Tamil Voice

Tamil Voice Latest Updates from State and National Politics

அம்மாவை பழித்தவனை எப்படி விடமாட்டோமோ? அது போல் ஸ்டாலினை தொட்டவரை விடமாட்டேன்! மேயர் பிரியா ஆவேசம்என் தலைவர் ஸ்டாலினை தொ...
12/09/2026

அம்மாவை பழித்தவனை எப்படி விடமாட்டோமோ? அது போல் ஸ்டாலினை தொட்டவரை விடமாட்டேன்! மேயர் பிரியா ஆவேசம்

என் தலைவர் ஸ்டாலினை தொட்டவர் யாராக இருந்தாலும் நான் விடமாட்டேன் என திமுக ஆர்ப்பாட்டத்தில் மேயர் பிரியா ஆவேசமாக பேசினார். மேலும் மிசா சட்டம் குறித்து உங்களுக்கு என்ன தெரியும் என்றும் விஜய்க்கு பிரியா கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் மிசா குறித்தும் ஸ்டாலின் குறித்தும் பேசியதைக் கண்டித்து திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மேயர் பிரியா பங்கேற்றார்.

அப்போது அவர் பேசுகையில், மிசா சட்டத்தை பற்றி உங்களுக்கு என்ன தெரியும். நீங்கள் எல்லாம் திமுகவை பார்த்து கேள்வி எல்லம் கேட்கலாமா? அந்த தகுதி உங்களுக்கு இருக்கிறதா? சட்டசபையில் வந்த என்ன பேச வேண்டும் என அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு சொல்லித் தரவில்லை.

இதில் பயிற்சி புரோகிராம் வேறு கொடுத்தீர்கள். யாரை சீண்டிப் பார்த்து இருக்கிறீர்கள், என்ன மாதிரியான ஒரு கழகத்தை சீண்டியிருக்கிறீர்கள் என்பதை தெரியாமல் சீண்டியிருக்கிறீர்கள்.

நாங்களாக பிரச்சினைக்கு போக மாட்டோம். ஆனால் வருகிற பிரச்சினையை என்றைக்குமே விட மாட்டோம். நீங்களே விட்டாலும் நாங்கள் அதை விட மாட்டோம். திரைப்படத்தில் நடிப்பது போல் ஒரு மணி நேரம் சட்டசபைக்கு வந்து பேசிவிட்டு போகிறார் முதல்வர்.

தமிழகத்தின் வரலாறு என்ன? அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் தமிழையும் தமிழகத்தையும் வளர்ப்பதற்கு எவ்வளவு பாடுபட்டுள்ளார்கள் என்று தமிழக மக்கள் பார்த்திருக்கிறார்கள். இன்று மிசா சட்டம் குறித்து சட்டசபையில் பேசுகிறீர்கள். மிசா என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா?

முதுகை காட்டிக் கொண்டு ஓடு ஓடு ஓடு என்று ஓடிவிட்டு உதயநிதி ஸ்டாலினை ஓடக் கூடாது என்று சொல்கிறீர்கள். அப்படி சொல்லிவிட்டு நீங்கள்தான் ஓடுகிறீர்கள். மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

"என் தாயை பழித்தவனை யார் தடுத்தாலும் விட மாட்டேன்" என சொல்வார்கள். அது போல் என் தலைவரை தொட்டது யாராக இருந்தாலும்... மாண்புமிகுவாக இருந்தாலும் நாங்கள் விடமாட்டோம்" என மேயர் பிரியா தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் போலீஸ், தீயணைப்புத் துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த திங்கள்கிழமை நடந்தது. அப்போது விஜய் ஒரு மணி நேரமாக ஆவேசமாக பேசியிருந்தார்.

மிசா குறித்து பேசும் போது சிறையில் ஸ்டாலினை போலீஸ் அடித்ததில் தாடை உடைந்தது குறித்து செய்கை காட்டினார். இது திமுகவினருக்கு மட்டுமல்ல, தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டணி கட்சியினருக்கே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

முன்னாள் முதல்வர் ஸ்டாலினை உருவகேலி செய்வதா என்றும் விஜய்யால் அரை மணி நேரம் சிறை கொடுமைகளை தாங்க முடியுமா என்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்த நிலையில் தான் யாரையும் உருவகேலி செய்யவில்லை என முதல்வர் விஜய் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் தனது விளக்கத்தில் தெரிவித்திருந்தார். முதல்வர் விஜய்யின் செயலை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவா? இல்லையா? நாளை மதியம் 2 மணிக்கு முடிவை சொல்லும் சிபிஎம்மதுராந்தகம், தாராபுரம் தொகுதிக்கு...
12/09/2026

இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவா? இல்லையா? நாளை மதியம் 2 மணிக்கு முடிவை சொல்லும் சிபிஎம்

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தவெகவுக்கு ஆதரவா? இல்லையா? என்பது குறித்து நாளை மதியம் 2 மணிக்குள் அறிவிக்கப்படும் என சிபிஎம் மாநில செயலாளர் பெ சண்முகம் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்த ஆலோசிக்க நாளை திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர மாநிலக்குழு கூட்டம் கூட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த 2026 சட்டசபை தேர்தலில், வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் மரகதம் குமரவேல், சத்யபாமா ராஜினாமா தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு விஜய்யின் தவெகவில் இணைந்தனர். இதனால் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதையடுத்து வேட்பு மனு தாக்கல் தொடங்கி தேர்தல் நடத்துவதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. தேர்தல் முடிந்து இரண்டு மாதத்திற்குள்ளேயே இருவரும் எம்.எல்.ஏக்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு இன்னொரு கட்சியில் இணைந்திருப்பது அப்பட்டமான குதிரை பேரம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில் தற்போது தவெக சார்பில் ராஜினாமா செய்த சத்யபாமா, மரகதம் குமரவேலுக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதுவும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

இது ஒரு புறம் இருக்க விஜய்யின் ஆட்சிக்கு வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு என்றும், தவெகவுடன் கூட்டணி இல்லை என்றும் இடதுசாரிகள் கட்சிகள் அறிவித்துள்ளன. இதனால் நடக்க உள்ள இரு தொகுதி இடைத்தேர்தலிலும் யாருக்கு இடதுசாரிகள் கட்சிகள் ஆதரவு அளிக்கும் என்ற கேள்வி இருந்து வந்தது. இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த சிபிஎம் மாநில செயலாளர் பெ சண்முகம் இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து நாளை மதியம் 2 மணிக்கு அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.

இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம், மாநில செயலாளர் பெ சண்முகம் தலைமையில் சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பெ சண்முகம் கூறியதாவது:-

நடைபெற உள்ள இடைத்தேர்தல் குறித்து முக்கியமான அரசியல் முடிவை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. எனவே, கட்சியின் அவரச மாநிலக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற உள்ளது. மாநிலக்குழு கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்டியின் நிலைபாடு குறித்து முடிவு செய்யப்படும். நாளை மதியம் 2 மணிக்குள் அறிவிக்கப்படும். சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்த போது, இது ஆரோக்கியமற்ற அரசியல், சந்தர்ப்பவாத நிலை என ஏற்கனவே கூறியிருக்கிறோம். அந்த கருத்தில் எந்த மாறுபாடும் இல்லை" என்று கூறினார்.

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு நடந்த கொடுமை.. கேட்டதுமே கண்கலங்கிய பிரியங்கா காந்தி: ஆ.ராசாபெரிய நடிகராக இருப்பதோ, 75...
12/09/2026

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு நடந்த கொடுமை.. கேட்டதுமே கண்கலங்கிய பிரியங்கா காந்தி: ஆ.ராசா

பெரிய நடிகராக இருப்பதோ, 750 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதோ, முதலமைச்சராக இருப்பதோ பெரிய விஷயமல்ல. எல்லாவற்றுக்கும் மேலாக முதலில் மனிதனாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் மானத்தையும், அரசியல் நாகரிகத்தையும் காப்பாற்ற அனைவரும் முன்வர வேண்டும் என்று திமுக முன்னாள் எம்.பி. ஆ.ராசா ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சட்டப்பேரவையில் இழிவுபடுத்தியதாக முதலமைச்சர் விஜய்க்கு எதிராக திமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

முன்னாள் எம்.பி. ஆ.ராசா
இதில் பேசிய முன்னாள் எம்.பி. ஆ.ராசா, "தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு மிகப்பெரிய வரலாறும், ஈடுஇணையற்ற அரசியல் நாகரிகமும் இருக்கிறது. சட்டமன்றத்தில் எத்தனையோ காரசாரமான குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.. எம்ஜிஆர் ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது, உள்ளாட்சித் துறை அமைச்சரான குழந்தைவேலு, "செங்கல்பட்டு மாவட்டத்தில் கலைஞருக்கு 300 ஏக்கர் நிலம் இருக்கிறது "என்றார்..

