13/11/2023
Jothilakshmi V S
Watched the movie 'Irugapatru' yesterday. A good attempt on the theme of marital relationships. But in real life,
1. பவித்ரா- ரங்கேஷ் திருமண முறிவை தடுக்கவே முடியாது. ரங்கேஷ் என்பவர் நாம் தினம் பார்க்கும் சாமானிய இந்திய ஆண். தன் வாழ்க்கையையும், அது சார்ந்த முக்கிய முடிவுகளையும் பொறுப்புடன் எடுக்காமல், மற்றவர்கள் மேல் பழியை சுமத்திக்கொண்டு, சுற்றி உள்ளவர்களை சுரண்டி வாழும் chronic abuser. இன்று விவாகரத்து கோரி வரும் பவித்ராக்கள் 75 சவரன் நகையை தன் கணவரின் வளர்ச்சிக்காக கொடுக்காதவர்கள் இல்லை. எல்லாவற்றையும் கொடுத்தும், பொறுப்பில்லாமல் பொருள் இழந்து, உலகத்திலேயே தனக்கு தான் stress & depression என்று அழுது, முழு குடிகாரனாகி, கடன் சேர்த்து, தன் மேல் அன்பு உள்ளவர்களை காயப்படுத்தி, மீண்டும் 'என் எல்லா தோல்விக்கும் நீயும் இந்த குடும்பமும் தான் காரணம்' என்று ரங்கேஷின் பழியை சுமந்து கொண்டு, உறவில் துளியும் மதிப்பின்றி, மனதளவிலும் பொருளாதாரத்திலும் முழுவதுமாக உடைந்து வரும் பெண்கள்.
தன்னுடன் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் பெண்ணை மோசமாக பார்த்'து', அவர் உடல் அமைப்பு குறித்து பாராட்டுவதாக வழிந்'து', அப்பெண் தன் கணவனும், குழந்தைகளும் கூட இவ்வாறு தான் சொல்வார்கள் என்று 'சமயோஜிதமாக' அந்த sexual harassment-ஐ கையாண்டு, ரங்கேஷ் அதன் பின் தன் வாயை மூடிக்கொண்டு treadmill-இல் நடந்'து'...
பாவம் ரங்கேஷ், என்ன பண்ணுவார்.. அவர் குடும்பமும், மனைவி பவித்ராவும் தானே காரணம். He is a good man and a supportive husband, இல்ல?
2. நிஜத்தில் விவாகரத்து கோரி வரும் திவ்யாக்கள், அர்ஜுன் மாதிரியான தன் மேல் நம்பிக்கை இல்லாத, தாழ்வு மனப்பான்மை கொண்டுள்ள, கணவர்களுக்கு இரண்டாம் வாய்ப்பு கொடுக்காதவர்கள் இல்லை.
மீண்டும் வாய்ப்பு கொடுத்து,
மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுத்து, அவர் கேட்பது போல் குழந்தைக்காக வேலையை விட்டு, காதலுக்காகவோ, குழந்தைக்காகவோ ஏழு முதல் பத்து ஆண்டு வரை உணர்வு பூர்வமாக திருமண உறவில் வாழ்ந்து, அர்ஜுன் போன்றோர்கள் முன் உணர்ந்ததாக சொன்னது எல்லாம் தற்காலிகமானவை, அவர்கள் வேலை பளு, மேனேஜரின் துன்புறுத்தல், EMI,.. என்று பல காரணம் காட்டி, குழந்தைகள் முன்னிலையில் கூட கோவமாக கண்ணியமின்றி மனைவியை நடத்துவது, அடிப்பது, தினம் வீட்டிற்கு வந்தவுடன் தேள் போல் கொட்டிக்கொண்டே இருப்பது....
திவ்யாக்கள் சமையல் அறையிலும், கழிப்பறையிலும் அழுது தீர்த்து, போதும் இந்த உறவு என்று வெளியே போகும் போது, 'நீ விட்டுட்டு போயிட்டா தற்கொலை செய்து கொள்வேன்' என்று இமோஷனல் பிளாக்மெயில் செய்வது,.. மத்திம வயது தொடும் போது இப்படித்தான் மாறுகிறார்கள் நம் அர்ஜுன்கள்.
