
08/07/2024
ரோகித் சர்மா இடத்தை பிடிச்சிட்டாரு.. முதல் பந்தில் பறந்த சிக்ஸ்.. சதமடித்து சாதித்த அபிஷேக் சர்மா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 46 பந்துகளில் சதம் விளாசி மிரட்டியுள்ளார். நேற்று அறிமுக போட்டியிலேயே டக் அவுட்டாகி வெளியேறிய அபிஷேக் சர்மா, அடுத்த நாளிலேயே மரண மாஸ் கம்பேக்கை கொடுத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக தொடக்க வீரராக விளையாடிய அபிஷேக் சர்மா 15 இன்னிங்ஸ்களில் 482 ரன்களை விளாசினார். அதிரடி தொடக்கத்தில் ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய அணியின் தேர்வு குழுவினரையும் அபிஷேக் சர்மா ஈர்த்தார். இதன் காரணமாக ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் அபிஷேக் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.
நீண்ட கால நண்பரான சுப்மன் கில் கேப்டன் என்பதால் நேரடியாகவே பிளேயிங் லெவனில் அபிஷேக் சர்மாவுக்கு இடம் கிடைத்தது. ஆனால் அறிமுக போட்டியில் சிக்சர் அடித்து முதல் ரன்னை எடுக்க வேண்டும் என்ற ஆசையில், டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் அறிமுக போட்டியிலேயே டக் அவுட்டாகி வெளியேறிய பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனையை படைத்தார்.
இந்த நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டி20 ஆட்டம் நடைபெற்று வருகிறது. இம்முறை அபிஷேக் சர்மா முதல் பந்தை சந்திக்காமல் சுப்மன் கில் முதல் பந்தை எதிர்கொண்டார். இதனால் அபிஷேக் சர்மா அடக்கி வாசிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று ஆட்டமிழந்த அதே பவுலர் வீசிய பந்தில் சிக்சர் அடித்து தனது முதல் சர்வதேச ரன்னை சேர்த்தார்.
இதன்பின் அதிரடியில் பொளந்து கட்டிய அபிஷேக் சர்மா, மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பொளந்து கட்டினார். அபிஷேக் சர்மா 30 பந்துகளில் 41 ரன்களை எடுத்திருந்த போது அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் 11வது ஓவரை வீச டியான் மேயர்ஸ் அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் 2, 4, 6, 4, 6, 4 மற்றும் 2 ஒய்டுகள் உட்பட 28 ரன்களை அபிஷேக் சர்மா விளாசினார்.
இதன் மூலமாக 33 பந்துகளிலேயே அபிஷேக் சர்மா சிக்சர் அடித்து அரைசதத்தை எட்ட, அதன்பின் ருத்ரதாண்டவம் ஆடினார். எப்படி பவுலிங் செய்தாலும், அட்டாக்கிங் மோடில் ஆடிய அபிஷேக் சர்மாவை கட்டுப்படுத்த முடியாமல் ஜிம்பாப்வே பவுலர்கள் திணறினர். தொடர்ந்து மசகட்ஷா வீசிய 14வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து அபிஷேக் சர்மா, 46 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்துள்ளார்.