Cine rocket

Cine rocket 🎬🚀 Welcome to "CiniRocket: Exploring the Cinematic Cosmos"! 🚀🎬
🌟 Greetings, cinephiles
(2)

'ஹபீபி' காண வேண்டிய கலைப் படைப்பு!கஸ்தூரி ராஜா, ஜெயஸ்ரீ பினுராஜ், ஈஷா, மாளவிகா மனோஜ், அனு ஸ்ரேயா ராஜன், தனாஸ்ரீ சுதாகரன்...
12/06/2026

'ஹபீபி' காண வேண்டிய கலைப் படைப்பு!
கஸ்தூரி ராஜா, ஜெயஸ்ரீ பினுராஜ், ஈஷா, மாளவிகா மனோஜ், அனு ஸ்ரேயா ராஜன், தனாஸ்ரீ சுதாகரன், ரேகா குமணன் நடிப்பில் மொஹம்மத் அமீனின் கதை வசனத்தில் மீரா கதிரவன் திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கும் படம்.
நேசம் என்டர்டைன்மெண்ட், ஜி.கே.எஸ் புரடக்ஷன்ஸ், ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பு.
ஹபீபி என்ற சொல்லுக்கு அன்பே என்று பொருள்.
தென் தமிழ்நாட்டில், தறி நெய்வதே பரம்பரைத் தொழிலாகக் கொண்ட ஒரு தமிழ் இஸ்லாமியக் குடும்பத் தலைவர் முகமது யூசுப் (கஸ்தூரி ராஜா).
அவரது மனைவி மம்மது (ஜெயஸ்ரீ பினுராஜ்). யூசுப் மகன் சையது அபுதாஹிர் (ஈஷா) மற்றும் மகள்கள், ஒரு தம்பியும் உண்டு.
யூசுப்பின் தம்பிக்கு திருமணம் ஆக, தம்பி மனைவி சாலியாவுக்கு (அனு ஸ்ரேயா ராஜன்) தறியை நம்பியே வாழும் வறிய வாழ்வில் திருப்தி இல்லை.
வேறு தொழில்களுக்கு முயன்று முடியாமல் போக, அயல்நாடு போய் சம்பாதிக்கும் பழக்கம் சமூகத்தில் அதிகமாகி வந்த சூழலில், யூசுப்பின் தம்பி வெளிநாடு போகிறார்.
ஆரம்ப காலத்தில் ஆடியோ கேசட்கள் பேசி அனுப்பிக் கொள்வதில் துவங்கி, கால மாற்றத்தில் வீடியோ காலில் பேசிக் கொள்வதே வாழ்க்கை என்றாகிறது சாலியாவுக்கு. வசதி வருகிறது. ஆனால், குழந்தை இல்லாமல் போகிறது.
அபுதாகிருக்கு சின்ன வயசு முதல் சக பள்ளி மாணவி நிலோபர் (மாளவிகா மனோஜ்) மீது காதல்.
அவளுக்கும் விருப்பம் இருந்தும் அன்றைய சூழலில் அவர்களது ஒரு சந்திப்பு, மூன்றாம் பார்வையில் தவறாகப் படும் சூழல் ஏற்பட, அதை மாற்ற மாபெரும் பழி சுமக்கிறான் அபுதாகிர்.
கல்யாண ஆசை துறந்து வெளிநாடு போய் சம்பாதிக்கிறான்.
இதற்கு மேல் தாமதிக்க முடியாது என்ற சூழலில் அவனுக்கு பெண் பார்க்கின்றனர். வயது காரணமாக பெண் கிடைப்பது பெரும்பாடாக இருக்கிறது. ஒரு நிலைக்கு மேல் அவனுக்கு வெளிநாடு போக விருப்பமும் இல்லை.
மிகுந்த தேடலுக்குப் பிறகு, பரந்த வாசிப்பு அனுபவமும் சுயமரியாதை உணர்வும் கொண்ட ஒரு பெண் (தனாஸ்ரீ சுதாகரன்) நிச்சயம் செய்யப்படுகிறார்.
சம்பாதித்த பணத்தை சகோதரி திருமணம் உள்ளிட்ட செலவுகளுக்கு அபுதாஹிர் செலவு செய்த நிலையில், அவன் திருமணத்துக்குத் தேவையான பணம் கேள்விக்குறியாகிறது.
அதில் ஏற்படும் அதிர்ச்சிகள், இழப்புகள், விரிசல்கள்...
தமிழ் இஸ்லாமிய சமூகத்தில் பல குடும்பங்களில், வறுமையை ஒழிக்க உறவுகளைப் பிரிந்து அயல்நாடு சென்று வாடுவதே வாழ்வு என்றாலும், அந்த தியாகங்களுக்காவது பலன் கிடைக்கிறதா என்ற கனமான கேள்வியை நம் இதயத்தில் நிறுத்தி படத்தை முடிக்கிறார் மீரா கதிரவன்.
தென்காசி, கடையநல்லூர் பகுதிவாழ் நெல்லைத் தமிழ் பேசும் தமிழ் முஸ்லிம்களின் வாழ்க்கை, பின்புலம், கலாச்சராம், பண்பாடு, ஆண்களின் தொழில் போராட்டம், பெண்களின் இயங்குதளம், தலைமுறை மாற்றங்களின் சிந்தனை வேறுபாடுகள்... இவைகளை வைத்து இதுவரை தமிழ் சினிமா காணாத படத்தை மண் மணத்தோடு கொடுத்திருக்கிறார் மீரா கதிரவன்.
காட்சிகளை அவர் அமைத்து இயக்கி இருக்கும் விதம் கவிதை போல இருக்கிறது.
ஓர் இஸ்லாமிய கூட்டுக் குடும்பத்தை அதில் ஒவ்வொரு உறவுகளின் உரிமையை - அந்த உரிமையின் எல்லையை - அதன் பரிமாணங்களை அவர் வடித்திருக்கும் விதம் அபாரமானது.
படத்துக்கான முகங்களை அவர் தேர்ந்தெடுத்திருக்கும் நேர்த்தியும் சிறப்பானது.
மிக முக்கியமாக பெண்களின் உலகத்தை அவர் காட்டியிருக்கும் விதம் அற்புதம்.
அம்பேத்கார், பெரியார் ஆகியோரை குறிப்பிட்டு சுயமரியாதை உணர்வோடு கூடிய பெண் கதாபாத்திரத்தை உலவ விட்டிருக்கும் விதத்தில் தனித்து ஜொலிக்கிறார் மீரா கதிரவன்.
தறியை ஆணி வேராகக் கொண்டு உருவான ஒரு குடும்பத்தில் - வீட்டில் - அந்தத் தறியை உடைத்து தரையில் இருந்து பெயர்த்து எடுக்கும் காட்சியும் அப்போது யூசுப் கதாபாத்திரத்தின் மன அதிர்வுகளும் நம்மை தாக்குகிறது.
அபுதாஹிரின் கல்யாண சச்சரவு காட்சியில் அத்தனை கதாபாத்திரங்களின் நியாயத்தையும் வெளிப்படுத்தும் எழுத்தும் இயக்கமும் கொண்டாட வைக்கிறது.
நிலோபர் என்ற பெயரை நிலா என்று மண் மொழியில் மாற்றி அழைப்பது ரசனை.
காட்சியின் உணர்வுக் கூட்டலுக்கு உயிர் கொடுக்கிறது சாம்.சி.எஸ் கொடுத்திருக்கும் இசை.
தவிர ராமமூர்த்தி இசையில் நாகூர் சலீம் எழுதிய கப்பலுக்குப் போன மச்சான் என்ற புகழ்பெற்ற தனிப் பாடலை சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார் மீரா கதிரவன்.
அதில் வரும் ''எப்பதான் வருவீங்க பாக்குறேன். இரவும் பகலும் தொழுது தொழுது கேக்குறேன்" என்ற வரிகளில் வரும், 'தொழுது' என்ற வார்த்தை காதலிலும் இஸ்லாமிய வழிபாட்டிலும் சம அளவில் முக்கியமானது அல்லவா?
அந்த வார்த்தையை சரியாகப் பயன்படுத்திய நாகூர் சலீம் பாராட்டுக்குரியவர்.
மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவின் நேர்த்தியான ஒளி இருள் பயன்பாடு, நம்மை காட்சி நடக்கும் இடத்துக்குள் கொண்டு போய் உட்கார வைக்கிறது.
கேரளா மலைக்காட்டுச் சாலைகளை ஒரு ஏரியல் வியூவில் சுற்றிச் சுழன்று உயர்த்தி நிறுத்தும் ஷாட் உட்பட பல விதங்களில் சிறப்பான ஒளிப்பதிவு.
படப்பிடிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் காடு, மலைகள், ஊர்கள், வீதிகள், இடங்கள், அப்புன்னி சாஜனின் கலை இயக்கம் யாவும் மிகப் பொருத்தம்
குடும்பத் தலைவர் யூசுப்பாக மிக சிறப்பாக நடித்துள்ளார் இயக்குனர் கஸ்தூரி ராஜா. வாழ்க்கை கொடுக்கும் அடியில் கிட்டித்துப் போகும் அபுதாஹிர் கேரக்டரில் உணர்ந்து நடித்துள்ளார் ஈஷா.
முக்காடு போட்ட நிலவாக மாளவிகா மனோஜ் சிறப்பான பங்களிப்பு. சுயமரியாதைப் பெண்ணாக, கத்தி வீசும் சிரிப்பில் கவர்கிறார் தனாஸ்ரீ சுதாகரன்.
குடும்பத் தலைவர் யூசுப்பின் தம்பி மனைவி சாலியாவாக வரும் அனு ஸ்ரேயா ராஜன் நடிப்பில் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.
கல்யாணப் பெண்ணாக நாணத்தோடு அந்த குடும்பத்துக்குள் நுழைவது முதல் கணவனோடு தொலைதூரக் குடும்பம் நடத்துவது, அபுதாஹிரின் சித்தி என்ற நிலையில் இருந்து அம்மாவாக மாறுவது வரை, எல்லா கால கட்ட... வயது.. மாற்றங்களிலும் அருமையாக நடித்துள்ளார் அனு.
ஜெயஸ்ரீ பினுராஜ் அந்தக் கேரக்டராகவே மாறி விட்டார். இஸ்மத் பானு, ரேகா குமணன் ஆகியோரும் கவனிக்க வைக்கிறார்கள்.
கலாச்சார பின்னணி, அயல்நாடு பிரச்சனை இரண்டில் எதை எந்த அளவில் சொல்வது என்பதில் ஒரு தடுமாற்றம் தெரிகிறது.
சில காட்சிகள் அழகியலாக இருந்தாலும் வேகத்தடையாக இருக்கின்றன. சில காட்சிகள் துண்டுத் துண்டாக நிற்கின்றன.
இயக்குநரின் பின்னணிக் குரல் மீண்டும் மீண்டும் வருவதும் படத்துக்குள் இருந்து நம்மை வெளியே இழுக்கிறது.
படத்தின் பெயர் வெகுஜன மக்களை ஏற்கும்படி இல்லை. வேறொரு பொதுப் புரிதல் உள்ள பெயரை வைத்து துணைப் பெயராக ஹபீபி என்று வைத்திருக்கலாம்.
இவை எல்லாம் சரி செய்யப்பட்டு இருந்தால், வெகுஜன மக்களை உடனடியாக உள்ளே இழுக்கும் படமாக இது மாறி இருக்கும்.
இப்படி சில குறைகள் இருந்தாலும் மிக அழுத்தமான தனித்தன்மை. ஒரு பசுமை வாழ்வியல் கொண்ட படமாக வந்துள்ளது ஹபீபி.
காண வேண்டிய கலைப் படைப்பு.
மொத்தத்தில் ஹபீபி... டார்லிங் !
- சு. செந்தில் குமரன்
#கஸ்தூரிராஜா #ஜெயஸ்ரீபினுராஜ் #ஈஷா #மாளவிகாமனோஜ் #அனுஸ்ரேயாராஜன் #ஹபீபிவிமர்சனம் #மீராகதிரவன் #சாம்சிஎஸ் #தனாஸ்ரீசுதாகரன்

