
02/07/2025
செம்மணி மண்தொட்டுத் திறக்கையில் சிதைந்த எலும்பல்ல கண்டெடுத்தது; சிதறாத பாசத்தின் மிச்சத்தை, ஓர் சரித்திரத்தின் உச்சத்தை!
அவள் விலா எலும்புக் கூட்டிற்குள் அடங்கியிருக்கிறது சின்னஞ்சிறு கூடு; காலங்கள் கடந்தும் பிரியாத கைகள், காற்றினில் கேட்கிறதோ கதறலின் ஓசைகள்?
இரும்புத் துப்பாக்கி முன் ஈரக்குலை நடுங்க, இறுக்கமாய் அணைத்தாள் தன் குருத்தைக் காக்க.
அவள் மார்பு பிளந்த குண்டு, மழலையின் உயிரையும் உண்டதுண்டு!
குருதி காய்ந்து, சதை மட்கி, காலம் உருவத்தைச் சிதைத்த பின்னும், அரவணைப்பு மட்டும் அப்படியே உள்ளது -அது அன்னை எனும் சொல்லின் மெய்யே உள்ளது.
யுகங்கள் கடந்த எலும்புகளே, உங்களுக்காக யார் தொடுப்பார் வழக்கை?
செம்மணி மண்ணே, பதில் சொல்லு... இது புதைகுழியல்ல, ஓர் உயிர்க் கல்லறை!
ஓர் #உயிர்க்கல்லறை மட்டுமல்ல இன்னொரு #கருவறை!