27/10/2025
நன்றி: alar_veliyeedu, dodo_books, kesavan சூழலியல் வாசிப்பின் இரண்டாம் நிகழ்வு 26/10/2025 ( ஞாயிற்றுக்கிழமை ), காலை 8 மணிக்கு, திருச்சி டவுண்ஹால் அருகிலுள்ள மாநகராட்சி பூங்காவில் நடந்தேறியது.
உயிர் பதிப்பக வெளியீடுகளான காதலில் திளைக்கும் இரயில் பூச்சி ( ஏ. சண்முகானந்தம் ), மரங்கொத்திகள் ( ஏ. சண்முகானந்தம் ), கொம்பன் ஆந்தைகள் ( பேராசிரியர் த.முருகவேள் ), பூச்சிகள் - ஓர் அறிமுகம் ( ஏ. சண்முகானந்தம் ), மரியா சிபெல்லா மேரியான்: பூச்சியியலின் மூதாய் ( அருண் நெடுஞ்செழியன் ) ஆகிய நூல்கள் பற்றிய கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.
மரங்கொத்திகள் பற்றிப் பேசிய முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர் மேரி மார்ட்டினா அவர்கள் மரங்கொத்திகளின் வாழிடச்சிக்கல்கள் மற்றும் சவால்கள் குறித்துப் பேசும் போது எப்படி மரங்கொத்திகள் குடும்பம் குடும்பமாக வாழும் இயல்புடையவை என்பதை பதிவு செய்தார்.
கொம்பன் ஆந்தைகள் குறித்த திரு. விக்னேஷ் அவர்களின் உரை ஆந்தைகள் பற்றிய நம்பிக்கைகள் மற்றும் அவைகளோடு தொடர்புடைய மனித நடவடிக்கைகளை கவனப்படுத்தினார்.
காதல் என்பது மனிதர்களுக்கு மட்டுமானதல்ல, அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது என தனது உரையை தொடங்கிய பேரா. யோகராஜ் அவர்கள் அட்டைப் பூச்சிகள் மற்றும் இரயில் பூச்சிகள் பற்றிய தனது சொந்த அணுவங்களை இணைத்துப் பேசியது சுவாரஸ்யம் கூட்டியது.
பூச்சிகள்- ஓர் அறிமுகம் எனும் நூலை முன்வைத்து பேசிய திரு. கேசவன் அவர்கள் பறவைகளுக்கு முன்னால் முதலில் பறக்க தொடங்கியவை ‘பூச்சிகள்’ எனப் பேச ஆரம்பித்து எறும்புகள் எப்படி தங்களை விட முந்நூறு மடங்கு எடை கொண்டவற்றை நகர்த்தி செல்கின்றன என்பதை நூலிலிருந்து எடுத்துக்காட்டியதோடு, காட்டுயிர் புகைப்படக் கலைஞர் மற்றும் நூலின் ஆசிரியர் ஏ. சண்முகானந்தம் பற்றிய பதிவுகளையும் வாசித்துக் காட்டினார்.
பூச்சியியலின் மூதாயான மரியா
சிபெல்லா மேரியான் எனும் நூலை மையப்படுத்திப் பேசிய அதங்கோடு அனிஷ்குமார் எப்படி புகைப்படக் கருவிகள் இல்லாத காலகட்டத்தில் ஓவியங்கள் மூலம் பூச்சியியலை மரியா முன்னெடுத்தார் என்பதை கவனப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் ஆண்கள் நிறைந்த அறிவியல் உலகில் எங்கனம் தனித்துப் போராடி வெற்றி பெற்றார் என்பதையும் பதிவு செய்தார்.
நிகழ்வின் ஒரு பகுதியாக எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்களின் ‘சிலந்தி' கதை வாசிப்புக்குட்படுத்தப்பட்டு உரையாடல் நடைபெற்றது.
நிகழ்வினுடாக பூச்சிகள் ( வெண்ணிற கரப்பான்பூச்சி, மஞ்சள்புள்ளி மரவட்டை ), அணில், எறும்புத்திண்ணி போன்ற உயிரினங்களின் வருகை நிகழ்வை ஒரு உயிர்ப்புள்ள அனுபவமாக மாற்றியது.
நன்றி: உயிர் பதிப்பகம் சண்முகானந்தம் நன்றி: alar_veliyeedu, dodo_books