'ஆட்டி' - சங்க கால தமிழ்ப் பெண்களின் நிலைக்குச் சான்று!அபி நக்ஷத்ரா, இசக்கி கார்வண்ணன், காதல் சுகுமார், சௌந்தர், செல்வகு...
12/06/2026

'ஆட்டி' - சங்க கால தமிழ்ப் பெண்களின் நிலைக்குச் சான்று!

அபி நக்ஷத்ரா, இசக்கி கார்வண்ணன், காதல் சுகுமார், சௌந்தர், செல்வகுமார், பிரவீன் பழனிசாமி நடிப்பில், திருமுருகன் திரைக்கதையில், மேதகு படத்தை இயக்கிய கிட்டு இயக்கி இருக்கும் படம்.

லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பு.

அந்தக்கால அகண்ட மதுரை மாவட்டத்தில் உள்ள தேயிலை மலைக்காடு. அங்கு இருக்கும் டீ எஸ்டேட்களில் ஒன்று இடைக்காடு எஸ்டேட். அங்கே பரம்பரை பரம்பரை பரம்பரையாக வாழும் தொழிலாளர்கள்.

எல்லா எஸ்டேட்களுக்கும் சேர்ந்தது ஓர், ஒற்றை அறை தபால் நிலையம், இரண்டு பேர் மட்டும் வெட்டியாக இருக்கும் ஒரு போலீஸ் ஸ்டேஷன்.

