21/09/2025
The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்
செப்டம்பர் 21
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் (யோவா. 14:6).
“சத்தியம்”
நாம் முதற்கண் சத்தியம் என்றால் என்ன என்பதனை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்; சத்தியம் என்பது ஒரு தத்துவமல்ல; உலகம் சிந்திக்கிற மாதிரி, அது ஒரு நம்புகிறமுறையும் அல்ல. வேதாகமம் சத்தியத்தை நான்கு வித்தியாசமான முறையில் கணிப்பிடுகிறது; இதன் பொருள், சத்தியம் என்பது ஒரு தனி மனிதனைப்பற்றியதேயாகும்.
வேதவாக்கியத்தின்படி முதலாவதாக : இயேசுவே சத்தியம் (யோவா. 14:6) ; இதன் பொருள், இயேசு சத்தியத்தை உடையவராக இருக்கிறார் என்பதல்ல, அவரே சத்தியமாயிருக்கிறார். சத்தியத்தை உடையவராக இருக்கிறார் என்பதற்கும், அவரே சத்தியம் என்பதற்கும் இடையில் பாரிய வித்தியாசம் உண்டு. இரண்டாவதாக : தேவனுடைய வார்த்தையே சத்தியம் (யோவா. 17:17) ; ஆம், நிச்சயமாக இயேசுவே வார்த்தை எனப்படும் (யோவா. 1:1, 14) . மூன்றாவதாக : பரிசுத்த ஆவியானவரே சத்தியம் (யோவா. 14:17, 15:26, 16:13; Iயோவா. 5:6) . நான்காவதாக : அபிஷேகமே சத்தியம்; இதன் பொருள், தேவன் சத்தியத்தையே அபிஷேகம் செய்கிறார்; அந்த அபிஷேகம் பரிசுத்த ஆவியானவரிடமிருந்தே வருகிறது (Iயோவா. 2:27) .
இப்படியிருக்க, பிதாவினிடத்தில் செல்வதற்கு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஒரேஒரு வழியையே ஏற்படுத்தியிருக்கிறார். அவர் தன்னையே பலியாகச் சிலுவையில் ஒப்புக்கொடுத்து, அந்த வழியை நமக்கு ஏற்படுத்தியிருக்கிறார். அந்த வழி சிலுவையில் அறையப்பட்ட இயேசுகிறிஸ்துவாகும் (Iகொரி. 1:23, 2:2) . அவர் பூமியிலிருக்கும்பொழுது ஒருவன் அந்த வழியைப் பெற்றுக்கொள்வதற்கு லூக்கா 9:23 ஐக் கெட்டியாகக் கடைப்பிடிக்கவேண்டும் என்றும், இதனைச் செய்யாவிட்டால், அவன் தன்னுடைய சீஷனாக இருக்கமுடியாது என்றும் லூக்கா 14:27 ல் கூறியிருக்கிறார்.
ஜீவனுமாயிருக்கிறேன் என்பதுபற்றி யோவான் 10:10 ல் “...... நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்” எனக் கூறியிருப்பதிலிருந்து அவரே ஜீவனாயிருக்கிறார் என்பது புலனாகிறது; ஜீவன் இரத்தத்திலேயே உண்டு லேவி. 17:11; எபி. 9:22) ; அவர் தன் இரத்தத்தைச் சிலுவையில் சிந்தி மனுஷகுலத்திற்கு ஜீவனைக் கொடுத்தார்.
என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் என்பதன் பொருள் பிதாவினிடத்திற்குச் செல்வதற்கு இயேசுகிறிஸ்துவே ஒரே வழி என்பது அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது; கிறிஸ்து 2000 வருஷங்களுக்குமுன் சிலுவையில் மரித்து, மனிதகுலத்தை அந்தப் பாவத்திலிருந்து மீட்டுக்கொண்டார் (மத். 1:21) ; ஆனால், இஸ்லாமிய மதம் முகமதுமூலம் தேவனை அடையலாம் என்று உரிமைகோருகிறது; அப்படியே யூதர்கள் நியாயப்பிரமாணத்தைச் செய்வதனால் தேவனை அடையலாம் என்று உரிமைகோருகிறார்கள்; புதிய தலைமுறை தம்முடைய சுயபலத்தினால் தேவனை அடையலாம் என்று உரிமைகோருகிறது; இவை யாவும் அந்தகார சக்திகளின் மதிநுட்பவேலை என்பது தெளிவாகிறது.