19/06/2025
மதுரையில் முருகன் மாநாடு நடத்தும் சனாதன இந்துக்களுக்கு, சாமானிய இந்துக்களின் சில கேள்விகள்.
முருகன் என்பது தமிழ்ப்பெயர். சுப்பிரமணி என்பது வடமொழிப்பெயர். திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருத்தணி, பழனி, பழமுதிர்சோலை, சுவாமிமலை ஆகிய ஆறு கோவில்களின் நுழைவிடத்திலும் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவில் என்றே உள்ளது. அருள்மிகு முருகன் கோவில் என்று மாற்ற வேண்டுமென்று கோரிக்கை வைப்பீர்களா? தமிழ்க்கடவுளுக்கு வடமொழியில் எதற்கு பெயர்?
ஆறு கோவில்களிலும் முருகனுக்குரிய சேவல் கொடி ஏற்றாமல், சிவனின் ரிஷபக்கொடி ஏற்றி வைத்திருப்பது ஏன்? முருக வழிபாடும், சிவ வழிபாடும் ஒன்றென்றால் இருகொடிகளையும் ஏற்றலாமே? சேவல் கொடி ஏற்ற வேண்டுமென்று சனாதன இந்துக்களுக்கு வலியுறுத்துவீர்களா?
முருகன் தமிழ் நிலப்பரப்பெங்கும் வழிபடப்பட்டவர். அவர் எப்படி ஆறுபடை என்று ஆறு இடங்களுக்குள் சுருங்கினார்? திருமுருகாற்றுபடை என்பதை ஆறுபடை என மாற்றியவர்கள் சனாதன இந்துக்களா? சாமானிய இந்துக்களா? நீங்கள் நடத்தும் மாநாட்டில் விளக்கம் தருவீர்களா?
முதலில் கொற்றவை வழிபாடு, பிறகு முருக வழிபாடு, அடுத்து பௌத்த வழிபாடு, இப்போது பெருமாள் வழிபாடு என மாற்றம் பெற்ற திருப்பதி கோவிலைக் கைப்பற்றியதால் தான் ஆறுபடை மட்டும் என சனாதன இந்துக்கள் சுருக்கினீர்களா?
முருகனை வழிபட வரும் சாமானிய இந்துக்கள், அலகு குத்தி, பால்குடம் தூக்கி, காவடி எடுத்து கோவிலுக்கு வருவார்கள். ஆனால், எச்.ராஜா உள்ளிட்ட சனாதன இந்துக்கள் ஏன் அப்படி வருவதில்லை? அப்படித்தான் வரவேண்டும் என கட்டாயமாகச் சொல்வீர்களா?
சாமானிய இந்துக்கள் முருகனுக்கு மொட்டை அடிப்பார்கள். சனாதன இந்துக்களும் மொட்டை அடிக்க வேண்டும் என்று உங்கள் மாநாட்டில் சொல்வீர்களா?
முருகனுக்கு ஆடு பலியிடப்பட்டதை சங்கப்பாடல்கள் தெரிவிக்கிறது. இதோ குறுந்தொகை 362 வது பாடல்
"முருகு அயர்ந்து உவந்த முதுவாய் வேல! சினவல் ஓம்புமதி; வினவுவது உடையேன்
பல்வேறு உருவின் சில் அவிழ் மடையொடு, சிறுமறி கொன்று இவள் நறுநுதல் நீவி, வணங்கினை கொடுத்தியாயின்
அணங்கிய விண்தோய் மாமலைச் சிலம்பன் ஒண்தார் அகலமும் உண்ணுமோ பலியே!"
முருகன் மாநாட்டில் சாமானிய இந்துக்களின் வழிபாடான ஆடுபலியிட்டு முருகனை வணங்குவீர்களா? இல்லையேல், சனாதன இந்துக்களின் புனிதம் என்று பேசுவீர்களா?
புனிதம்,தீட்டு என்பது சனாதன இந்துக்களின் கருத்தா? சாமானிய இந்துக்களின் கருத்தா?
குளிரில் மயில் சிரமப்படுவதைப் பார்த்து போர்வை போர்த்திய தமிழ்ப்பண்பாட்டில், முருகன் மயில் மீது ஏறினார் என்று சொன்னது சனாதன இந்துக்களா? சாமானிய இந்துக்களா?
ஒரு மெல்லிய பறவை மீது முருகன் ஏறி துன்பத்தை உருவாக்குவாரா? முருகன் யானை மீது ஏறி வந்தவர் என்ற தமிழ்ப்பண்பாட்டை யார் மாற்றியது? சனாதன இந்துவா? சாமானிய இந்துவா?
சாமானிய இந்துக்கள் முருகன் என்றும், சுப்பிரமணி என்றும் பெயர் வைத்துக் கொள்கிறார்கள். ஆனால், சனாதன இந்துக்கள் ஏன் முருகன் ஐயர் என்றோ, முருகன் ஐயங்கார் என்றோ பெயர் வைப்பதில்லை? எச். ராஜாவை, எச்.முருக ராஜா என்று பெயர் மாற்றி உங்கள் மாநாட்டில் அறிவிப்பீர்களா?
பரங்குன்றத்தை சுற்றி பெரும்பான்மையாக வாழும் பிரமலைக்கள்ளர் சமூகத்தினர், தமிழ் முருக வழிபாட்டை, ஆரிய சுப்பிரமணி வழிபாடாக மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பரங்குன்றம் கோவிலுக்கு 1000 ஆண்டுகளாக சாமி கும்பிட வருவதில்லை. விருமாண்டி, பேய்க்காமன், பேச்சியம்மாள் என்ற மூவரும் தான் சனாதனத்திற்கு எதிராகப் போராடியவர்கள். பேச்சியம்மாள் சபதம் படித்ததுண்டா?
சாமானிய இந்துக்களான பிரமலைக்கள்ளர்களை திருப்பரங்குன்றம் கோவிலுக்கு அழைத்துச் செல்ல அமித்ஷா வருவாரா? அறைகூவல் விடுவாரா?
பாஜகவின் கேடுகெட்ட சனாதன அரசியலை,
2021 ல் தமிழ்நாட்டில் முருகனும்
கேரளத்தில் ஐயப்பனும்,
வங்கத்தில் காளியும்
கர்நாடகத்தில் ஆஞ்சநேயரும்
2024 ல் இராமரும் கைவிட்டனர்.
2026 ல் முருகன் மீண்டும் கைவிடுவார்.
பிற மதத்தினரை வெறுக்கும் இந்துவாக இரு என்பது சனாதன பாஜகவின் கூச்சலாக இருக்கலாம். ஒரு சாமானிய முருக பக்த இந்துவின் குரலாக, அது ஒருபோதும் இருக்க முடியாது.