அந்த மக்களில் ஒருவரான அழகி (அபி நக்ஷத்ரா) என்.ஜி.ஓ அமைப்புகள் கொண்டு வரும் சில புத்தகங்களை வைத்து எழுதப் படிக்க கற்றுக் கொள்கிறாள். சிறுவர்களுக்கு சொல்லித் தருகிறாள்.

அந்த ஊருக்கு ஒரு பள்ளிக்கூடம் வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கிறாள்.

அந்த தூங்கி வழியும் காவல் நிலையத்துக்கு ஒரு இன்ஸ்பெக்டர் (இசக்கி கார்வண்ணன்) வருகிறார்.

''அது எப்படி ஒரு ஏரியாவில் குற்றம் நடக்காமலே இருக்கும்? எனக்கு தினமும் ஒரு கேஸ் வேணும்'' என்கிறார்.

உண்மையில் அங்கே உடல் முழுக்க மறைத்த - ஐவர் அணி ஒன்று, அவ்வப்போது சிலரை கொல்கிறது.

பள்ளிக்கூடத்துக்கு ஒரு ஆசிரியர் (பிரவீன் பழனிசாமி) வருகிறார். அவர் அழகியிடம் தவறாக நடக்க முயல்கிறார். இந்த நிலையில் ஆசிரியர் மரணம் அடைகிறார்.

கொலையை விசாரிக்கிறார் இன்ஸ்பெக்டர்.

கொலை செய்யப்பட்ட ஆசிரியர் எம்.எல்.ஏ ஒருவரின் தம்பி என்பதும் அவர் இதற்கு முன்பே பல ஊர்களில் பணியாற்றும்போது பெண்களிடம் தவறாக நடந்துள்ளார் என்பது தெரிய வருகிறது.

ஆசிரியரைக் கொன்றது யார் என்பதே படம்.

ஆட்டி என்ற சொல்லுக்கு தலைவி, முதன்மையானவள் என்று பொருள் (நீயேதான் எனக்கு மணவாட்டி என்ற எம்.ஜி.ஆர் படப் பாடல் உதாரணம்.)

கரிகால்சோழனின் மருமகன் பெயர் ஆட்டன் - அத்தி என்கிறது வரலாறு. அதற்கு அத்தி எனும் தலைவன் என்று பொருள்.

தகிக்கும் ஒரு டோனில் மேலுடை அணியாத ஆண்கள், ரவிக்கை அணியாத பெண்கள் என்ற அந்தக்கால பணியில் நகரும் படம். கதை நிகழும் இயற்கைக் களம் அற்புதமாக இருக்கிறது. உபயம் கிட்டு.

பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்களாக வரும் அந்த குட்டிப் பையன்கள் கலக்குகிறார்கள்.

வரலாற்று வழியே வந்த பாரம்பரிய நடனங்கள் கவனிக்க வைக்கின்றன.

சிபி சதாசிவம் ஒளிப்பதிவில் கதை நிகழும் களம் மனசுக்குள் இறங்குகிறது.

கலை இயக்குனர் முஜிபுர் ரஹ்மான் சிறப்பான பங்களிப்பு.

இசையமைப்பாளர் தீசன் கவனிக்க வைக்கிறார்.

நடிக்கும்போதும் தயாரிப்பாளராகவே இருக்கிறார் இசக்கி கார்வண்ணன்.

எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கும் விடியல் என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் காதல் சுகுமார்.

அபி, சவுந்தர் என்று நிறைய பேர் வந்து வந்து வசனம் பேசிப் போகிறார்கள்.

படத்தின் அடிப்படைக் கதை அபாரமானது.

ஏதோ தமிழ்நாட்டில் கொஞ்ச காலமாக சிலரால்தான் பெண்களுக்கு உரிமையே கிடைத்தது என்று சொல்லப்படுவது பொய்.

காலகாலமாக எங்கள் பெண்கள் உரிமையோடும் சுதந்திரமாகவும்தான் வாழ்ந்தார்கள் 'எங்கள் குடியில் பெண்கள் முதலாம்' என்ற உண்மையை வெளிப்படுத்தும் கதை.

தமிழ்நாட்டில் இவ்வளவு பெண் தெய்வங்கள் குலதெய்வங்களாக இருப்பதற்கான காரணத்தையும் படம் சொல்கிறது.

தமிழ்நாட்டில் மராத்தியர் ஆண்டபோது, அவர்கள் பல தமிழ்ப் பெண்களை மானபங்கப்படுத்தி மாற்று இனத்தவருக்கும் கொடுத்தனர்.

அதை எதிர்த்து கிளம்பிய ஐந்து வீராங்கனைகள், அப்படி - தமிழ்ப் பெண்களை மானபங்கப்படுத்துபவர்களை எல்லாம் வெட்டிக் கொன்றனர்.

அந்த மரபில் வந்தவர்களே பல பெண் குலதெய்வங்கள். எனவே பாலியல் பலாத்காரத்துக்கு எதிராக பெண்களே கிளர்ந்து எழுந்தது தமிழகக் குடியில் காலகாலமாகவே உண்டு என்று சொல்வதன் - என்ற அற்புதமான விஷயத்தை சொல்லும் படம் இது.

ஆனால், அதை சரியாகச் சொல்லாமல் கடமைக்குச் சொல்லி இருக்கிறார்கள்.

கால காலமாக எங்கள் பெண்கள் உரிமையோடும் சுதந்திரமாகவும்தான் வாழ்ந்தார்கள் 'எங்கள் குடியில் பெண்கள் முதலாம்' என்பதை சொல்ல எவ்வளவோ விஷயங்கள் உள்ளன.

சங்க காலத்தில் பெண்களுக்கு சொத்துரிமை இருந்ததற்கான ஆதாரங்கள், அந்தக் காலத்திலேயே தமிழ் இலக்கிய உலகில் புகழ்பெற்ற ஏராளமான பெண் புலவர்கள், மன்னர்களுக்கு இடையே நடந்த போரை நிறுத்திய ஔவையார் இவற்றை எல்லாம் விளக்கமாகச் சொல்ல வேண்டாமா?

(வெகுகாலம் பிரிந்து இருக்கும் தலைவனுக்கு, ''நீ சீக்கிரம் வராவிட்டால் இன்னொரு தீர்மானம் செய்து கொள்வேன்” என்று அதிரடியாக செய்தி அனுப்பிய பாடல் கூட சங்கத் தமிழில் இருக்கிறது)

இதை எல்லாம் சொன்னால்தானே தமிழ்ச் சமூகம் அந்தக் காலத்தில் பெண்களை எப்படி உயர்வாக வைத்திருந்தது என்பது புரியும்?

மராத்தியர் கால விஷயத்தை காட்சியாக சொல்ல வேண்டாமா?

அதை எல்லாம் காட்சிகளாக சொல்லாமல் தகவலாகச் சொல்வதால் கதைக்கு உரிய கணம் கிடைக்காமல் போகிறது.

