02/08/2025
இராமலிங்க #வள்ளலார்
மெய்சிலிர்க்க வைக்கும் பெரும் #புரட்சியாளர் !
கலப்படமில்லாத உண்மையான சமூக நீதிப் பெருங்காவலர், உண்மையான பெண்ணுரிமைவாதி, உண்மையான சாதி சமய மத ஏற்றத் தாழ்வு ஒழிப்புப் போ*ராளி !
- வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்
இராமலிங்க வள்ளலார் சமூக, பொருளாதார, பத்தி, ஆன்மிக, மெய்யியல் உலகில் பெரும் புரட்சியாளர்.
தமிழர்களின் நெறிகளான சைவ வைணவத்தில் வடவேத ஸ்மார்த்த பிராமணிய வருணாசிரமச் செயல்பாடுகளின் ஊடுருவல் ஏற்பட்ட பிறகு திருக்குறள் கூட ஏழைகளுக்கு சமூகத்தில் ஒடுக்கப்பட்ட குடிமக்களுக்குச் சென்று சேரவில்லை.
சைவ பத்திப் பாடல்களைக் கூட ஏழைகள் மற்றும் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பெருங்குடி மக்கள் பாடும் உரிமை இல்லாது பறிக்கப்பட்டு விட்டது.
கோவில்களிலும் சம உரிமை இல்லாது போய்விட்டது.
இத்தகைய நிலையில் ராமலிங்க வள்ளற் பெருமானார் இயற்றிய விநாயகர் தொடங்கி துலுக்காணத்தம்மன் வரை அவர் பாடிய எளிய தமிழ்ப் பாடல்கள் அனைத்து மக்களாலும் பாடப்பட்டது.
சாதி மத சமய ஏற்றத் தாழ்வற்று அனைவரும் அவரது பாடல்களைப் பாடத் தொடங்கினார்கள்.
கோவில்களில் வள்ளற் பெருமானாரின் பாடல்கள் ஒலிக்கத் தொடங்கின.
திருக்குறளை ஏழை எளிய மற்றும் ஒடுக்கப்பட்ட பெருங்குடி மக்களுக்கும் கொண்டு சேர்க்க திருக்குறள் வகுப்புகளை தொடங்கினார் வள்ளற் பெருமானார்.
இது வடவேத பிராமணர்களுக்கு மட்டுமல்ல சைவ அடிப்படைவாதிகளுக்கே பேரிடியாக இறங்கியது.
சிதம்பரம் தீட்சிதர்களின் எதேச்சதிகாரப் போக்குக்கும் பேரிடியாக விழுந்தது.
தீட்சிசதர்கள் கைவசம் உள்ள சிதம்பரம் நடராசர் கோவில் பூர்வ ஞான சிதம்பரம் என்றும் அதாவது பழைய சிதம்பரம் என்றும், புதிய சிதம்பரமாக உத்தரஞான சிதம்பரம் எனும் பெயரில் வடலூரில் நூற்று ஆறு ஏக்கர் நிலப் பரப்பில் உத்தரஞான சிதம்பரம், உத்தரஞான சித்திபுரம், திருவருட்பெருவெளித் தலம் எனும் பெயர்களில் வெட்டவெளித் திருவருள் பெருவெளித்தலத்தை உருவாக்கினார் இராமலிங்கப் பெருமானார்.
இதற்காக 106 ஏக்கர் நிலத்தைத் தானமாகக் கொடுத்தார்கள் பார்வதிபுரம் கிராம மக்கள் .
