20/03/2026
நீலகிரி மாவட்டம் கும்மனாட்டி கப்பச்சி கிராமத்தை சேர்ந்த படுகா இன மக்கள் தங்கள் ஊர் நலம்பெற வேண்டி அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் படுகர் இன பாரம்பரிய நடனம் ஆடி வழிபாடு செய்தனர்.
நீலகிரி மாவட்டம் கும்மனாட்டி கப்பச்சி கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட படுகர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் ஊரும் ஊர் மக்களும் நலமாக இருக்க வேண்டி ஒவ்வொரு ஆண்டும் திருப்பூர் மாவட்டம் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு வந்து பாரம்பரிய முறைப்படி படுகா நடனமாடி அவிநாசிலிங்கேஸ்வரரை வழிபடுவது வழக்கம். அந்த வகையில் இன்று கப்பச்சி கிராமத்தை சேர்ந்த படுகர்கள் 300 க்கும் மேற்பட்டவர்கள் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வந்து தங்கள் ஊரான கப்பச்சி மக்கள் நலம் வாழ வேண்டி பாரம்பரிய முறைப்படி படுகர் நடனமாடி வழிபாடு நடத்தினர். உற்சாகமாக அவர்கள் படுகர் நடனமாடியது கோவிலுக்கு வந்திருந்தவர்கள் கண்டு ரசித்தனர். அவிநாசிலிங்கேஸ்வரருக்கு தங்கள் ஊரில் இருந்து கொண்டு வந்த பலகாரங்கள் படைத்து வழிபட்டதாகவும், தங்கள் குலதெய்வமாக கருதும் அவிநாசிலிங்கேஸ்வரரை ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் வந்து வழிபடுவதாகவும் இதனால் தங்கள் ஊரில் மகிழ்ச்சி நிலைத்திருக்கிறது எனவும் தெரிவித்தனர்.