பாலியல் பலாத்காரத்துக்கு எதிரான பெண்களின் சீற்றம் தமிழ் மண்ணில் புதிது அல்ல என்று சொல்லி இன்றைய பெண்களுக்கு அது உத்வேகம் தரும் அளவுக்கு படத்தைக் கொண்டு வர வேண்டாமா? கனெக்ட் பண்ண வேண்டாமா?

அதெல்லாம் இல்லாததால் ஆட்டி... நுனிப்புல்.

- சு. செந்தில் குமரன்

#ஆட்டிவிமர்சனம் #அபிநக்ஷத்ரா #இசக்கிகார்வண்ணன் #காதல்சுகுமார் #சௌந்தர் #செல்வகுமார் #பிரவீன்பழனிசாமி #திருமுருகன் #கிட்டு

பி.வி.நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா நடிக்கும் 'எங்கள் தங்கம்' படத்தின் ட்ரெய்லர் வெளியானது! ஆக்ஷன், காமெடி, த்ரில்லர...
12/06/2026

பி.வி.நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா நடிக்கும் 'எங்கள் தங்கம்' படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

ஆக்ஷன், காமெடி, த்ரில்லர் நிறைந்த ஃபேமிலி டிராமா Genre-ல் உருவாகியுள்ள இப்படம் வரும் 19ம் தேதி வெளியாகவுள்ளது.

#எங்கள்_தங்கம் #பிவி_நந்தினி_ரெட்டி #சமந்தா #எங்கள்_தங்கம்_ட்ரெய்லர்

திரைக் கலைஞர்களைப் பிரிக்காதீர்கள்!மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்உலக நாட்டியப் பேரொளி பத்மினிக்குப் பாராட்டுவிழா நடத்திய நடிகர...
12/06/2026

திரைக் கலைஞர்களைப் பிரிக்காதீர்கள்!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்

உலக நாட்டியப் பேரொளி பத்மினிக்குப் பாராட்டுவிழா நடத்திய நடிகர்சங்கம்.

1957-ம் ஆண்டு.

மாஸ்கோவில் நடந்த உலக இளைஞர் விழாவில் கலந்து கொண்டு நாட்டியமாடினார்கள் தமிழகத் திரைப்படக் கலைஞர்களான பத்மினியும், ராகினியும்.

அவர்களுக்கு முதல் பரிசு கிடைத்தது. பெருமிதம் பொங்க தமிழகத்திற்குத் திரும்பியபோது அவர்களுக்குப் பாராட்டு விழாவை நடத்தியது தென்னிந்திய நடிகர் சங்கம்.

சி.சுப்பிரமணியம், எஸ்.எஸ்.வாசன், கே.சுப்பிரமணியம், மு.வரதராசன், டி.கே.சண்முகம் போன்றோர் பேசிய பிறகு பேசியவர் எம்.ஜி.ஆர்.

அப்போது சில பத்திரிகைகளில் பத்மினி சகோதரிகளுக்குக் கிடைத்த பெருமை தமிழகத்திற்கா, கேரளத்திற்கா என்று விவாதங்களை நடத்தியபோது “கலைஞர்களைப் பற்றி இப்படிப்பட்ட கருத்துக்களைப் பரப்புவது அடியோடு தவிர்க்கப்பட வேண்டும்” என்று கண்டித்துப் பேசியவர் எம்.ஜி.ஆர்.

நாட்டியப் பேரொளி பத்மினியின் பேச்சு ரத்தினச் சுருக்கம்.

“கேரளத் தாயால் ஈன்றெடுக்கப்பட்டு, தமிழ்த்தாயால் வளர்க்கப்பட்டு, கலைத்தாயினிடத்தில் ஒப்படைக்கப்பட்டவர்கள் நாங்கள் என்றே கூற விரும்புகிறேன்”

நன்றி : நடிகன் குரல் : 1957 நவம்பர் மாத இதழ்.

#தென்னிந்தியநடிகர்சங்கம் #பத்மினி #ராகினி #சிசுப்பிரமணியம் #எஸ்எஸ்வாசன் #கேசுப்பிரமணியம் #முவரதராசன் #டிகேசண்முகம்

கலை உலகின் பொக்கிஷம் ‘கல்லாப்பெட்டி’ சிங்காரம்!எங்க ஊரு பாட்டுக்காரன், பூவிலங்கு, டார்லிங் டார்லிங் டார்லிங், சுவரில்லாத...
12/06/2026

கலை உலகின் பொக்கிஷம் ‘கல்லாப்பெட்டி’ சிங்காரம்!
எங்க ஊரு பாட்டுக்காரன், பூவிலங்கு, டார்லிங் டார்லிங் டார்லிங், சுவரில்லாத சித்திரங்கள், மோட்டார் சுந்தரம்பிள்ளை, ஒரு கை ஓசை, கதாநாயகன் போன்ற 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ‘கல்லாப்பெட்டி’ சிங்காரம்.

இவர் சொந்தமாக நாடக்குழு வைத்து நாடகங்கள் பலவும் மேடையேற்றியுள்ளார்.

கறுத்து மெலிந்த தேகம், திகிலடைந்த, ஆனால், சுயதைரியம் அளித்துக் கொள்வதன்மூலம் திடீர் பிரகாசமடையும் கண்கள், திறந்த வாய், தோரணையான நடை என்ற அடையாளங்களுடன் நகைச்சுவை கலந்த குணச்சித்திரப் பாத்திரங்களில் வலம் வந்தவர்.

எண்பதுகளில் அவர் பங்கேற்ற படங்களில் நகைச்சுவை ஏரியாவை கலகலக்க செய்தவர்.

தமிழ் வணிக சினிமாவின் வெற்றிகரமான திரைக்கதையாளரான பாக்யராஜ் முதன் முதலில் இயக்கிய சுவர் இல்லாத சித்திரங்களில் கல்லாப்பெட்டி சிங்காரத்தை அறிமுகம் செய்தார்.

அறுபதுகளிலேயே மோட்டார் சுந்தரம்பிள்ளை போன்ற படங்களில் சிறு வேடங்களில் சிங்காரம் வந்திருந்தாலும் முக்கியத்துவம் பெற்ற வேடம் என்ற வகையில் இது தான் முதல் படம் என்பதால், ஒருவேளை அறிமுகம் என்று பாக்யராஜ் குறிப்பிட்டிருப்பார்.

பாக்யராஜ், சிறு வேடம் என்றாலும் கதையுடன் ஒட்டிய பாத்திரங்களை கல்லாப்பெட்டிக்குத் தன் பல படங்களில் தந்தார். அவரை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட ஒரே இயக்குநர் பாக்யராஜ் தான் என்று சொல்லவேண்டும்.

