
28/07/2025
கங்கை கொண்ட படலம்:-
இராசேந்திர சோழனின் இலங்கை மீதான படையெடுப்பில் ஈரூடகத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையினையும் , அந்த ஈரூடகத் தாக்குதலில் யானைப் படையும் கடல் மூலமாகத் தரையிறக்கப்பட்டமையினையும் முந்திய பதிவில் பார்த்திருந்தோம்; அதற்கு அடுத்த ஈரூடகத் தாக்குதலினை இப் பதிவில் பார்ப்போம். இலங்கை முழுவதையும் வெற்றி கொண்ட இராசேந்திரன் வட இந்தியாவுக்கும் படையெடுத்துச் சென்று, பல நாடுகளை வென்று கங்கை நீரினைக் கொண்டு வந்து சோழகங்கம் எனும் ஏரியினை அமைத்தமையும், கங்கை கொண்ட சோழபுரம் எனும் தலைநகரினைப் புதிதாக அமைத்ததனையும் அறிந்திருப்போம். இப் படையெடுப்பில் வெற்றி கொள்ளப்பட்ட சில நாடுகளைக் கீழே காண்க.👇
* சக்கரக்கோட்டம் { இன்றைய சத்தீசுகர் (Chhattisgarh) மாநிலத்தின் ஒரு பகுதி.
*மதுரா {இன்றைய பிகார் மாநிலத்தில் உள்ள மதுரா}
* நாமனைக்கோனை {இன்றைய ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதி}
* பஞ்சப்பள்ளி { இன்றைய ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் அருகேயுள்ள பகுதி}
* கோசலைநாடு {இன்றைய ஜார்கண்ட் மாநிலம்}
* வங்காளதேசம் { இன்றைய வங்கதேசம் (Bangladesh) நாட்டின் ஒரு பகுதி}
👆இப் படை நடவடிக்கையில் இடம் பெற்ற ஈரூடகத் தாக்குதலே ( தரை+நீர்) எமது பதிவுக்குத் தேவையானது. இத் தரையிறக்கமானது ஆற்றின் மூலமாகவே நடைபெற்றது. முன்னேறிச் சென்ற படைகள் இடை நடுவே கோதாவரி ஆற்றினைக் கடக்க வேண்டியிருந்தது, இதன் போது யானைகள் பெரும் பங்காற்றின. திருவலங்காடு செப்பேட்டின் 112 ஆவது பாடலானது, `யானைகளைக் கொண்டு அமைக்கப்பட்ட பாலத்தால் இராசேந்திரனின் படைகள் கங்கை நதியை கடந்ததன `எனக் கூறுகின்றது. ஆற்றின் ஒரு கரையிலிருந்து மறு கரை வரை யானைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன எனக் குறித்த செப்பேட்டு வரிகளுக்கு விளக்கம் கூறுவோருமுண்டு. சீன அறிஞரான சாவு குவா (Chau Ju-Kua), 1225 ஆம் ஆண்டு எழுதிய தனது பயணக் குறிப்புகளில், சோழர் படையில் 60 000 யானைகள் இருந்ததாகக் குறிப்பிடுவதனைக் கொண்டு, இவ்வாறு ஒரு விளக்கம் கொடுக்கப்படலாம்; ஆனால் இது ஓர் உயர்வு நவிற்சி என்றே எண்ணத் தோன்றுகின்றது. ஆற்றின் ஒரு கரை முதல் மறுகரை வரை யானைகளை நிறுத்தி வைத்தது எனக் கூறுவதைக் காட்டிலும்; யானைகள் நீர்நிலைகளில் நீண்ட தூரம் நீந்தக் கூடியன, நீரின் உள்ளே அமிழ்து சென்றால் கூடத் தமது துதிக்கையின் துணையால் மூச்சு விடக் கூடியன, இந்த ஆற்றலினைப் பயன்படுத்தியே பெரும் படையிறக்கத்தினைச் சோழப் படைகள் செய்திருக்கக்கூடும் எனக் கொள்வதே பொருத்தமாகவிருக்கும். எது எவ்வாறாயினும் பெருமளவிலான யானைகள் இத் தரையிறக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
திருவலங்காடு செப்பேட்டின் அடுத்த பாடலானது (113) பின்வருமாறு குறிப்பிடுகின்றது -“யானைகள், குதிரைகள், வீரர்கள், எழுப்பிய புழுதி பறந்தவாறு சோழனின் படைகள் எதிரி மணடலத்தில் நுழைந்தன”; எனவே இதிலிருந்து நாம் தரையிறக்கத்தின் அளவினையும், யானைகள்- குதிரைகள் உட்படத் தரையிறக்கப்பட்டதனையும் அறிந்து கொள்ள முடியும். இலங்கைத் தரையிறக்கம் போன்றே இத் தரையிறக்கமும் சோழரின் ஈரூடகத் தாக்குதல் வல்லமையினைப் பறை சாற்றும். இதன் உச்சக் கட்ட வளர்ச்சியினைக் `கடாரம் கொண்ட படலம்` எனும் தலைப்பின் கீழ், அடுத்த பதிவில் காண்போம்.🙏
👉குறிப்பு - கோதாவரி ஆற்றின் தென்கரையினை இராசேந்திர சோழன் தாண்டவில்லை, அவனது படைகளே தாண்டிச் சென்று போரிட்டு வென்றன என்றே பலரும் சொல்வர். பிரித்தானிய நூலகத்தில் ‘இந்தியன் கலெக்சன்ஸ்’ என்ற பிரிவிலுள்ள ஒளிப்பட ஆவணம் ஒன்றின் மூலம் குடவாயில் பாலசுப்ரமணியன் என்ற அறிஞர் புதியதொரு உண்மையினை உலகுக்கு அண்மையில் உணர்த்தியிருந்தார். ஒடிசா மாநிலம் மகேந்திரகிரி மலை மீது அமைந்துள்ள யுதிஷ்டிரர் மற்றும் குந்திதேவி கோயில்களில் உள்ள கல்வெட்டுச் சான்றுகள் மூலம் வட கரைக்கும் சென்று இராசேந்திர சோழன் போரிட்டான் என்பது தெளிவாகின்றது. # `இராசேந்திரனின் படைகள் வங்கப் போரை வெற்றிகரமாக முடித்துவிட்டு, அதன் அடையாளமாகக் கங்கை நீரை எடுத்துக்கொண்டு கோதாவரி நதிக்கரைக்கு வந்தன. தனது படைகளை அங்கிருந்து வரவேற்ற இராசேந்திரன், அவர்களை அழைத்துக்கொண்டு தற்போது ஒடிசா என்று அழைக்கப்படும் ‘ஒட்டர தேயம்’ மீது படையெடுத்து அங்கிருந்த மன்னர்களையும் வீழ்த்தினான்` # என்பதனை குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் பிரித்தானிய நூலக ஒளிப்பட ஆவணத்தினை அடிப்படையாகக் கொண்டு விளக்கியுள்ளார்.