
25/07/2025
வரலாறு எப்போதும் மாற்றத்தின் பக்கமே! சீமான் வாக்கு சதவீதம் காலி.. அதிமுகவுக்கு 3வது இடம் தான்.. திமுக - தவெக இடையே தான் போட்டி.. வெற்றி நிர்ணயிக்கும் இளைஞர்கள்..!
தமிழக அரசியல் களம் வழக்கமான தேர்தல் கணக்குகளை தாண்டி, புதிய அரசியல் திருப்பங்களுக்கு தயாராகி வருகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் பல எதிர்பாராத மாற்றங்கள் நிகழக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, சில கட்சிகளின் வாக்கு சதவீதம் குறித்த மாயையும், பிரதான கட்சிகளின் நிலை குறித்த கணிப்புகளும் தற்போது விவாதிக்கப்படுகின்றன.
நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீத மாயை: சீமான் போட்டியாளர் இல்லை!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு 30 லட்சம் வாக்குகளை பெற்றார், அதாவது 6% வாக்குகள். இது ஒரு பெரிய எண்ணிக்கையாக தோன்றினாலும், 234 தொகுதிகளிலும் சேர்த்து சராசரியாக ஒரு தொகுதிக்கு சுமார் 13,000 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. மேலும், அவர் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிட்டு 1% வாக்குகள் பெற்றதுடன், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலா 6 தொகுதிகளில் போட்டியிட்டு தலா 1% வாக்குகள் பெற்றன. இதை ஒப்பிடும்போது, நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளில் போட்டியிட்டுப் பெற்ற 6% வாக்குகள், வெறும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் ஏற்பட்ட ஒரு ‘மாயை’ மட்டுமே. பாராளுமன்ற தேர்தலில் பெற்ற 8% வாக்குகள் கூட, அவர் 40 தொகுதிகளிலும் போட்டியிட்டதால் கிடைத்ததே தவிர, மற்ற சிறிய கட்சிகளுடன் ஒப்பிடும்போது இதுவும் குறைவுதான்.
சீமானுக்கு விழுந்த வாக்குகள் பெரும்பாலும் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் வாக்குகள் மட்டுமே. தற்போது, இந்த இளைஞர்களின் வாக்குகள் ஒட்டுமொத்தமாக விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு சென்று விடுவதால், வரும் தேர்தலில் சீமானுக்கு 4% வாக்குகள் கிடைப்பதே கஷ்டம். எனவே, சீமான் 2026 தேர்தலில் ஒரு போட்டியாளர் இல்லை என்றே கூறலாம்.
அ.தி.மு.க.வின் பலவீனம் – மூன்றாவது இடம் உறுதி!
அடுத்ததாக, அ.தி.மு.க.வின் நிலையை பார்த்தால், ஒன்றிணைந்த அ.தி.மு.க.வுக்கு மட்டும்தான் தொண்டர்களும் மக்களும் ஆதரவு கொடுப்பார்கள் என்ற நிலை உள்ளது. ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், சசிகலா இல்லாத அ.தி.மு.க. பலவீனமானது என்பதில் சந்தேகமில்லை. மேலும், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருப்பது நடுநிலை வாக்காளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணியை வீழ்த்தும் அளவுக்கு வலிமை இல்லை என்ற ஒரு பரவலான பார்வையும் உள்ளது. ஒருவேளை அ.தி.மு.க. வெற்றி பெற்றாலும், யார் முதலமைச்சர், யார் அமைச்சர்கள் என்பதை டெல்லிதான் முடிவு செய்யும் என்பதால், அது கிட்டத்தட்ட பா.ஜ.க. ஆட்சிதான் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எனவே, அ.தி.மு.க. மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படுவது உறுதி.
தி.மு.க. Vs த.வெ.க. – இளைஞர் வாக்குகள் வெற்றியை நிர்ணயிக்கும்!
இந்த சூழலில், தமிழகத்தில் உண்மையான போட்டி தி.மு.க.வுக்கும், தமிழக வெற்றி கழகத்திற்கும் இடையேதான் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். தி.மு.க. ஆட்சிக்கு எதிராக மக்கள் மத்தியில் அதிருப்திகள் அதிகம் நிலவுகின்றன. மக்கள் மீண்டும் ஒருமுறை தி.மு.க.வை தேர்வு செய்ததாக தமிழக வரலாற்றில் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
மொத்தத்தில் தமிழக அரசியல் களத்தில் நாம் ஒரு புதிய அத்தியாயத்தை காண போகிறோம் என்பது உறுதி.