
25/07/2025
படிக்க வந்து நடிக்கத் துவங்கிய ரவிச்சந்திரன்!
https://cinirocket.com/actor-ravichandren-bday-spl-article/
1970 களில் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத இடத்தை பிடித்த பிரபலமான ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்தவர் ரவிச்சந்திரன்.
நடிகர், டைரக்டர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனுக்கு ஜுலை 24-ம் தேதி பிறந்தநாள் என்றால், அடுத்த நாளான ஜுலை 25 அவருடைய நினைவுநாள்.
1960-70களில் முன்னணி ஹீரோவாகவும், பின்னர் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமானவர் ரவிச்சந்திரன்.
படிக்க வந்து நடிகரானார்
ரவிச்சந்திரனின் இயற்பெயர் ராமன். அவரது சொந்த ஊர் கரூர் அருகே உள்ள வாங்கல் கிராமம். இவரது இளமைக்காலம் மலேசியாவின் கோலாலம்பூரில் கழிந்தது. ரவிச்சந்திரனின் தந்தை பைரோஜி சீனிவாசன்.
மலேசியாவில் தமிழ் நேசன் என்ற பத்திரிகையில் ஆசிரியராக இருந்தார். கோலாலம்பூர் தமிழ்ச் சங்கம் நடத்திய பள்ளியில் படித்தார் ரவிச்சந்திரன்.
மலேசிய தமிழ் மாணவர்களில் முதல் மாணவராகத் தேர்வு பெற்ற ரவிச்சந்திரன், மருத்துவம் படிக்க விரும்பி இந்தியா வந்தார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.
முதல் படம் செம ஹிட் சென்னையில் மருத்துவப் படிப்பு படிக்க வந்தபோது இயக்குனர் ஸ்ரீதருக்கு அறிமுகமானார்.
அதன் மூலம் 1964-ம் ஆண்டு 'காதலிக்க நேரமில்லை' படத்தின் கதாநாயகனானார். அறிமுக படமே அவருக்கு சூப்பர்ஹிட் படமாக அமைந்தது. அத்துடன் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
அதிலும் அந்தப் படத்தில் வரும் "விஸ்வநாதன் வேலை வேண்டும்...", "உங்கள் பொன்னான கைகள் புண்ணாகலாமா..." உள்ளிட்ட பாடல்கள் மாபெரும் ஹிட் ஆகி, ரவிச்சந்திரனுக்கென ரசிகர்களை உருவாக்கியது.
ஹிட் அடித்த படங்கள்
'காதலிக்க நேரமில்லை' படத்திற்கு பிறகு நிறைய படங்களில் நடித்தார் ரவிச்சந்திரன்.
குறிப்பாக இவர் நடித்த 'அதே கண்கள்', 'இதய கமலம்', 'கெளரி கல்யாணம்', 'குமரிப்பெண்', 'உத்தரவின்றி உள்ளே வா' உள்ளிட்ட படங்கள் மிகவும் பிரபலமானவை.
எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு அடுத்தப்படியாக ரவிச்சந்திரனும் முன்னணி நடிகராக திகழ்ந்தவர். ரவிச்சந்திரன் ஸ்டைல் அப்போதைய ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
கல்லூரி, பள்ளி மாணவிகள் ரவிச்சந்திரனின் தீவிர ரசிகைகளாய் இருந்தனர். அவர் படங்கள் 150 நாட்களைத் தாண்டி ஓடின.
வில்லனாக மாறிய ஹீரோ, ஹீரோவாக நடித்த காலம் போய், பின்னர் குணச்சித்திர கேரக்டரில் நடிக்க ஆரம்பித்த ரவிச்சந்திரனுக்கு விஜயகாந்தின் 'ஊமை விழிகள்' படத்தின் மூலம் மீண்டும் புத்துணர்வு கிடைத்தது.
அந்தப் படத்தில் வில்லனாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். தொடர்ந்து அப்பா, தாத்தா போன்ற குணச்சித்திர கேரக்டரில் நடித்து வந்தார் ரவிச்சந்திரன்.
ஆபாவாணன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த 'ஊமை விழிகள்' படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து கவனத்தை ஈர்த்தவர். அதன்பின், சப்போர்டிங் கேரக்டர்களில் வலம் வந்தார்.
ரஜினிகாந்துடன் 'ராஜாதி ராஜா', 'அருணாசலம்', கமல்ஹாசனுடன் 'பம்மல் கே சம்பந்தம்' ஆகிய படங்களில் நடித்தார்.
சிறுநீரகக் கோளாறு காரணமாக 25-07-2011 அன்று சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். மனைவி விமலா அவர்களை 1963-ம் ஆண்டு மனம் முடித்தார்.
அவர்களுக்கு இரண்டு மகன்கள். முதல் மகன் பாலாஜி. இவர் தொழிலதிபர். இரண்டாவது மகன் ஹம்சவர்தன் இவர் பிரபல ஹீரோ என்பது நாம் அறிந்த விஷயம். லாவண்யா என்ற மகளும் உள்ளார்.
மலையாள முன்னணி நடிகை ஷீலாவை இரண்டாவதாக 1972ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் ரவிச்சந்திரன். இவருக்கும் ஷீலாவிற்கும் பிறந்த ஜார்ஜ் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரையில் நடித்து வந்தார்.
ரவிச்சந்திரனின் மறக்க முடியாத படங்கள்
இயக்குநர் ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை படத்தின் மூலம் 1964-ம் ஆண்டு தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானார்.
இதயக்கமலம், குமரிப் பெண், அதே கண்கள், கெளரி கல்யாணம், மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, நான், உத்தரவின்றி உள்ளே வா, புகுந்த வீடு, ஊமை விழிகள், ராஜாதி ராஜா, அருணாச்சலம், பம்மல் கே சம்பந்தம், ரமணா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார்.
கடைசியாக நடித்த படம் ஆடுபுலி. மானசீக காதல், மந்திரன் உள்பட 7 படங்களை ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார்.
தமிழ், மலையாளத்தில் சில படங்களை சொந்தமாக தயாரித்தார்.
இவர் 1986-ல் ஒளிபரப்பான ஜீ பும்பா என்ற டிவி சீரியலிலும் நடித்துள்ளார்.
ரவிச்சந்திரனுக்கு திரையுலகில் ரொமான்டிக் ஹீரோ, வெள்ளி விழா கதாநாயகன், வண்ணப்பட நாயகன், எவர்கிரீன் ஹீரோ, சின்ன எம்ஜிஆர், கலைஞர் திலகம், கலை செல்வன், புதுமை திலகம் என பல டைட்டில்களை டைரக்டர்கள், தயாரிப்பாளர் உள்ளிட்ட பலர் கொடுத்துள்ளனர்.
- மோகனப்ரியா
நன்றி: ஃபிலிம் பீட்
#காதலிக்கநேரமில்லை
#அதேகண்கள்
#இதயகமலம்
#ஊமைவிழிகள்
#ராஜாதிராஜா
#அருணாசலம்