பைத்தியக்காரன்' திரைப் படமாக உருவாக்கப்பட்ட
போது, எம்ஜிஆர், சகஸ்ரநாமம், கலைவாணர் ஆகியோர்
முக்கியப் பாத்திரங்களின் நடிப்புக்கு மத்தியில், எஸ்.எஸ்.ஆர் அப்படத்தில் ஒரேயொரு காட்சியில் மட்டுமே தோன்றி நடித்தார்.
அவரிடம் குடிகொண்டிருந்த திறமையை அக்கால
படத் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் அறிந்திருந்த நிலையில்,
அவருக்கு கிட்டிய சில
பட வாய்ப்புகள் துரதிர்ஷ்டவசத்தால்
கை கொடுக்கவில்லை.
1948 ஆம் ஆண்டில் எஸ்.ஏ.சாமியும் கலைஞர் கருணாநிதியும் இணைந்து திரைக் கதை வசனம் எழுதியிருந்த ‘அபிமன்யூ'
படத்தில் அபிமன்யூவாக நடிக்கும் வாய்ப்பு முதலில்
எஸ்.எஸ்.ஆருக்கு கிட்டி, பின்னர், துரதிர்ஷ்டவசமாக நழுவியது. அப்படத்தில் எஸ்.எம்.குமரேசன் என்ற நடிகர் ஒப்பந்தமானார்.
இருப்பினும் மனம் தளராத எஸ்.எஸ்.ஆர், தொடர்ந்து பற்பல மேடை நாடகங்களின் மூலம்
தமது அபார நடிப்பை தமிழ்
ரசிகர்கள் மத்தியில் நன்கு வெளிப்படுத்தி வந்தார்.
புலி மாநகர் புலிக்குட்டி என்று அழைக்கப்பட்ட, அக்கால நாயக நடிகர் பி.எஸ்.கோவிந்தனின் மேடை நாடகங்களில்
சில காலம் நடித்து வந்த எஸ்.எஸ்.ஆர், 1948 இல்
கோவிந்தன் கதா நாயகனாக நடித்திருந்த 'ஸ்ரீ ஆண்டாள்'
என்றப் படத்தில் பின்னணி பாடும் வாய்ப்பை பெற்றார். அந்தப்
படத்தில் "இன்ப உலகில் மன்மதன் பூங்கணை" என்றப் பாடலை
எஸ்.எஸ்.ஆர் தனது குரலில் பாடி பின்னணி கொடுத்தார். அதற்குப் பின்னர் எஸ்.எஸ்.ஆருக்கு திரைப்பட வாய்ப்புகள்
ஏனோ கை கொடுக்கவில்லை.
1952 ஆம் ஆண்டில் நேஷனல் பிக்சர்ஸ் வெளியீடாக, பெருமாள் முதலியார் தயாரித்த 'பராசக்தி' படத்தில்,
சிவாஜி கணேசனுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு எஸ்.எஸ்.ஆருக்கு கிட்டியது. அந்தப் படத்தில் சிவாஜி ஏற்றிருந்த பாத்திரத்தை எஸ்.எஸ்.ஆருக்கு
வழங்க சிலர்
பரிந்துரைத்த நிலையில், பேரறிஞர் அண்ணாவின்
தலையீட்டால், சிவாஜியே முன்னணி கதா நாயகனாக நடித்தார். கலைஞர் கருணாநிதியின் கனல் தெறிக்கும்
வசனங்களை, சிவாஜிக்கு ஈடு கொடுத்து, எஸ்.எஸ்.ஆர்
அப்படத்தில் பேசி நடித்திருந்ததை பலர் நன்கு கவனித்தனர்.
