08/11/2025
மாகாண சபைத் ”தேர்தல் பந்து” எதிர்க்கட்சிகளிடம் வீசிய அநுர
------------- -
* 10 பில்லியன் ஒதுக்கி இந்தியாவுக்கு கணக்குக் காட்டியுள்ளார்.
* ஜேஆர் காலத்தில் இருந்து மாறி மாறி வீசப்படும் பந்து
* அனைத்துக் கட்சிகளின் கருத்தை பெறுதல் என்று கூறி மேலும் சிக்கலாக்கும் உத்தி
------ -
அரசியல் தீர்வுக்கான 13 ஆவது திருத்தச் சட்டத்தை தமிழர்கள் நிராகரித்தமை என்பது வேறு... ஆனால் அதனை அமுல்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உரியது.
ஏனெனில், அது இலங்கை நாடாளுமன்றத்தில் 1988 இல் அறுதிப் பொரும்பான்மை வாக்குகளினால் அங்கீகரிப்பட்ட ஒரு சட்டம்.
அதனை நடைமுறைப்படுத்த யாருடைய ஒத்துழைப்பும் தேவையில்லை. மாகாண சபைத் தேர்தல்களை நடத்தத் தேவையான பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து நிறைவேற்ற அநுர அரசாங்கத்திடம் 159 என்ற அறுதிப் பெரும்பான்மை நாடாளுமன்றத்தில் உண்டு.
தேர்தல் முறைமையைக் கூட மாற்றலாம்.
ஆனால் --
வரவு செலவுத் திட்ட உரை நிகழ்த்தியபோது, எதிர்க்கட்சிகளிடம் அப் பொறுப்பை கையளித்தன் பின்னணி என்ன?
தேர்தல்களில், குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில், தமிழர்களின் ஆதரவை பெறவரும்போது, இனப் பிரச்சினைக்கான தீர்வுகள் பற்றி, சிங்கள அரசியல் தலைவர்கள், தமிழர்களிடம் வாக்குறுதிகளை அள்ளி வழங்குவர்.
ஆனால், ஆட்சிக்கு வந்ததும் ----
A) நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்பர்...
😎 தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை என்பர்...
C) சர்வகட்சி மாநாடு என்பர்...
D) மகாநாயக்கத் தேரர்களுடன் பேச வேண்டும் என்பர்.
இவ்வாறு ஏதேதோ சாக்குப் போக்குச் சொல்லி ”எல்லோருடைய கருத்துக்களையும் பெறுதல்” என்ற சந்தர்ப்பவாத ஜனநாயக முகத்தைக் காண்பித்து ”அரசியல் தீர்வுப் பந்து” பிரதான எதிர்க் கட்சிகளிடம் எறியப்பட்டு விடும்.
இப்படி பந்து எறியும் அரசியல் விளையாட்டு, ஜேஆர் 1980 இல் ஆரம்பித்த ”மாவட்ட அபிவிருத்தி சபை” என்ற அரைகுறை தீர்வு முறையில் இருந்து, 13 என்ற குறைப் பிரவசம் வரையும் நீட்சியடைந்துள்ளது.
இப் பின்புலத்தில், ஜேஆருக்கு சளைத்தவன் அல்ல என்பதை, அநுர இன்று நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தினார்...
குறிப்பாக ---
2017 ஆம் ஆண்டில் இருந்து நடத்தப்படாமல் உள்ள மாகாண சபைத் தேர்தல் செலவுக்கு 10 பில்லியன் ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளார் அநுர.
ஆனால், தேர்தல் எப்போது என்பது பற்றி தன்னால் தீர்மானிக்க முடியாது என்று கூறி கைவிரித்து விட்டார்.
அத்தோடு பொருத்தமான தேர்தல் முறைமை ஒன்றை உருவாக்குமாறு எதிர்க்கட்சிகளின் தலையில் பந்தை எறிந்து விட்டுத் தப்பிவிட்டார் அநுர.
அதாவது ---
நாட்டைப் பிரிக்கும் 13 ஆவது திருத்தச் சட்டம் என்று 2009 இற்குப் பின்னர் குறிப்பாக 2017 ஆண்டில் இருந்து கூற ஆரம்பித்த சிங்கள அரசியல் பிரதிநிதிகள் சிலர், முடிந்தவரை 13 ஐ இரத்துச் செய்யவே விரும்புகின்றனர்.
ஆகவே --
அத்தகையை சிங்கள அரசியல் பிரதிநிதிகள் - பௌத்தகுருமார் ஆகியோரிடம் இருந்து தப்பிவிட்டார் அநுர.
ஆனால், எதிர்க்கட்சிகள் என்ன செய்யும்...? அநுர வீசிய அப் பந்தை எடுப்பார்களா? எடுக்க முடியுமா?