(இந்த 106 ஏக்கரிலும் 25 ஏக்கர் நிலத்தை கடந்த 1975 ஆம் ஆண்டு தனியாருக்குப் பட்டா போட்டு கொடுத்து விட்டது அன்றைய அரசு, ஆறரை ஏக்கர் நிலத்தை ஒரு சிவாச்சாரியார் ஆக்கிரமித்துக் கொள்ள. தற்போது எஞ்சியிருப்பது 72 ஏக்கர் மட்டுமே. அதையும் அடைத்து 100 கோடி ரூபாய் செலவில் சர்வதேச மையம் கட்டுவோம் என்று இன்றைய திமுக அரசு முனைந்ததுதான் கடும் எதிர்ப்புக்கு ஆளாகி வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது)
இந்த 106 ஏக்கர் வெட்டவெளித் தலத்தில் எப்போதும் உணவு சமைத்து உணவு தரக்கூடிய தருமச்சாலை ஒன்றையும் நிறுவினார்.
இருக்கும் மக்கள் அரிசி பருப்பு, காய்கறிகளை அங்கே கொண்டு வந்து தரலாம். அதை சமைத்து பசியால் வாடும் ஏழை மக்களுக்கு அளிக்க வேண்டும்.
இதுதான் அந்த தருமச்சாலையின் நோக்கம்.
150 ஆண்டுகள் கடந்தும் இன்றும் பசிப்பிணி போக்கி வருகிறது அந்த தருமச்சாலை.
மேலும் சிதம்பர இரகசியம் என்று இன்று வரை சிலர் உருட்டிக் கொண்டிருக்கும் சிதம்பரத்தின் உண்மையான இரகசியத்தை வடலூர் பெருவெளித் தலத்தில் உடைத்து மக்களுக்கு வெளிப்படையாக அறிவித்துவிட்டார் இராமலிங்க வள்ளலார்.
இதை உணர்த்தும் விதமாக மனிதத் தலை போன்ற எட்டு வாசல்கள் கொண்ட ஞான சபை ஒன்றை அமைத்தார்.
இந்த 106 ஏக்கர் வெட்டவெளிப் பெருவெளித் தலத்திற்குள் சாதி, மத, சமய, ஏழை, பணக்கார ஏற்றத் தாழ்வின்றி ஆண் பெண் பாலின பேதமற்று எவரும் வரலாம்.
இதுதான் இராமலிங்க வள்ளற் பெருமானார் 1867 முதல் 1872 ஆம் ஆண்டுகளில் தொடங்கி வைத்த உலக மகாப் பெரும் புரட்சி.
புலால் (Non veg) உண்பவர்கள்கூட பெருவெளித் தலத்தினுள் வரலாம், தருமச்சாலையில் உணவு உண்ணலாம், எந்தத் தடையும் இல்லை.
ஆனால் ஞான சபைக்குள் நுழையும்போது மட்டும் கொலை புலால் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்திய ராமலிங்க வள்ளற் பெருமானார் அதற்கு விளக்கமாக, காரணமாக முன் வைத்தது, "எந்த உயிர்களையும் துன்புறுத்தக் கூடாது என்பதற்காக" "எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க" எனும் தமிழர் உயிர்ம நேய, ஆன்ம நேய மானுடப் பெருங்கோட்பாட்டை வலியுறுத்துவதற்காக.
கொல்லானைப் புலால் மறுத்தானை எல்லா உயிர்களும் கை கூப்பித் தொழும் எனும் திருவள்ளுவரின் குறளுக்கு இலக்கணமாக அமைகிறது வள்ளலாரின் இந்த சமரச சுத்த சத்திய சன்மார்க்க நெறிமுறை ஞான சபை.
எந்தவித ஏற்றத் தாழ்வில்லாத சமரசம், கலப்படமில்லாத சுத்தமான, உண்மையான சன்மார்க்க நெறிமுறையே வள்ளலாரின் நெறிமுறை, வள்ளலாரின் சன்மார்க்கம்.
இந்த நெறிமுறைகளுக்கு ஏற்ப 150 ஆண்டு காலமாக ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று மட்டும் 20 லட்சம் பேர் இங்கே வந்து கூடுகிறார்கள். மாதப் பூசத்தன்று 50,000 பேர் வரை வருகிறார்கள்.
