17/07/2025
சிஐஐ ‘சர்பேஸ் – கோட்டிங் கண்காட்சி’:சென்னையில் துவங்கியது
தரை மேற்பரப்பு பொறியியல், தயாரிப்பு, பூச்சு, பினிஷிங், அரிப்பு பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பங்கள் தொடர்பான இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் தனித்துவமான ‘சர்பேஸ் – கோட்டிங் கண்காட்சி’ சென்னையில் துவங்கியது.5வது ஆண்டாக நடைபெறும் இந்த 3 நாள் சிஐஐ சர்பேஸ் - கோட்டிங் கண்காட்சி 2025-க்கான தலைவரும், ஹோமி பாபா தேசிய நிறுவனத்தின் துணைவேந்தருமான காமாட்சி முதலி துவக்கி வைத்தார். இதில் சிஐஐ தென் பிராந்திய தலைவர் மற்றும் டான்போஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவருமான பி. ரவிச்சந்திரன், சிஐஐ தமிழ்நாடு மாநில கவுன்சில் தலைவர் மற்றும் செயின்ட் கோபேன் இந்தியா நிர்வாக இயக்குனர் உன்னிகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.
3 நாள் நடைபெறும் இந்த கண்காட்சி மற்றும் மாநாட்டில், மேற்பரப்பு பூச்சுத் துறையின் பல நிறுவனங்கள்,
உற்பத்தியார்கள், வினியோகஸ்தர்கள், ஆலோசனை வழங்கும் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், பயனர்கள் என ஏராளமான பேர் கலந்து கொள்கின்றனர். மேலும் இந்த கண்காட்சியானது உலகம் முழுவதும் உள்ள கொள்கை வகுப்பாளர்களை சந்திப்பதற்கும், பிற நாடுகளுடனான வர்த்தக தொடர்பு மற்றும் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும்.
இந்த கண்காட்சியில் 13 ஆயிரம் சதுர மீட்டரில் 300க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம் பெற்றுள்ளது. 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை காண இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கண்காட்சியுடன், மேற்பரப்பு மற்றும் பூச்சுகள் தொடர்பாக 6 துறைசார் மாநாடுகளும் நடைபெறுகிறது. 5வது ஆண்டாக மின்முலாம் பூசுதல் குறித்த தொழில்நுட்ப மாநாடு மற்றும் கண்காட்சி, 3வது முறையாக ஆட்டோமேட்பேப் கண்காட்சி, 2வது ஆண்டாக அரிப்பு தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை குறித்த சர்வதேச உச்சி மாநாடு "கோர்டெம் 2025" மற்றும் 3வது ஆண்டாக “பசைகள் மற்றும் சீலண்டுகள் - உச்சி மாநாடு மற்றும் கண்காட்சி” என ஏராளமான நிகழ்ச்சிகள் இதில் இடம் பெற்றுள்ளது. இந்த மாநாடுகளில் தொழில்நுட்ப வல்லுனர்கள் உற்பத்தி நிறுவனங்களைச் சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் என ஏராளமான பேர் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.