அவர் இயக்கிய சுவரில்லாத சித்திரங்கள், ஒரு கை ஓசை, டார்லிங் டார்லிங் டார்லிங், இன்று போய் நாளை வா போன்ற படங்களில் கல்லாப்பெட்டி ஏற்று நடித்தப் பாத்திரங்கள் தனித்த நகைச்சுவைக்காக இன்றும் பேசப்படுகின்றன.

எண்பதுகளில் குறிப்பிட்ட சில இயக்குனர்களால் கீழ் மத்தியத் தர மக்களின் வாழ்க்கை திரையுலகில் அசலாய் கொண்டு வரப்பட்டபோது எதார்த்தமான முகம் கொண்ட புதிய நடிகர்களின் வருகை முக்கியத்துவம் பெற்றது.

அன்றாடம் எதிர்ப்படும் முகங்கள் அறிமகமான சமயத்தில் திரையில் தோன்றிய கல்லாப்பெட்டி மிக அருமையாக அந்த மக்களின் வாழ்க்கையைத் திரையில் பிரதிபலித்தார்.

முக்கியத்துவம் பெற்ற நடிகர் இல்லையென்றாலும் கல்லாப்பெட்டி சிங்காரம் இன்றும் நினைவு கொள்ளப்பட அவரது வசன உச்சரிப்பும் முகபாவனையும் பிரத்யேகக் குரலுமே காரணம்.

"கண் அடிச்சா வறாத பொம்பள, கைய பிடிச்சு இழுத்தா மாத்திரம் வந்திரவா போறா....." சுவர் இல்லாத சித்திரங்கள் படத்தில் கவுண்டமணி உடன் ஆன உரையாடல் பிரசித்தம்.

இன்று போய் நாளை வா படத்தில் சோமா பயில்வான் ஆக வந்து படத்தை கலகலப்பாக்கிவிடுவார்.

டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில்.. குளியல் தொட்டியில் இருந்து கம்பீரமாக எழுந்து சென்று கோட் சூட் அணியும் காட்சியில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த புதுப் பணக்காரர் போலவே இருப்பார்.

அடுத்த காட்சியில் அவர் வெறும் வாட்ச்மேன் தான் என்று பார்வையாளர்களுக்குப் போட்டு உடைத்து விடுவார் மகன் பாக்யராஜ். குட்டுடைந்த கல்லாப்பெட்டியின் முகபாவனை சிறப்பாக இருக்கும்.

பாக்யராஜின் வீட்டு ஓனராக நடித்த அந்த ஏழு நாட்களிலும் தன் தனிச் சிறப்பை அவர் பதிவு செய்தார். வீடு பார்க்க பாக்யராஜிடம் அவரது உயர்த்திய வேட்டியை கீழே விடச் சொல்லும் காட்சி இயல்பான நகைச்சுவைக்கு ஒரு சான்று.

உதயகீதம் படத்தில் கால் சட்டைக்கு படு முடிச்சு போட்டதால் இதை மட்டும் விட்டுட்டு போய்ட்டான் என்னும் போது பாவமாய் இருப்பார்.

மறக்கமுடியாத ஒரு நல்ல கலைஞன்.

எல்லா பால்ய கால நினைவு மீட்டல்களிலும் கல்லாப்பெட்டி சிங்காரம் அவர்களுக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு.

கல்லாப்பெட்டி சிங்காரம் கடைசியாக நடித்த திரைப்படமான கிழக்கு வாசல், படப்பிடிப்பின் போது தனது 52 வயதில் மறைந்தார்.

- நன்றி : இந்துஸ்தான் டைம்ஸ் இதழ்

#கல்லாப்பெட்டிசிங்காரம் #எங்கஊருபாட்டுக்காரன் #பூவிலங்கு #டார்லிங்டார்லிங்டார்லிங் #சுவரில்லாதசித்திரங்கள் #மோட்டார்சுந்தரம்பிள்ளை #ஒருகைஓசை #பாக்யராஜ் #அந்தஏழுநாட்கள்

6 மாதங்கள் பயிற்சி எடுத்த குஷ்பு மகள் அவந்திகா!தாமோ நாகபூஷ்ணம் எழுதி இயக்கியுள்ள புதிய படம் ‘அட்டாக்கர்’. ஜினிமா மீடியா ...
11/06/2026

6 மாதங்கள் பயிற்சி எடுத்த குஷ்பு மகள் அவந்திகா!

தாமோ நாகபூஷ்ணம் எழுதி இயக்கியுள்ள புதிய படம் ‘அட்டாக்கர்’. ஜினிமா மீடியா அண்ட் எண்டர்டெயின்மெண்ட் லிமிடெட் சார்பில் தினேஷ் ராஜ் தயாரிக்கிறார்.

இதில், நடிகர் தனுசின் உறவினரும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவருமான பவிஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.

முன்னணி நடிகையான குஷ்புவின் மகள் அவந்திகா கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.

இந்தப் படம் பற்றி படக்குழுவினர் கூறும்போது, “வாலிபால் விளையாட்டையும், அதனுடன் தொடர்புடைய கலாசார அடையாளத்தையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'அட்டாக்கர்', தமிழ் சினிமாவில் வாலிபாலை பிரதான கருவாகக்கொண்டு உருவாகும் முதல் திரைப்படமாக தனித்துவம் பெறுகிறது.

இந்தியாவின் முன்னணி வாலிபால் வீரர்கள் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பவிஷ் - அவந்திகா ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களுக்காக ஆறு மாதங்களுக்கும் மேலாக தொழில்முறை வாலிபால் வீரர்களுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தென்னிந்தியாவின் முக்கிய பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. படத்தின் அடுத்தக்கட்ட அப்டேட்கள் விரைவில் வெளியாகும்" என்று தெரிவித்துள்ளனர்.

#தாமோ_நாகபூஷ்ணம் #தனுஷ் #பவிஷ் #குஷ்பு #அவந்திகா #வாலிபால் #தமிழ்சினிமா #தென்னிந்தியசினிமா #திரையுலகம் #விளையாட்டு #புதியபடம் #சினிமாசெய்திகள்

ஜனவரியில் தொடங்குகிறது கமல்-ரஜினி காம்போ மூவி!ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து நடிக்கும் படத்தினை இயக்குநர...
11/06/2026

ஜனவரியில் தொடங்குகிறது கமல்-ரஜினி காம்போ மூவி!

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து நடிக்கும் படத்தினை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ள நிலையில், இதன் படப்பிடிப்பு 2027ல் தொடங்க உள்ளதாக தகவல்.