அது இனிவரும் காலங்களில் 40 லட்சமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் ஆக்கிரமிப்புக்கு உள்ளான 34 ஏக்கர் நிலத்தை மீட்டு 106 ஏக்கர் வெட்டவெளித் தலத்தை வள்ளலாரிடம் ஒப்படைப்பதை விட்டுவிட்டு, இருக்கிற 72 ஏக்கர் நிலத்திலும் சர்வதேச மையம் எனும் பெயரில் விலை உயர்ந்த உணவு விடுதி, விவிஐபிகள் தங்கும் விடுதி, கழிவறைகள் என பெருவெளித்தலம் எனும் கோயிலுக்குள் கட்டத் துடிக்கும் 100 கோடி ரூபாய் சர்வதேச மையம் எனும் திட்டத்தை பெருவெளித் தலத்தை விட்டுவிட்டு வேறு எங்காவது வெளியில் கட்டிக் கொள்ளுங்கள் என்பதுதான் வள்ளற் பெருமானாரின் சன்மார்க்க நெறிமுறை, உத்தரஞான சிதம்பரத்தின் அருமை பெருமை அறிந்தவர்களுடைய கோரிக்கையாக இருக்கிறது.
ஆனால், தொடர்ந்து பிடிவாதமாக பெருவெளித் தலத்தை சிதைத்துதான் கட்டுவோம் என்று அடம் பிடிக்கிறது இன்றைய அரசு.
இதுதான் ஒட்டுமொத்த வள்ளலாரினுடைய விவரம் அறிந்த பத்தர்கள், பின்பற்றாளர்கள், சன்மார்க்கிகள், சன்மார்க்க சங்கத்தவர்கள் மனதில் வேல் கொண்டு கிழித்தது போல உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது.
இப்போது கூறுங்கள்.......வட வேத ஸ்மார்த்த பிராமணிய வருணாசிரமத்தை எதிர்த்து தனிக்கோவிலே கட்டிய வள்ளலாரை. ஏழை எளிய மக்களும் ஆன்மீகத்தை, இறைவனை வணங்க உரிமை கொண்டவர்கள் என்று நிலைநாட்டிய வள்ளலாரை, பெண்களும் பத்தி. ஆன்மிக, மெய்யியலில் உயர வேண்டும் என்ற வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்க நெறியை , 106 ஏக்கர் வெட்ட வெளித்தலத்தை சமூக நீதி பேசும், பெண்ணுரிமை பேசும், சாதி ஒழிப்பு பேசும் திமுக சிதைக்கலாமா ? இது நியாயமா ? இதுதான் திராவிட சமூக நீதியா எனும் கேள்வி எழுகிறதா இல்லையா ?!
எனவே 106 ஏக்கர் திரு அருட்பெருவெளித் தலத்தைக் காக்கும் பணியையே தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும், இல்லையா ?!
அறிவார்ந்த சான்றோர்கள் சிந்திக்க வேண்டும்.
இது தொடர்பாக, "வடலூர் வள்ளற் பெருமானாரின் திருவருட்பெருவெளித்தலம் : திரிப்புகளும் பேருண்மைகளும்" எனும் விரிவான சான்றாய்வு நூல் ஒன்றை வள்ளலாரின் வழிகாட்டுதலோடு நாம் எழுதி வெளியிட்டிருக்கிறோம். தேவைப்படுவோர் 9080568865 என்னும் வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் அனுப்பலாம்
சாதியும் மதமும் சமயமும் பொய் என்று ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி .
- வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், பத்திரிகை ஊடகவியலாளர், ஆசிரியர் : தமிழ் ஊடகம் குழுமம். நிறுவனர் : இராமலிங்க வள்ளலார் மரணமில்லாப் பெருவாழ்வு ஆய்வு அறக்கட்டளை மற்றும் தமிழியல் நடுவம்.
02/8/2025
தமிழ் ஊடகம் வார இதழ் | பதிவு எண் : PRGI Registration number TNTAM/25/A1239
#வள்ளலார் #தமிழ்ஊடகம் #வளர்மெய்யறிவான் #விசுவாவிசுவநாத்