இதற்கு மேல் உறவில் கொடுக்கவும், பெறவும் ஒன்றுமில்லை என்று மொத்தமாக வடிந்து தீர்ந்து, உணர்வின்றி போன பின் மீண்டும் விவாகரத்து நிவாரணம் தேடி வந்து கொண்டிருப்பவர்கள் தான், திவ்யாக்கள்.
3. மித்ரா போன்ற மனித உறவுகள் சார்ந்த பிரச்சனைகளை வேலை நிமித்தமாக தினம் கையாளும் ஒரு பெண்,
மன நல ஆலோசகரோ,
காவல் அதிகாரியோ,
வழக்கறிஞரோ,.. நிஜத்தில், தன் ஆசைகள், பயம் போன்றவைகளை பேப்பர் மூட்டைகளில் எல்லாம் எழுதி வைத்து கொள்வதில்லை. தனி app, alarm வைத்து கொண்டு தன் இணையரை impress செய்து கொண்டிருப்பதில்லை.
தினம் தன் மேசையின் மறுபக்கம் அழுது கொண்டு இருக்கும், திருமண உறவில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களை கையாளும் வேலையில் உள்ள பெண்கள்,
பத்து ஆண்டுகள் ஆழமாக காதலித்த நல்ல மனிதர்கள் கூட திருமணம் என்ற உறவில் வந்த ஆறு மாதத்தில் எதனால் பிரிகிறார்கள்,
நம் சமுக அமைப்பு மற்றும் அழுத்தம் மனிதர்களை, அவர்தம் உறவுகளை எவ்வாறு சிதைக்கிறது,
எவ்வாறு நிதி மேலாண்மை இல்லாத மனிதர்களது குடும்ப உறவு நிச்சயம் உடைந்து போகிறது,
ஆண் மட்டுமே உணர்வுகளோடு வாழ இடம் உள்ள நம் திருமண அமைப்பில், இன்று பெண்களும் தனக்கான இடத்தை உறுதி செய்யும் போது, உறவுகளில் ஏற்படும் அடிப்படை மாற்றங்கள்
போன்ற பலவற்றை மிக எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.
என்னிடம் சின்ன சின்ன சண்டைகள் செய்,
என் போனை எடுத்து நான் மற்றவர்களிடம் பேசுவதை நோட்டம் செய்,
என்னை வேலையில் இருந்து சீக்கிரம் வர சொல்லி தொந்தரவு செய்,
என்று மன வளர்ச்சி இன்றி முகத்தை திருப்பி கொள்ளும் மனோகரிடம்,
'உனக்கு வலி பிடிக்கிறதென்றால் சுவற்றில் போய் முட்டிக்கொள். அதற்காக உன்னை தள்ளி விட என்னை வற்புறுத்தாதே.. I'm not an abuser', என்று தெளிவாக சொல்லிவிட்டு வேலையை பார்க்க செல்வார்கள்!
இன்றைய காலத்தில் திருமண உறவை, எது
ஆரோக்கியமானதாக வைக்கிறது?
திருமண உறவில் தான் காயமடையும் பட்சத்தில், தனக்கு துணையாக பெற்றோர், நண்பர்கள், மற்றும் சட்டத்தை அமல்படுத்தும் மையங்கள, இருக்கும் என்ற,
பெண்ணின் தைரியமும்,
தன் வசதி, விருப்பதிற்காக, மனைவியை மாண்பு குறைவாக நடத்தினால் அப்பெண் நிச்சயம் உறவில் இருந்து வெளியேறி விடுவாள்,
குடும்பமாக இல்லை என்றால் சொந்த பந்தங்கள் மதித்து திருமண அழைப்பு கூட கொடுக்க மாட்டார்கள்,
துணையாக உடன் வாழும் பெண்ணிற்கு கட்டாயம் மதிப்பளித்து வாழ்ந்தால் மட்டுமே தனக்கு குடும்பம் அமையும் என்ற,
ஆணின் பயமும்,
இன்றைய திருமணங்களை காப்பாற்றும்.
மற்றபடி,
படம், நல்ல படம் தான்.
ஆண் மனதை புரிந்து கொண்டு, ஆண்களுக்காக வெளியாகி உள்ளது.
As always!