#ரஜினிகாந்த் #கமல்ஹாசன் #இயக்குநர்_நெல்சன்_திலீப்குமார் #ரஜினி #கமல் #நெல்சன்_திலீப்குமார்

சமூகப் பொறுப்புடன் சினிமாக்கள் உருவாக வேண்டும்!இயக்குநர் ஏ. சி. திருலோகச்சந்தர்‘வீரத்திருமகன்’ படத்தை முதலில் இயக்கிய தி...
11/06/2026

சமூகப் பொறுப்புடன் சினிமாக்கள் உருவாக வேண்டும்!
இயக்குநர் ஏ. சி. திருலோகச்சந்தர்

‘வீரத்திருமகன்’ படத்தை முதலில் இயக்கிய திருலோகசந்தர், தொடர்ந்து ‘பாரதவிலாஸ்’, ‘அன்பே வா’, ‘நானும் ஒரு பெண்’, ‘என் தம்பி’, ‘எங்கிருந்தோ வந்தாள்’, ‘அதே கண்கள்’ என்று பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர்.

அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து பொக்கிஷமான பல பகுதிகள் இதோ:

பொழுதுபோக்கு ஒன்றை மட்டுமே குறியாகக் கொண்டு தற்போது பல படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது சரியான போக்கா?

பதில்: நான் இயக்கிய ‘நானும் ஒரு பெண்’ படத்தில் கறுப்பு நிறமும், ஏழ்மை சூழ்நிலையும் இணைந்த ஒரு பெண்ணின் பிரச்சினைகளை விளக்கியிருந்தேன்.

அப்போதே வரதட்சிணைக் கொடுமையை அதில் சுட்டிக்காட்டினேன். சமூக நீதியை இன்னும் பளிச்சென்று திரையில் காட்ட வேண்டிய நேரமிது.

காமெடி, காதல், சோகம், சண்டை இப்படி எல்லாவற்றிற்கும் ஒரு படத்தில் இடம் இருக்கும்போது இயக்குநர் ‘என் மனச் சாந்திக்காக இந்தக் காட்சிகள்’ என்று நல்ல கருத்துக்களை சில காட்சிகளில் சொல்லலாமே.. இதனால் மக்கள் ஒரு படத்தை ஒதுக்கி விடுவார்களா என்ன?

எம்.ஜி.ஆரைக் கதாநாயகனாகக் கொண்ட ‘அன்பே வா’ படத்தை இயக்கியிருக்கிறீர்கள். அவரை இயக்குவது ஒரு இனிய அனுபவம் என்றாலும் அதில் சில சங்கடங்களும் உண்டு என்று சில இயக்குநர்கள் கூறுவதுண்டு. உங்கள் அனுபவம் எப்படி?

கதையை விவரித்த உடனேயே எம்.ஜி.ஆர். என்னிடம் “இதில் நான் செய்ய வேண்டியது எதுவுமில்லை. ஒரு பொம்மையைப் போல் நீங்கள் சொன்னபடி நடிக்கப் போகிறேன்’’ என்றார்.

படத்தின் வெற்றி விழாவில் இதை அவரே குறிப்பிட்டு “இயக்குநர் என்னை சரியான விதத்தில் ஆட்டிவைத்தார்’’ என்றார் அந்த சகலகலா வல்லவர்.

சமூகத்தில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களுக்கு திரைப்படங்களும் ஒரு காரணமா?

தீவிர வன்முறையாளர்கள் சிலர் இருப்பார்கள். வேறு சிலரோ எப்படியும் குற்றங்களைப் புரியாதவர்கள்.

இரண்டுக்கும் இடையில் சிலர் உண்டு. அவர்கள் மனதின் அடியில் வன்முறை உணர்வு மறைந்திருக்கும்.

வன்முறைக் காட்சிகளை விரிவாகக் காட்டும் திரைப்படங்கள் அவர்களை நிச்சயம் குற்றம் புரியத் தூண்டும். எனவே திரைப்படங்கள் சமுதாயப் பொறுப்புணர்வுடன் உருவாக்கப்பட வேண்டும்.

நீங்கள் இயக்கிய காட்சிகளில் உங்களையே அசர வைத்தது எது?

சிவாஜியுடன் 23 படங்கள் சேர்ந்து பணியாற்றியிருக்கிறேன். பலமுறை நான் எதிர்பார்ப்பதைவிட பிரமாதமாக நடிப்பார்.

‘தெய்வமகன்’ படத்தில் ஒரு காட்சியில் ‘மூன்று சிவாஜிகளும்’ தோன்றுவார்கள். மிக அற்புதமாக அந்த மூன்று கதாபாத்திரங்களிடையே வேறுபாடு காட்டி நடித்திருந்தார் சிவாஜி கணேசன்.

ரஷ் போட்டுப் பார்த்தபோது என்னையே மறந்து “மூணு பேரும் ரொம்ப நல்லா ஆக்ட் பண்ணியிருக்காங்க’’ என்று நான் கத்திவிட, என்னைச் சுற்றியிருந்தவர்களுக்கு ஒரே ஆச்சரியம்!

பல திரைப்படங்களில் அலங்காரப் பதுமையாக வந்து கொண்டிருந்தவர் ஜெயலலிதா. ஆனால் ‘எங்கிருந்தோ வந்தாள்’ படத்தில், ஜெயலலிதா அதன் இந்தி மூலமான கிலோனா படத்தில் மும்தாஜ் நடித்ததைவிட பல மடங்கு சிறப்பாக நடித்திருந்தார் என ரசிகர்கள் புகழ்ந்தனர். அது பற்றிய உங்கள் நினைவலைகள்..

முதலில் ஒரு திருத்தம். ‘கிலோனா’ மூலப்படம் அல்ல. அதுவும் அதன் தமிழ்ப் பதிப்பான ‘எங்கிருந்தோ வந்தாளும்’ ஒரே சமயத்தில் தயாரிக்கப்பட்டன. இந்தி வடிவத்தை எல்.வி. பிரசாத் இயக்கினார். இரண்டு படங்களுக்கும் பிலிம்ஃபேர் பரிசுகள் கிடைத்தன.

தன்னை மறந்துவிட்ட சிவாஜியிடம் பழைய சம்பவங்களை நெஞ்சக் குமுறலுடன் நினைவுபடுத்தும் அந்தக் காட்சிக்கான வசனங்களை ஷூட்டிங் நடந்த அன்றுதான் எழுதினேன்.

“சிவாஜி சார், நீங்கள் இந்தக் காட்சியில் வெறும் டம்மிதான்’’ என்றேன். கூட நடப்பவர்களின் நடிப்புத் திறமையில் அக்கறை காட்டும் சிவாஜி இதற்கும் பெருந்தன்மையோடு ஒப்புக்கொண்டார்.

ஜெயலலிதா மீது நான் வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை. காட்சி மிகச் சிறப்பாக அமைந்தது.

பல வெற்றிப் படங்களை இயக்கியிருக்கிறீர்கள். என்றாலும் தமிழ்த் திரையுலகச் சரித்திரத்தின் முக்கிய இயக்குநர்கள் யாரென்று கேட்டால் உங்கள் பெயர் உடனே நினைவுக்கு வருமா?

(சிரித்தபடி) என் பேரே கொஞ்சம் விசித்திர மானதுங்க. டெலிபோன் டைரக்டரியிலே இந்தப் பேரிலே நான் ஒருத்தன்தான் இருக்கேன்.

