26/12/2025
முன்னொரு காலத்தில் ,
அடுத்தவர்க்கு உணவளிப்பது , இல்லாதோர்க்கு கொடுத்துதவுவது , ஏழையெளியோர்க்கு பரிசுகள் வழங்குவது , கல்விக்காக நன்கொடையளிப்பது , நற்சொற்கள் கொண்டு கருத்துப்பரிமாற்றம் செய்வது போன்ற செயல்களே பெரியளவில் கொண்டாடப்பட்டன.
இன்றைய காலத்தில்,
அவரவர் தன்னைத்தானே அழகுபடுத்தி அவற்றை மற்றோர் பார்வைக்குப்பகிர்வது , தனது பெற்றோர் , குழந்தை , கணவன் , மனைவி போன்ற நெருங்கிய உறவுகளுக்கு செய்பவற்றை பெருமையாகப்பகிர்வது , தனது வீட்டில் தாங்களே உண்பதற்கு விதவிதமாகச்செய்யும் சமையலை பகிர்வது , கெடுசொற்களை நயன்மை பயக்கும் என்னும் பெயரில் உதிர்ப்பது , தற்பெருமை பேசுவது , தானொரு வல்லோனென எழுத்து , வாய்மொழி போன்றவற்றைக்கொண்டு சூளுரைப்பது போன்ற செயல்களே பெரிதும் வரவேற்பைப்பெறுகின்றன.
கற்றோரை மதிப்பதில்லை ,உதவுபவரை பொருட்படுத்துவதில்லை , வல்லோரை வாழ்த்துவதில்லை , நல்லோர் வழியைப்பின்பற்றுவதில்லை , நற்சொற்களை செவிகொடுத்துக்கேட்பதில்லை போன்ற நிலையே இன்றையநிலை.
நல்வழி செல்லமறுப்போர் இளையோரே என்று தவறிக்கூட கூறிடமுடியாது . அவர்கள் பெரியோராக இருப்பதே இங்கு வருத்தத்தக்கதாகவிருக்கிறது .
ஒருகுழந்தையின் படிமுறைவளர்ச்சியில் பெருந்தாக்கத்தை விதைப்போர் பெற்றோரும் ஆசிரியரும் என்பதில் வியப்பொன்றுமில்லை . ஆனால் , இன்றைய குமுகாயக்கட்டமைப்பில் முதலில் நெறிப்படவேண்டியோரே பெற்றவராக இருப்பது அடுத்ததலைமுறையின் வீழ்ச்சியாகவோ அல்லது வேறொறு பண்பாட்டு நகர்ச்சியாகவோ தான் பார்க்கமுடிகிறது.
இங்கொரு அடிப்படையுண்மை உண்டு. ஒரு குழந்தைக்கு மாந்தநேயத்தை வளர்த்தெடுப்பதில் தவறினால் புண்பட்டு நிற்கப்போவது மாந்தவுயிர்கள் மட்டுமே. முதுமையை நேசிக்க மாந்தநேயம்தான் வேண்டும். வறுமையை போக்க மாந்தநேயம்தான் வேண்டும். மருத்துவங்கற்கவும் அதே மாந்தநேயந்தான் வேண்டும் . சிற்றுயிர்களை பாதுகாக்கவும் அதே மாந்தநேயந்தான் வேண்டும் .
முன்பெல்லாம் ‘தன்னலமுடையோர்’ என்று சொன்னால் வெட்கித்தலைகுனிந்துவிடுவோம் . இன்று தன்னலம் உள்ளோரைக்கொண்டாடப்பழகியுள்ளோம். ஆனாலும், இன்றைய இளையோர் பெரியோரைமீறி நல்வழியில் தங்களைத்தாங்கள் வடிவமைத்து நகர்வதையும் காணக்கூடியதாகவே இருக்கிறது .
அன்றுதொட்டு இன்றுவரை இயற்கை படைப்பின்வழி மாற்றமின்றி அப்படியே உள்ளது . அது அதன்பணியை நன்றே தொடர்கிறது . மாந்தவியற்பண்புகளின் தேவையற்றமாற்றம் எவ்வழியில் நின்றுநிலைத்திடப்போகிறது . நல்வழி இயல்பாகவே கிடைத்துவிடும் என்றே நம்புவோம் .
நன்றி.
வாழ்க தமிழ்.
துளி வானொலி நிலா #தமிழ் #தூய்மை #தமிழன் #அடையாளம் #அன்பு #பண்பாடு #உண்மை #தேவை #நன்மை #நிலை