தொடர்ந்து அதே ஆண்டில், 'பணம்' படத்தில் சிவாஜியுடன்
எஸ்.எஸ்.ஆர் மீண்டும் நடித்தார். 1954 ஆம் ஆண்டில் கலைஞரின் அருமையான வசனங்களைத் தாங்கி வெளி வந்த,
‘அம்மையப்பன்'
படத்தில், எஸ்.எஸ்.ஆர்
கதா நாயகனாக
முதன் முதலில் தோன்றினார். இந்தப் படத்தின் கதை, அதே ஆண்டில் கவிஞர் கண்ணதாசனின் கை வண்ணத்தில்
‘சுகம் எங்கே' என்றப் பெயரில் வெளி வந்ததால், அம்மையப்பன் எதிர்ப்பார்த்த அளவுக்கு வெற்றி பெறமால் போனது.
பின்னர் பேரறிஞர் அண்ணாவின் கதை வசனத்தில், காசிலிங்கம் இயக்கத்தில் வெளி வந்த, ‘சொர்க்கவாசல்'
என்றப் படத்தில்
நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமியும் எஸ்.எஸ்.ஆரும் இரட்டைக் கதா நாயகர்களாக நடித்தனர். தொடர்ந்து
1954 ஆம் ஆண்டிலேயே கலைஞரின் வசனத்தில் மற்றொரு படைப்பாக மக்களைக் கவர்ந்த ‘மனோகரா' படத்தில், எஸ்.எஸ்.ஆர் மீண்டும்
சிவாஜியுடன் இணைந்து நடித்து, தனது ஆற்றலை
வெளிப்படுத்தினார்.
1954 இல் மீண்டும்
ஒரு சகாப்தமாக
வெற்றிக் கொடி
நாட்டிய, நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் ‘இரத்தக் கண்ணீர்'
படத்தில், எஸ்.எஸ்.ஆர் அவரின் நண்பனாக முக்கியப் பாத்திரத்தில் நடித்தார். அதற்குப் பிறகு 1956 ஆம் ஆண்டில் கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் முரசொலி மாறன் கதை வசனம் எழுதியிருந்த, ‘குலதெய்வம்' படத்தில் கௌரவமான
கதா நாயகனாக எஸ்.எஸ்.ஆர் நடித்தார். அந்தப் படத்தின் மூலமே இலட்சிய நடிகை என்று புகழப்பட்ட அவரின்
இரண்டாவது மனைவி விஜயகுமாரி, அவருடன் இணைந்து நடித்தார். இந்தப் படம் நல்ல வெற்றியோட்டம் கண்டது.
1956 இல் அறிஞர் அண்ணாவின் கதையில், கலைஞர்
வசனமெழுதியிருந்த ‘ரங்கோன் ராதா' படத்தில் மீண்டும்
சிவாஜியுடன் இணைந்து எஸ்.எஸ்.ஆர் நடித்தார். அதே வருடம் கலைஞரின் வசனத்தில் மீண்டும் சிவாஜியுடன்,
'ராஜா ராணி' என்றப் படத்திலும் எஸ்.எஸ்.ஆர் தோன்றினார். 1957 இல் தேசிய விருதினை வென்று பெரும் வெற்றி
பெற்ற, ‘முதலாளி' படத்தில் எஸ்.எஸ்.ஆர் திறம்பட நடித்தார்.
பின்னர் 1958 இல் ‘அன்பு எங்கே' என்ற
மற்றொருப் படம்
அவருக்கு புகழ் சேர்த்தது.
பின்னர் வெளி வந்த ‘சம்பூர்ண ராமாயணம்' படத்தில் நடிப்பதற்கு விடுக்கப்பட்ட அழைப்பை எஸ்.எஸ்.ஆர் ஏற்கவில்லை. திராவிடர் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்ததால், புராணப் படமாக உருவான அதில் நடிப்பதற்கு மறுத்தார். இருப்பினும் 1958 இல் வெளி வந்த, ‘திருடர்கள் ஜாக்கிரதை', ‘தேடி வந்த செல்வம்', ‘பிள்ளைக்கனியமுது', ‘பெற்ற மகனை விற்ற அன்னை',
‘மகனே கேள்', போன்றப் படங்களின் மூலம் எஸ்.எஸ்.ஆர், தமிழ் ரசிகர்களின் இதயங்களை
கொள்ளை கொண்டார்.
