27/11/2025
எம்.எல்.ஏ.நிதி 5 லட்சத்தை ஒப்பந்ததாரர் வீணடித்துவிட்டதாக திமுக கவுன்சிலர் குற்றச்சாட்டு!
கீழக்கரை நவ, 27
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இன்று காலை 11 மணிக்க கீழக்கரை நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையிலும் ஆணையாளர் முன்னிலையிலும் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் சரமாரியாக கேள்விகளையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தனர். அதன் விபரங்கள் பின்வருமாறு..
1வது வார்டு பாதுஷா: எனது வார்டு உள்ளிட்ட பெரும்பாலான வார்டுகளில் தெரு விளக்குகள் எரிவதில்லை.இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு புகார் கொடுக்க போன் செய்தால் யாருமே எடுப்பதில்லை.விரைவில் பணி ஓய்வுபெறவுள்ள RI தனது மேசையில் ஏராளமான கோப்புகளை தீர்வு காணாமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளார்.உடனடியாக அந்த கோப்புகளுக்கு தீர்வுகாணவேண்டும்.
சூர்யகலா 4வது வார்டு: புதிய பேரூந்து நிலையத்தில் இயங்கி வந்த மீன்மார்க்கெட் இடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் புதிய கட்டுமானம் ஏதும் நடைபெறவில்லை.தற்காலிக மீன் கடைகளையாவது உருவாக்க வேண்டும்.
பைரோஸ்பாத்திமா 6வது வார்டு: எனது வார்டுக்குட்பட்ட பாத்திமா காலனிக்கு 10 தெருவிளக்குகள் ஒதுக்கப்பட்டும் இதுநாள் வரை ஒன்று கூட எரிய வைக்கப்படவில்லை.
மீரான் அலி 7 வது வார்டு: ஊருக்குள் கேரளா பஸ்களை அனுமதிப்பதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பள்ளி மாணவர்களும் பொதுமக்களும் அவதியுறுகின்றனர்.உடனடியாக நகராட்சி நிர்வாகம் காவல்துறை மூலம் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணவேண்டும்.
MMK காசீம் 8 வது வார்டு: தீர்மான பொருள் 7ல் நகராட்சிக்கு புதிதாக மர அறுவை இயந்திரம் வாங்குவதாக உள்ளது.ஏற்கனவே கைவசம் உள்ள இயந்திரங்களே போதுமானது.புதிதாக வாங்குவதை கைவிட வேண்டும்.
நசுருதீன் 9வது வார்டு: எனது வார்டில் கழிவு நீர் வாறுகாலை உயர்த்தி கட்டி குறுகலான பகுதிகளில் ஏற்கனவே இருக்கும் பழைய குழாய்களை அகற்றிவிட்டு புதிய குழாய் பதிக்க இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு நடைபெற்ற பணிகள் திருப்திகரமாக இல்லை.ஒப்பந்ததாரரால் எம்.எல்.ஏ நிதி 5 லட்சமும் வீணாகிவிட்டது.இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பவித்ரா 10வது வார்டு: எனது வார்டில் தெருவிளக்கு எரியவைப்பதற்கு கூட ஆண்டு கணக்கில் போராட வேண்டியுள்ளது.
உம்முசல்மா 12வது வார்டு: சின்னக்கடை பகுதி கருவாட்டு கடையில் இருந்து பழைய BH பஜார் வரை வாறுகாலை உயர்த்தி தரக்கோரி ஆண்டு கணக்கில் காத்திருக்கோம்.இதை எனக்காக கேட்கவில்லை,தெருமக்களுக்காக கேட்கிறேன்.இனியும் காலம் தாழ்த்தாமல் அதை நிறைவேற்றி தரவேண்டும்.
தாஜுன் அலிமா 13வது வார்டு: எனது வார்டில் எல்லாம் சரியாக இருக்கு.அதனால் கேட்பதற்கு ஒன்றுமில்லை.
16,17,18 வது வார்டு கவுன்சிலர்கள்: ஏதும் பேசவில்லை.
மூர் நவாஸ் 19வது வார்டு: பெத்தரி தெரு வாறுகால் பணிகள் கிடப்பில் உள்ளது.பெரியகாடு,முகம்மது காசீம் அப்பா தர்ஹா,புதுகிழக்குத்தெரு பகுதி மக்களுக்காக வாறுகால் அமைக்க முயற்சி செய்ய வேண்டும்.
ஷேக் உசேன் 20வது வார்டு: கீழக்கரை நகராட்சிக்குள் நடைபெறும் பணிகள் குறித்து வைக்கப்படும் தகவல் பலகைகளில் ஒப்பந்ததாரர் பெயரை குறிப்பிடுவதில்லை.பெயர் போட ஏன் பயப்படுகிறீர்கள்? அச்சமாக இருந்தால் அந்த தகவல் பலகைகளை நகராட்சி அலுவலகத்துக்குள் மறைத்து வைக்கலாமே?
சித்தீக் 21வது வார்டு: எனது வார்டில் அமைக்கப்படும் தெரு விளக்கு கம்பங்களில் எண்கள் குறிப்பிடப்படுவதில்லை.எரியாக மின்கம்பங்களை எரிய வைக்க மின்கம்பங்களின் அடையாளம் சொல்ல முடியாமல் இருக்கேன்.
இவ்வாறு நகர்மன்ற உறுப்பினர்களின் கோரிக்கை மற்றும் குற்றச்சாட்டுகளுடன் கூட்டம் நிறைவு பெற்றது.
உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துணை சேர்மன் ஹமீதுசுல்தான் பதிலளித்தார்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்.
கீழக்கரை.
மேலும் செய்திகளைப் படிக்க...
http://www.vanakambharatham24x7news.in