அதனால் நினைவுக்கு வராதோ என்னவோ? (சீரியஸாகி) நான் இயக்கிய ‘அதே கண்கள்’ படம் இன்றும் க்ரைம் த்ரில்லர் படங்களுக்கு ஒரு சிறந்த முன்னோடி என்கிறார்கள்.

‘ராமு’, ‘பாபு’, ‘அன்பே வா’, ‘இரு மலர்கள்’ – இப்படி ஒவ்வொரு திரைப்படமும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு பெற்றவை.

கிராமத்துக் கதை, காதல் கதை என்றெல்லாம் ஒரே சப்ஜெக்டில் ‘ஸ்பெஷலைஸ்’ செய்யாமல் பல்வேறு கதைக்களன்களில் நான் படங்களை இயக்கியதால்தான் (அவை பாராட்டப்பட்ட வெற்றிப் படங்களாக அமைந்தும்) எனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையோ என்னவோ!

நன்றி: இந்து தமிழ் திசை

#அந்தநாள்ஞாபகம் #ஏசிதிருலோகசந்தர் #நானும்ஒருபெண் #அன்பேவா #சிவாஜிகணேசன் #எங்கிருந்தோவந்தாள் #ஜெயலலிதா #திருலோகசந்தர் #வீரத்திருமகன் #பாரதவிலாஸ் #என்தம்பி #அதேகண்கள்

ஆக்ஷன், த்ரில்லர் கதையில் ரைசா வில்சன்!ரைசா வில்சன் கதையின் நாயகியாக நடிக்கும் திரைப்படம் 'நோவா' ; பேஸ் ஒன் - தி அரைவல்....
11/06/2026

ஆக்ஷன், த்ரில்லர் கதையில் ரைசா வில்சன்!

ரைசா வில்சன் கதையின் நாயகியாக நடிக்கும் திரைப்படம் 'நோவா' ; பேஸ் ஒன் - தி அரைவல்.

'ஆண்மை தவறேல்' துருவா, அத்விதி ஷெட்டி, கிருத்திகா பிஸ்வாஸ், ஜோ ஜான் சாக்கோ, சென்ராயன், ஃபைனலி ஸ்வாதிகா, ஃபைனலி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விளம்பரப் படங்களை இயக்கிய மிலோ இதை இயக்குகிறார்.

ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

படத்தப் பற்றிப் பேசிய ரைசா வில்சன், “கதைக்குள் இன்னொரு கதை என்கிற விதமாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது. இதில் நான் ஃபிளாஷ்பேக் காட்சிகளில் முக்கியமான கதாபாத்திரத்தில் வருகிறேன்.

ஆக்ஷன், த்ரில்லர், சயின்ஸ் பிக்ஷன் கலந்து இந்த படம் உருவாகி இருக்கிறது.

இதுவரை நான் இதுபோன்ற கதையில், கதாபாத்திரத்தில் நடித்ததில்லை. கேரளாவில் உள்ள மறையூர் காடுகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது.

அனுமதி கிடைப்பதற்கே சிரமமான சந்தன மரக்காடுகளுக்குள் படப்பிடிப்பு நடத்தினார்கள்.

இதில், ஆக்ஷன் காட்சிகளிலும் நடித்துள்ளேன்" என்றார்.

#ரைசாவில்சன் #நோவா #ராயல்ஃபார்ச்சுனாகிரியேஷன்ஸ் #போஸ்ட்புரொடக்ஷன் #ஆக்ஷன்த்ரில்லர் #சயின்ஸ்பிக்ஷன் #கேரளா #மிலோ #அத்விதிஷெட்டி #தமிழ்சினிமா #திரைப்படஅப்டேட் #புதியபடம் #திரையுலகம் #நடிகை #சினிமாசெய்திகள்

கலைஞர்கள், படைப்பாளிகளைத் தந்த திரையுலகக் கலைத்தாய்!எம்ஜிஆர், சிவாஜி சகாப்தம் போல கதாநாயகர்களைக் கடந்து படைப்பாளியே ஒரு ...
11/06/2026

கலைஞர்கள், படைப்பாளிகளைத் தந்த திரையுலகக் கலைத்தாய்!

எம்ஜிஆர், சிவாஜி சகாப்தம் போல கதாநாயகர்களைக் கடந்து படைப்பாளியே ஒரு பிராண்டாகி சினிமாவில் தனக்கான கொடியை பறக்கவிட்டவர் பாரதிராஜா!

மாறிக் கொண்டிருந்த சினிமா களத்தில் புதிய படைப்பாளிகளையும், கலைஞர்களையும் தந்து திரைத்துறையின் திசை வழியை மாற்றி அமைத்தவர்! பாரதிராஜாவின் படைப்புலகம் ஒரு பார்வை;

ஒரு தலைமுறையையே தன் படைப்பாற்றலால் கட்டிப் போட்டவர் பாரதிராஜா. எம்.ஜி.ஆர் யுகம், சிவாஜி யுகம் என்பதற்கு இணையாக பாரதிராஜாவின் யுகம் பேசப்பட்டது.

எம்.ஜி.ஆர் சினிமாவில் இருந்து விலகி, அரசியலில் அடி எடுத்து வைத்த காலகட்டம்.

நடிகர் திலகம் சிவாஜியின் அலை மெல்ல, மெல்ல அடங்கிக் கொண்டிருந்த சூழலில், காலம் சரியாக பாரதிராஜாவிற்கு சினிமா கதவுகளைத் திறந்துவிட்டது.

ரஜினியும், கமலஹாசனும் அடுத்த தலைமுறையின் ஸ்டார் நட்சத்திரங்களாகப் போகிறவர்கள் என்பதை முன் கூட்டியே கணித்து, அவர்கள் இருவரையும் தன் முதல் படத்திலேயே சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டவர் பாரதிராஜா!

‘16 வயதினிலே’ படத்தில் கமலஹாசனின் சம்பளம் ரூ25,000. ரஜினியின் சம்பளம் 5,000.

இந்தப் படம் தான் கமலஹாசன் ஒரு நடிப்பு அசூரன் என திரையுலகத்திற்கு காட்டியது.

ரஜினி இந்தப் படத்தில் பேசிய, “இது எப்படி இருக்கு?” என்று நக்கலாக கேட்கும் வசனம் அந்த நாட்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே ரொம்ப பிரசித்தமானது.

‘16 வயதினிலே’ வைத்தொடர்ந்து கிழக்கே போகும் ரயிலில் ராதிகா, சுதாகர் ஆகியோரை அறிமுகப்படுத்தினார்.

இந்தப் படம் சக்கை போடு போட்டது. சிகப்பு ரோஜாக்களில் கமலை பெண்களைக் கொல்லும் கொடூர சைக்கோ வில்லனாக நடிக்க வைத்தார்.