தொடர்ந்து 1959 இல்
‘ஓடி விளையாடு பாப்பா', ‘அல்லி பெற்ற பிள்ளை', 'கல்யாணிக்குக் கல்யாணம்', ‘சிவகங்கைச் சீமை',
‘தலை கொடுத்தான் தம்பி', ‘நாட்டுக்கொரு நல்லவள்',
‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை', ‘பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்'
'புதுமைப் பெண்',
‘தேடி வந்த செல்வம்' ‘தை பிறந்தால் வழி பிறக்கும்' போன்றப் படங்களில் எஸ்.எஸ்.ஆர் நன்கு சோபித்தார்.
'புதுமைப் பெண்' படத்தில், "கைத்தறி நெசவுத் தொழில்" என்றப் பாடலை சொந்தக் குரலில் பாடி நடித்தார்.
1960 ஆம் ஆண்டில்
‘தங்க ரத்தினம்' என்றப் படத்தை, சொந்தமாக இயக்கி நடித்தார். பிறகு ‘சங்கிலித் தேவன்'
என்றப் படத்திலும்,
மீண்டும் சிவாஜியுடன் 'தெய்வப்பிறவி',
‘பெற்றமனம்' ஆகியப் படங்களில் நடித்தார்.
அதே ஆண்டில்
எம்ஜிஆருடன் முதன் முதலாக, ‘ராஜா தேசிங்கு' என்றப் படத்தில் இணைந்து நடித்தார்.
1961இல் 'குமுதம்',
‘பணம் பந்தியிலே',
‘மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே' போன்றப் படங்களிலும், 1962 இல் மீண்டும் சிவாஜியுடன் ‘ஆலயமணி', ‘செந்தாமரை', ‘குங்குமம்' ஆகியப் படங்களில் நடித்தார்.
அதே வருடத்தில் ‘தெய்வத்தின் தெய்வம்', ‘சாரதா', ‘முத்து மண்டபம்' போன்றப் படங்களில் கதா நாயகனாக அற்புத நடிப்பை வெளிப்படுத்தினார்.
1962 ஆம் ஆண்டில்
திமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.அந்த வருடத்தில் 'மாமியார் மெச்சிய மருமகள்' என்ற படத்தில் தோன்றினார்.
1963 ஆம் ஆண்டில் 'ஆசை அலைகள்' ‘கைதியின் காதலி',
‘காட்டுரோஜா', ‘நீங்காத நினைவு' 'நானும் ஒரு பெண்'
ஆகியப் படங்களிலும், 'காஞ்சித் தலைவன்' படத்தில் மீண்டும் எம்ஜிஆருடன் இணைந்து எஸ்.எஸ்.ஆர் நடித்தார்.
1964 இல் தானே இயக்கி 'அல்லி' என்றப் படத்தில்
நாயகனாக நடித்தார். பின்னர் ‘உல்லாசப் பயணம்',
‘வழி பிறந்தது' போன்றப் படங்களிலும், மீண்டும் சிவாஜியுடன் ‘கை கொடுத்த தெய்வம்', ‘பச்சை விளக்கு',
'தாயே உனக்காக' ஆகியப் படங்களிலும் அவர் இடம் பெற்றார்.
1964 இல் கலைஞரின் கதை வசனத்தில் 'பூம்புகார்' படத்திலும்
1965 இல் 'பூமாலை' படத்திலும், 1966இல் 'அவன் பித்தனா', 'மறக்க முடியுமா', 'மணிமகுடம்' முதலியப் படங்களிலும் எஸ்.எஸ்.ஆரின்
திறமையான நடிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. 1965 இல் ‘ஆனந்தி', ‘காக்கும் கரங்கள்', ‘படித்த மனைவி', ‘வழிகாட்டி'
போன்றப் படங்களிலும் மீண்டும் சிவாஜியுடன் ‘சாந்தி', ‘பழனி' ஆகியப் படங்களிலும் எஸ்.எஸ்.ஆர் தோன்றினார். 'தேடி வந்த திருமகள்' படத்தில் ரவிச்சந்திரனுடன் இணைந்து நடித்தார்.