பொருத்தமான தேர்தல் முறையை உருவாக்க அறுதிப் பெரும்பான்மை அநுர அரசாங்கத்திடம் உண்டு என்று கூறி எதிர்க்கட்சிகள் தட்டிக் கழிக்கும்.
உண்மையும் அதுதானே!
ஆனாலும், அதற்கு அநுர என்ன சொல்வார்...?
1) தமிழ்தேசியக் கட்சிகள் ஒத்துழைக்கவில்லை என்பார்.
2) புதிய அரசியல் யாப்பு தாயாரிக்கப்படும்போது அரசியல் தீர்வுக்கு முன்னுரிமை என்பார்.
3) 2015 இல் ரணில் - மைத்திரி அரசாங்கம் தயாரித்த 'ஏக்கிய இராஜ்ய ' என்ற யாப்பு வரைபை கையில் எடுப்பார்.
4) நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்பார்...
இவ்வாறு விரிவுபடுத்தி சிங்கள பௌத்த பேரினவாதிகளிடம் இருந்து அநுர தப்பித்துக் கொள்வார்...
இப்படியே கைமாறி, கைமாறி பந்து எறிந்து விளையாடுவது தானே சிங்கள அரசியல் தலைவர்களின் வரலாறு.
1948 இல் இலங்கை சுதந்திரமடைந்த நாள் முதல் இந்த அணுமுறை தானே இங்கு விஞ்சிக் கிடக்கிறது?
ஆனால் ---
ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் மக்களின் வாக்குகளை பெற பிரச்சாரம் செய்ய வரும்போது மாத்திரம் ----
------தீர்வு விவகாரத்தில் ”நாங்கள் அரசியல் பந்து எறிந்து விளையாடமாட்டோம்” என்று வாக்குறுதி வழங்குவார்களா?
1994 இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகா வழங்கிய வாக்குறுதி என்ன? பின்னர் நடந்தது என்ன?
அன்று சமாதானத்துக்கான போர் என முழங்கினார் சந்திரிகா. அது இன்று செம்மணியில் வந்து நிற்கிறது...
2024 இல் நடைபெற்ற தேர்தலில் அநுர வழங்கிய வாக்குறுதி என்ன?
A) ”தமிழர்களின் பிரச்சினை எங்களின் பிரச்சினை”
😎 ”தமிழர்களின் பிரச்சினையை நாங்கள் கையில் எடுத்துள்ளோம்”
C) ”தென்பகுதியில் பாரிய மாற்றம் வரவுள்ளது. அந்த மாற்றத்துக்குள் தமிழர்களும் வர வேண்டும்”
இல்லையேல் தனிமைப்படுவீர்கள்” என்ற எச்சரிக்கை வேறு.
இப்படி வாக்குறுதிகள், அதேநேரம் மிரட்டல் தொனியிலும் உரையாற்றி, அநுர அளித்த உறுதிமொழிகள் இப்போது எங்கே?
மாகாண சபைத் தேர்தலை நடத்த பொருத்தமான தேர்தல் முறைமை ஒன்றை உருவாக்குங்கள் என்று எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கை விடுக்க வேண்டிய அவசியம் ஏன்?
159 ஆசனங்கள் உள்ள அரசாங்கம் மிக இலகுவாக பொருத்தமான தேர்தல் முறை ஒன்றை உருவாக்கலாமே? பதவியேற்று இன்று ஒரு வருடம் சென்று விட்டதே?
அதென்ன?---
தமிழர்களின் விவகாரங்கள் என்று மாத்திரம் வரும்போது, ஜனநாயக வழியில் எதிர்க்கட்சிகள் - பொது அமைப்புகள் - பௌத்த குருமார் ஆகியோரின் ஒத்துழைப்புகளை கோருவது?
சுனாமி பொதுக் கட்டமைப்பை உருவாக்கும் விடயத்தில் சந்திரிகா இப்படித்தானே செயற்பட்டார்!
ஆகவே
இவ்வாறு சுட்டிக்காட்டி எழுதுவதற்கு நிறைய உண்டு...
ஆனால்---
சில போலியான முற்போக்குத் தமிழர்கள் - போலியான இடதுசாரி தமிழர்கள் சிலருக்கு இவை புரியும். ஆனால் எழுதமாட்டார்கள்.
கம்யூனிஸ்ட் என்று மார் தட்டுகின்ற சில தமிழ்ப் பத்திரிகையாளர்களும் இப்படித்தான்...இப்படி எழுதாமல் தவிர்ப்பதுதான் இவர்கள் கூறுகின்ற “மாற்றுக் கருத்து”
அ.நிக்ஸன்-
பத்திரிகையாளர்-