28/10/2025
திருப்பூர் தோழர் இரா. சீரங்கராஜ் மறைவுக்கு இரங்கல்
திருப்பூர் தோழர் இரா. சீரங்கராஜ் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த உறுப்பினரும், போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தின் மூத்த தலைவருமான தோழர் இரா.சீரங்கராஜ் (65) நேற்று (27.10.2025) இரவு 10.10 மணிக்கு முதலிபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார் என்ற துயரச் செய்தியறிந்து வேதனையுற்றோம்.
கோவை அருகில் மதுக்கரையில் சிமென்ட் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த இராமசாமி - வள்ளியாத்தாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்த சீரங்கராஜ். இவரது தந்தை தொழிற்சங்க அமைப்பிலும், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியிலும் முன்னணி உறுப்பினராக செயல்பட்டவர். கட்சியின் முதலிபாளையம் கிளைச் செயலாளராக பணியாற்றியவர்.
சீரங்கராஜ் பள்ளிக் கல்வியை முடித்து துடியலூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மையத்தில் தொழில் கல்வி பயின்றவர். மாணவப் பருவத்தில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தில் இணைந்து பணியாற்ற தொடங்கியவர்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியில் சேர்ந்து, அங்கு தொழிற்சங்க இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டவர். ஈரோடு மாவட்ட ஜீவா போக்குவரத்துக் கழகத்தில் தொழிற்சங்க அமைப்பை உருவாக்க அரும்பாடுபட்டு வெற்றி கண்டவர். அதன் முதல் மாவட்டத் தலைவராக செயல்பட்டவர். சில வருடங்களாக வாத நோயின் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தவர்.
தோழர் இரா.சீரங்கராஜுக்கு - அவரது வாழ்விணையர் பாலாமணி, மகன் தினேஷ், திருமணமான மகள் ஹேமலதா ஆகியோர் இருக்கின்றனர். இதில் மகன் தினேஷ் சீரங்கராஜ் சட்டம் பயின்றவர். இவர் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக பணியாற்றி, தற்போது அகில இந்தியப் பொதுச் செயலாளர் பொறுப்பில் பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சியின் கொள்கை நெறி வழுவாது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அரசியல் உணர்வுடன் வழி நடத்தியவர். மகன் தினேஷ் சாதி எல்லைகளை உடைத்து வாழ்விணையராக வழக்கறிஞர் கோ. சங்கீதாவை தேர்வு செய்த போது, மன நிறைவுடன் ஏற்று, இரு வீட்டார் இல்லற இணையேற்பு விழாவாக நடத்தி மகிழ்ந்தவர்.
தொழிலாளி வர்க்க அரசியல் வெற்றிக்காக தன் வாழ்நாளை அர்பணித்துக் கொண்ட இரா.சீரங்கராஜ் பன்முக ஆளுமை கொண்டவர். அவரது இழப்பு எளிதில் ஈடு செய்ய முடியாதது.
திருப்பூர் 2/437 - பி, வேப்பங்காடு, முதலிபாளையம், திருப்பூர் 641606 என்ற முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி மரியாதைக்கு வைக்கப்பட்டுள்ள அவரது நல்லுடல் இன்று 28.10.2025 காலை 10 மணியளவில் மருத்துவ மாணவர்கள் படிப்புக்கு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு தானமாக வழங்கப்படுகிறது.
தோழர் இரா.சீரங்கராஜ் அவர்களது நினைவுகளுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு செவ்வணக்கம் கூறி, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.