
05/02/2024
புனித சூசையப்பர் ஆலய திருவிழா தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. வழக்கம்போலவே அருட்பணியாளர்களின் மறையுரைகள் அனைத்தும் சிந்தனையை தூண்டும் , சமூக மாற்றங்களை விரும்பும் அனைவருக்குமானதாக வழங்கப்பட்டு வருவது சிறப்பு. நேற்றைய மூன்றாம் திருவிழா மறையுரையாற்றிய அருட்பணி ஜேசு அவர்களின் மறையுரை அருமையாக இருந்தது. நம்முள் உண்மைக்கு நெருக்கமானவர்களிடம் இருக்கும் பயத்தை , தவறுசெய்துவிட்டோம் என்கிற குற்றஉணர்வை பரிசுத்த ஆவியாக, நம்மை நாமே அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வழிகாட்டியாக, நாம் தொலைத்துவிடக்கூடாத பண்புகளை நம் தலைக்குமேல் எப்போதும் இருந்து நம்மை வழிநடத்தும் தூய ஆவியாரின் கொடையை நாம் பெற்றவர்களாக இருக்கிறோம் என்பதை சிந்திப்பதாக இருந்த மறையுரை சிறப்பு. மூன்றாம் திருவிழா சிறப்பு சேர்க்கும் விதமாக வருடந்தோறும் வெண்லில்லியால் நடத்தப்படும் விளையாட்டுப்போட்டிகள் அடுத்து வரும் ஆண்டுகளில் இன்னமும் புதுமையாக , கூடுதல் விளையாட்டுகளோடு நடைபெறவேண்டும் என்பது என்னுடைய ஆசை. குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு திட்டமிட்ட நேரத்திற்குள் முடிப்பதற்கு அசாத்திய திறமையும் ஒற்றுமையும் நல்ல தலைமையும் இருந்தால் மட்டுமே இது இங்ஙனம் நடைபெற்றிருக்க முடியும். வெண்லில்லி உறுப்பினர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். குறிப்பாக என்னுடைய நண்பர்கள் சோரப், வால்கன்ஸ், சோபர்ஸ், பிரிஸ்டன் போன்றோரை பார்த்தபொழுது நானே அங்கிருந்ததை போன்ற உணர்வு ஏற்பட்டது. ஆண்கள் கயிறு இழுத்தல் போட்டியிலும், அதேபோன்று பெண்கள் கயிறு இழுத்தல் போட்டியிலும் திருமணமானவர்களே வெற்றிபெற்றதில் ஆச்சரியமில்லை. நண்பன் வால்கன்ஸ் தன்னுடைய சிம்ம குரலை இழந்தும் இரவு கலைத்திறன் போட்டிகளில் நிகழ்வுகளை தொகுத்து வழங்கியதை பார்த்தபொழுது அர்ஜுனனால் வீழ்த்தப்பட்ட கர்ணன் அம்புகளுக்கு இரையாகும் தருவாயிலும் தன் ஈகையை விடாது நின்ற தருணத்தை நினைவுபடுத்தியது. ஆனாலும் நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்த போது குறுக்காலயும் மறுக்காலயும் பிள்ளைகளுக்கு இடைஞ்சலாக அடிக்கடி நடந்துபோனதற்காக வெண்லில்லியிலிருந்து அவரை ஒருவருடத்திற்கு இடைநீக்கம் செய்யவும் பரிந்துரை செய்கிறேன். நாள் முழுவதும் விளையாட்டுபோட்டிகளை நடத்திவிட்டு அன்றைய இரவே நடனபோட்டிகளையும் சிறப்புற, மிக்க பொறுப்புடனும், பொறுமையுடனும் நடத்திமுடித்த வெண்லில்லி நண்பர்களுக்கு மீண்டுமொருமுறை வாழ்த்துகள். கலைத்திறன் போட்டிகளை நான் முழுமையாக பார்த்தேன். தொடக்கமாக வந்த இறைவணக்க பாடலுக்கு பரதநாட்டியம் ஆடவந்த சிறுமி பாடலுக்கு முன்பாகவே அபிநயம் பிடித்து முழங்கால்கள் மடித்து அரமண்டி நிலையில் சிறிதுநேரம் நிற்க ஆரம்பித்துவிட்டாள். பின்னர் பின்னால் அமர்ந்திருந்த மரியாதைக்குரிய திரு கென்னடி அவர்கள் ஏதோ சொல்ல பாடல் போடப்பட்டது. என்னுடைய பள்ளிநாட்களிலும் சரி , அதன்பிறகான திருவிழா கலைநிகழ்வுகளிலும் சரி தமிழ்த்தாய் வாழ்த்து, தேசியகீதம் மற்றும் இறைவணக்கம் இவற்றில் ஏதேனும் ஒன்று நிகழ்வதாய் இருந்தாலும் எழுந்து நிற்க வேண்டிய பொறுப்பு மேடையில் இருப்பவர்களும் உண்டு, பார்வையாளர்களுக்கும் உண்டு என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறேன். இறைவணக்கம் முடிந்ததுமே அச்சிறுமிக்கு அண்ணன் கென்னடி அவர்கள் பரிசுகளை வழங்கினார். