
26/09/2025
ஒரே ஆண்டில் ரூ. 100 கோடி கலெக்சன் செய்த 3 படங்கள்... மலையாள சினிமாவில் அரிய சாதனை
மலையாளத் திரையுலகில் ஒரே ஆண்டில் மூன்று படங்கள் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மோகன் லால். நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் இவர். கடந்த 1978-ஆம் ஆண்டு வெளியான ‘தீரனோட்டம்’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா திரையுலகில் கதாநாயகனாக அடியெடுத்து வைத்தவர் மோகன்லால்.
தன்னுடைய எதார்தமான நடிப்பால் குறுக்கிய காலத்திலேயே முன்னணி நடிகர் என்ற பெருமையை பெற்ற மோகன்லால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், கன்னடம் போன்ற மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.
நடிகர் மோகன்லால் நடிப்பதோடு மட்டுமல்லாமல் மலையாளத்தில் ஒளிப்பரப்பாகும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறது. தற்போதுள்ள மார்டன் இயக்குநர்களுடன் வரை பணிப்புரிந்த நடிகர் மோகன்லால் இதுவரை 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவரின் நடிப்பு திறமையை பாராட்டி இவருக்கு பத்ம ஸ்ரீ, பத்மபூஷன் போன்ற விருதுகளும் வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் நடிகர் மோகன் லாலுக்கு திரையுலகில் வாழ்நாள் சாதனை படைத்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் ‘தாதா சாகேப் பால்கே’ விருது வழங்கப்பட்டது.
இந்த விருதினை டெல்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கையினால் நடிகர் மோகன் லால் பெற்றுக் கொண்டார். மேலும், ”இந்தத் தருணத்தை பெருமையாக உணர்கிறேன். மலையாள சினிமாவின் பிரதிநிதியாக இந்த தேசிய அடையாளத்தை பெறும் இளமையான நடிகர் மற்றும் எங்கள் மாநிலத்திலிருந்து இந்த விருதைப் பெறும் இரண்டாவது நபர் நான்தான்.
இந்தத் தருணம் எனக்கானது மட்டுமல்ல, இது ஒட்டுமொத்த மலையாள திரை சமூகத்திற்கானது” என்று பெருமையாக பேசியிருந்தார். இந்நிலையில், மலையாள நடிகர் மோகன்லாலுக்கு இந்த ஆண்டு மிக சிறப்பாக அமைந்திருக்கிறது.
அதாவது, சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘ஹிருதயபூர்வம்’ திரைப்படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்து 100 கோடி கிளப்பில் இணைந்தது. தொடர்ந்து, ‘எம்புரான் 2’ திரைப்படம் ரூ.268 கோடியும், ‘தொடரும்’ திரைப்படம் ரூ.235 கோடியும் வசூலித்தது.
இதன் மூலம் மோகன்லால் நடித்த மூன்று படங்கள் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. மலையாளத் துறையில் ஒரே வருடத்தில் மூன்று நூறு கோடி வசூல் செய்த படங்களை கொடுத்து அரிய சாதனை படைத்திருக்கிறார் நடிகர் மோகன்லால்.
மேலும், ஒரே வருடத்தில் திரையுலகில். ரூ. 600 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டிய மலையாள நடிகர் என்ற சாதனையையும் அவர் படைத்திருக்கிறார்.