20/04/2021
மும்பை ரயில்வே பாயின்ட்ஸ்மேன் மயூர் ஷெல்கே என்பவர், ரயில் வரும்போது தண்டவாளத்தில் விழுந்த ஒரு குழந்தையைக் காப்பாற்றிய வீடியோவை நீங்களும் கடந்த இரு நாட்களுக்குள் பார்த்திருப்பீர்கள்.
அதில் இரண்டு விஷயங்கள்...
தண்டவாளத்தில் விழுந்த தன் குழந்தையைக் காப்பாற்ற அக்குழந்தையின் அம்மா முனையவில்லையே என்ற கேள்வி ஒன்று. திகிலடித்துப் போயிருக்கலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால், அந்தத் தாய் பார்வையற்றவர். அதனால்தான் பையனின் குரலைக் கேட்டு எங்கே எங்கே என்று தடுமாறுகிறார். (செய்தியில் பார்த்தேன்.)
இன்னொரு விஷயம் என் ஊகம். வீடியோவை கவனமாகப் பார்த்தபோது அதை கவனித்தேன்.
குழந்தை தண்டவாளத்தில் விழுந்தது தெரிந்ததும் பாயின்ட்ஸ்மேன் மயூர் ஷெல்கே ஓடி வருகிறார். ஆனால் ஓடிவரத் துவங்கியபிறகு தன் உயிர் பற்றிய ஓர் அச்சம் அவருக்கு வருகிறது.
ஆனால் ஒரு கனம், ஒரே ஒரு இமைப்பொழுது... தண்டவாளத்திலிருந்து அந்தப்பக்கம் போய்விடலாம் என்று நினைக்கிறார்.
ஆனால் மனதுக்குள் தனக்கும் குழந்தைக்குமான தொலைவையும் ரயிலின் வேகத்தையும் கணக்கிடுகிறார். காப்பாற்றிவிட முடியும் என்ற நம்பிக்கை வருகிறது.
மறுபடி ஓடுகிறார். அந்த நான்கைந்து விநாடிகளுக்குள் எவ்வளவு வேகமாக அவருடைய மனது கணக்குப் போட்டிருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன். அபாரமான presence of mind.
அந்த ஒரு கணத்தின் தடுமாற்றத்தை, அதை வென்று அவர் ஓடுவதை, வீடியோவில் 18-19ஆம் நொடிகளில் கவனிக்கலாம்.
அந்த ஒருகணத் தடுமாற்றம் - தடுமாற்றமாக இருந்தால் - அதுதான் மனித இயல்பு.
ஆனால் அந்த இயல்பையும் மீறி செயல்பட்ட பாயின்ட்ஸ்மேன் மயூர் ஷெல்கே மனிதருக்கும் மேலே மிக உயர்ந்த மனிதர்.
Mayur_shelke
Salute Brother🙏❤️