புதிய வார்ப்புகளில் தன்னுடைய உதவி இயக்குநர் பாக்யராஜை நடிகராக்கினார்!

ரதி என்ற கதாநாயகியையும் அறிமுகப்படுத்தினார். நிறம் மாறாத பூக்களில் விஜயன் என்ற அற்புத நடிகரை அறிமுகப்படுத்தினார்.

‘நிழல்கள்’ படத்தில் நடிகர் ரவியை அறிமுகப்படுத்தியதோடு கவிஞர் வைரமுத்து என்ற பேராற்றல் பெற்ற கவிஞரை தமிழ் சினிமாவிற்கு தந்தார்.

‘அலைகள் ஓய்வதில்லை’யில் கார்த்திக்கையும், ராதாவையும் அறிமுகப்படுத்தி மதம் கடந்த காதலைச் சொன்னார்.

‘காதல் ஓய்வதில்லை’யின் பாதிப்பில் அன்று பள்ளி, கல்லூரி இளசுகள் வீட்டை விட்டு ஓடும் நிகழ்வுகள் நூற்றுக்கணக்கில் அரங்கேறின.

பிடிபட்டவர்களில் பலர் அலைகள் ஓய்வதில்லையின் தாக்கத்தால் ஓடியதாக சொன்னதும் பதிவாகி உள்ளன.

டிக்,டிக்,டிக் படத்தில் இளைமையின் துள்ளலைக் காட்டினார். காதல் ஓவியத்தில் இளையராஜாவும், வைரமுத்துவும் காவியப் பாடல்களைத் தந்தனர்.

மண் வாசனையில் ரேவதி, பாண்டியன் அறிமுகமாகினர்.

புதுமைப் பெண்ணில் பெண்ணின் சுயமரியாதையை தூக்கிப் பிடித்தார், முதல் மரியாதையில் நடிகர் திலகத்துடன் கைகோர்த்து காவியப் படம் தந்தார்.

கடலோரக் கவிதைகளில் சத்யராஜை கதாநாயகனாக்கினார், ரேகாவை அறிமுகப்படுத்தினார். வேதம் புதிது படத்தில் சாதி பெருமிதங்களை கேள்விக்கு உட்படுத்தினார்!

இப்படியாக 1977 தொடங்கி 1987 வரை படைப்பாளியான பாரதிராஜா தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த காலம் எனலாம்.

இதில், வாலிபமே வா வா மிகைப்படுத்தப்பட்ட செக்ஸ்சாக எடுத்ததில் கடும் விமர்சனம் பெற்றது.

இன்றைக்கு விஜய், அஜித் படங்கள் பேசப்படுவதைவிடவும், அன்று பாரதிராஜா என்ற படைப்பாளியின் படங்கள் அதிகமாக பேசப்பட்டன, கொண்டாடப்பட்டன!

பாரதிராஜா படத்திற்கென்றே அக்கறை எடுத்து இளையராஜா தந்த பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பின. அவை இன்றும் காலம் கடந்து நிற்கின்றன.

1989-ல் ‘கொடி பறக்குது’ என ரஜினியின் நாயக பிம்பத்தை பாரதிராஜா உயர்த்தி கொடி பிடித்த அவலத்தை மக்கள் ஏற்கவில்லை. படம் தோல்வி அடைந்தது.

அதன் பிறகான என்னுயிர் தோழன், புது நெல்லு புது நாத்து, நாடோடித் தென்றல் ஆகியவையும் கவனம் பெற்றன. கிழக்குச் சீமையிலேவில் இளையராஜாவிற்கு மாற்றாக ஏ.ஆர்.ரகுமானோடு இணைந்தார்.

ரகுமானும், வைரமுத்துவும் சேர்ந்த பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகின.

கருத்தம்மா ‘பெண் சிசுக் கொலையை’ப் பேசியது. ஆனால், பிரச்சினையின் வேர் பிடித்துச் சொல்லப்படவில்லை என்ற விமர்சனத்தைப் பெற்றது.

1994-க்கு பிறகான பாரதிராஜாவின் படங்கள் முன்பை போல பெரும் கவனம் பெறவில்லை. ஆயினும் அதற்குப் பிறகும் நல்ல திரைப்படங்களை அவர் தந்த வண்ணமே இருந்தார்.

“கிராமங்களை நோக்கிய ஒரு ஈர்ப்பை பாரதிராஜா உருவாக்கினார். ஆயினும், மிகைப்படுத்திய காதல் ரொமன்ஸ் காட்சிகள், வெள்ளை நிற தேவதைகளை ஆட வைத்தது, கொடூர வன்முறைகளைக் காட்டியது, சைக்கோ கதாபாத்திரங்களை உருவாக்கியது..

போன்றவற்றுக்காக சினிமா விமர்சகர்கள் பாரதிராஜாவை ஒரு வெற்றிகரமான கமர்சியல் இயக்குநராக சொல்ல முடியுமே தவிர, யதார்த்த சினிமாவுக்கான உன்னதப் படைப்பாளி என்ற அங்கீகாரத்திற்கு பொருத்தமானவரில்லை” என்பார்கள், சினிமா விமர்சகர்கள்.

பாரதிராஜா யதார்த்தமான கிராமங்களையோ, கிராமத்தின் சாதியச் சிக்கல்களையோ, அதன் உண்மையான பிரச்சினைகளையோ பேசாமல், வெற்றிகரமான சினிமாவிற்கு தேவையான கச்சாப் பொருளாக கிராமங்களைப் பயன்படுத்திக் கொண்டார் என்ற விமர்சனங்களும் அவர் மீது வைக்கப்பட்டுள்ளன.

இன்றைக்கு பாரதிராஜாவின் பழைய ஹிட் படங்களைப் பார்த்தால், பலவற்றை ஏற்க முடியவில்லை. இவ்வளவு ‘சைல்டிஷாக’ எடுத்திருக்காரே... என்று கூடத் தோன்றுகிறது.

ஆனால், சினிமாவில் தனக்கான ஒரு காலகட்டத்தை அவர் முழுமையாக கட்டி ஆண்டார் என்பதையும், எண்ணற்ற கலைஞர்களை, படைப்பாளிகளை தமிழ் மற்றும் இந்திய சினிமா உலகிற்கு தந்தார் என்பதும், சகாப்தம் படைத்த கலைஞர் என்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

- சாவிதிரி கண்ணன்

நன்றி: அறம் இணைய இதழ்

#பாரதிராஜா #எம்ஜிஆர் #சிவாஜிகணேசன் #கமல்ஹாசன் #ரஜினிகாந்த் #16வயதினிலே #கிழக்கேபோகும்ரயில் #அலைகள்ஓய்வதில்லை #மண்வாசனை #தமிழ்சினிமா #திரையுலகம் #கிராமியசினிமா #திரைப்படவரலாறு #இயக்குநர் #கலை

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Cine rocket posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share