1966 இல் 'மணி மகுடம்' படத்தை தானே இயக்கி, அப்படத்தில்
"தக்கதோர் அபிமான ஞானமணிசீலா"
என்றப் பாடலை சொந்தக்
குரலில் பாடியிருந்தார். ‘மறக்க முடியுமா' படம் எஸ்.எஸ்.ஆரின்
உருக்கமான நடிப்பை நன்கு வெளிப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து கலைஞருடன் அவருக்கு ஏற்பட்ட அரசியல் பிணக்கு,
அவரை திரைப் படத் துறையிலிருந்து சற்று விலக்கி வைத்தது.
இருப்பினும் ‘எதிரொலி’, 'வைராக்கியம்’, 'குலவிளக்கு’
முதலியப் படங்களிலும், பின்னர் சற்று இடை வெளிக்குப் பின்னர்
1972 இல் ‘தங்கதுரை' என்றப் படத்தில் ஏ.வி.எம்.ராஜனுடன்
எஸ்.எஸ்.ஆர் நடித்தார். பின்னர் மீண்டும் திரையுலகிலிருந்து
ஒதுங்கி, அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்டு அதில் நாட்டம் செலுத்தினார். சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு 1982 இல் நடிகை
லதாவுடன் இணைந்து 'இரட்டை மனிதன்' என்றப் படத்தில், இரட்டை வேடங்களில் நடித்தார்.
பின்னர் மீண்டும் சில காலம் திரையுலகில் தலை காட்டாமல் அரசியலில் முழுவதுமாக ஈடுபடலானார். 1985இல் நடிகர் மோகன் நாயகனாக நடித்த ‘அன்பின் முகவரி' படத்தில் நடித்தார். அதற்குப் பின்னர் நீண்ட காலமாக நடிக்காமல் ஒதுங்கியிருந்த எஸ்.எஸ்.ஆர், அரசியலில் தீவிர ஈடுபாடு காட்டினார். மலேசியாவுக்கு பலமுறை வந்து சென்ற நடிகர்களில்
எஸ்.எஸ்.ஆர் குறிப்பிடத்தக்கவர். சிறந்த தமிழ் உச்சரிப்பால்
ஏராளமான தமிழ் ரசிகர்களை தன்வசம் ஈர்த்திருந்தார்.
தொடர்ந்து 2000ஆம் ஆண்டுகளில் ஓரிரு படங்களில் சிறு
வேடங்களில் நடித்தார். நடிகர் சரத்குமார் நடித்த ‘ரிஷி' மற்றும்
சிலம்பரசன் நடித்த 'தம்' போன்றப் படங்களில் அவரைக் காண முடிந்தது. இறுதியாக 2008 ஆம் ஆண்டில் ‘தீக்குச்சி’ என்றப் படத்தில் நடித்திருந்தார். 2012ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவர் உடல் நலிவுற்று தள்ளாமை காரணமாக சக்கர நாற்காலியில்
வாழ்நாளைக் கழித்து வந்தார்.
இதற்குப் பின்னர் அடிக்கடி உடல் உபாதைகளால் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில், 2014 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 24 ஆம் நாள் அவர் விண்ணகம் அடைந்தார். எஸ்.எஸ்.ஆர் மறைந்து விட்டாலும், அவரின் அற்புதமான நடிப்பைக் கொண்டிருக்கும் பல திரைப்படங்கள் அவரின் நினைவலைகளை நம் கண் முன்னே கொண்டு வருவது திண்ணம். எஸ்.எஸ்.ராஜேந்திரனின் நினைவு தினம் இன்று.