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கினீர்கள் என்று நினைக்கிறேன். ஆறாம் வகுப்பு மேல் உள்ள மாணவ மாணவிகள் நடனமாட வந்தபோது வெட்டி ஒட்டப்பட்ட பாடல்கள் அதிகம் இடம்பெற்றது சற்றே சலிப்பை ஏற்படுத்தியது. எல்லாவற்றிர்க்கும் முத்தாய்ப்பாய் புனித வளனார் தொடக்கப்பள்ளி மாணவர்களின் குழு நடனம் கண்ணிமைக்க மறக்க வைத்தது. மனதிற்கு முழுநிறைவான உணர்வு அந்நடனத்தை கண்டபோது கிடைத்தது. சிறந்த வழிகாட்டுதலோடு கூடிய உழைப்பும், முயற்சியும் இருந்தால் இது போன்ற நல்ல கலை நிகழ்வுகளை நம்முடைய மாணவச் செல்வங்கள் மூலம் நடத்திக்காட்டமுடியும் என்கிற நம்பிக்கை ஏற்படுகிறது. இதற்காக உழைத்த ஆசிரியை செல்வி.பெர்த்தின், மரியாதைக்குரிய தலைமை ஆசிரியை திருமிகு. பிளைசி மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியபெருமக்களுக்கும் பாராட்டுகளும், நன்றிகளும். புனித வளன் தொடக்கப்பள்ளி மாணவன் செல்வன் ஜோசனுக்கு பரிசு வழங்கியதற்காக வெண்லில்லி பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டும். இந்த சிறு வயதிலேயே அசாத்திய நினைவாற்றலோடு இருக்கிறான். அவனுடைய தாயை மேடைக்கு அழைத்து ஒரு பொன்னாடையை போர்த்தி கவுரவப் படுத்தியிருக்கலாம் என்பது என் எண்ணம். புனித சூசையப்பரின் ஆசீரும், வழிநடத்தலும் எப்போதும் ஜோசனுக்கு இருக்கும் என்பது என்னுடைய திண்ணம். தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசுகளை வழங்கியது சிறப்பு. அதனை வழங்கியவர்கள் பாராட்டுக்குரியவர்கள். கடைசியாக அந்த அதிஷ்ட குலுக்கல் முறையில் பரிசுகளை வழங்கியது பார்ப்பவர்கள் அனைவர்க்கும் விளங்கியது அது ஒரு ஏமாற்று தந்திரம் என்று. இந்த அதிஷ்ட குலுக்கலில் வந்த பெயர்களுக்கெல்லாம் தந்தை பெயர் வாசிக்க தெரிந்தவர்களுக்கு, தனித்திறன் போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களின் தகப்பனார் பெயர்கள் வாசிக்க தவறிபோனதேனோ தெரியவில்லை. அதிஷ்ட குலுக்கலில் அருட் தந்தையும் விழாத் தலைவருமான பங்குத்தந்தை அவர்களின் பெயரும் இருந்து , அவரால் அவருடைய பெயரே எடுக்கப்பட்டு , அவரும் அதற்கு துள்ளி குதித்து, அவர் வேண்டாமென்று சொல்ல , இவர்கள் இல்லை இல்லை உங்களின் பெயர் வந்தது வந்ததுதான் என்று சொல்ல ஒரு அருமையான நாடகத்தை அரங்கேற்றியது போன்ற உணர்வை கொடுத்தது. அதிஷ்ட குலுக்கலில் பெயர் வந்தும் உறங்கப்போயிருந்த ஒரே காரணத்தால் அந்த பரிசு கிடைக்காத அந்த LKG குழந்தை உங்களை மன்னிக்காது. மீண்டும் ஒருமுறை மூன்றாம் திருவிழா விளையாட்டு போட்டிகள் மற்றும் கலைத்திறன் நடன போட்டிகளில் சிறப்பாக பங்கெடுத்தவர்களுக்கும், அதனை சிறப்பாக முன்னெடுத்த வெண்லில்லி நண்பர்களுக்கும் என்னுடைய நன்றிகளும், பாராட்டுகளும். தொடர்ந்து பயணிப்போம்.