உடனே எழுந்த கலைஞர், அந்த நிலம் இருப்பதை அமைச்சர் நிரூபித்துவிட்டால், நான் அரசியல் துறவறம் பூணுகிறேன், நிரூபிக்காவிட்டால் அமைச்சர் துறவறம் பூண்பாரா? என்று சவால் விடுத்தார். ஒரு வாரம் கழித்தும் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாததால் அமைச்சர் பதவி விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்படி ஒரு நிலமே செங்கல்பட்டில் இல்லை என்பது உறுதியானது.

கலைஞருக்கு செங்கல்பட்டு 300 ஏக்கர் நிலம்

அப்போது எம்ஜிஆர் கலைஞரிடம் வந்து, "சின்னப் பையன் ஏதோ அறியாமல் பேசிவிட்டான், மன்னித்துவிட்டு அமைச்சராகத் தொடர அனுமதியுங்கள்" என்று அன்போடு கேட்டுக்கொண்டார். கலைஞரும் பெருந்தன்மையோடு அவரை மன்னித்து அமைச்சராகத் தொடர ஒப்புக்கொண்டார்.

ஆட்சியில் இருந்தபோதும் சரி, எதிர்க்கட்சியில் இருந்தபோதும் சரி, எத்தகைய காரசாரமான கேள்விகள் வந்தாலும் அவற்றுக்கு நாகரிகமாகவும் சுவையாகவும் பதிலளித்த பெருமை திராவிட இயக்கத்துக்கு உண்டு. ஆனால், இன்றைய அரசியல் சூழலில் அந்த அரசியல் நாகரிகத்தை சிலர் சீர்குலைக்கும் வகையில் நடந்து கொள்வது வேதனை அளிக்கிறது.

ஐஏஎஸ் அதிகாரிகள் செய்யும் துரோகம்

சட்டமன்ற கேலரியில் உட்கார்ந்திருக்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள், ஒரு முதலமைச்சர் அவையில் வரலாற்று உண்மைகளுக்கு மாறாகவும் அநாகரிகமாகவும் பேசும்போது, அது தவறு என்று எடுத்துச் சொல்லாமல் அமைதியாக இருக்கீங்களே? ஆட்சி மாறுபடும், அமைச்சர்கள் மாறுவார்கள், ஆனால் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற மாட்டீர்கள்.. இந்த தேசத்திற்கு அமைதியாகவே இருந்து துரோகம் செய்யாதீர்கள்..

மிசா காலத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்கொண்ட கொடுமைகளை யாரைலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. 1976-ல் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டபோது ஸ்டாலினுக்கு வயது 23 மட்டுமே. கல்யாணமாகி 3, 4 மாதங்களே ஆகியிருந்தது.. அப்போது மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மிசா ஸ்டாலின் ஜெயிலில்

சிறை அதிகாரிகளும் காவல்துறையினரும் அவரை கொடூரமாகத் தாக்கியதில் தாடையிலும் கைகளிலும் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டச் சொட்ட கிடந்தார். அவரை காப்பாற்ற முயன்று குறுக்கே வந்த சிட்டிபாபு என்ற தியாகி, காவல்துறையின் கொடூரமான தாக்குதலில் சிறையிலேயே தன் உயிரைத் துறந்தார்.

சிறையில் இருந்த மகனைப் பார்க்க கலைஞர் சென்றபோது, ஸ்டாலின் முழுக்கை சட்டை அணிந்திருந்ததையும், அவரது முகம் சிவந்து வாடியிருந்ததையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

"தம்பி, போலீஸ் உன்னை அடித்ததா?"

"தம்பி, போலீஸ் உன்னை அடித்ததா?" என்று பெற்ற மனம் பதறக் கேட்டார். அதற்கு ஸ்டாலின், "அப்பா, எனக்கு ஏற்பட்ட காயங்களையும், எனக்கு விழுந்த அடிகளையும் விசாரிக்க நீங்கள் வரவேண்டாம். இந்த நாட்டின் ஜனநாயகத்தின் மீதும், அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும்தான் அடி விழுந்திருக்கிறது. தயவுசெய்து இந்த தேசத்தைக் காப்பாற்றுங்கள்" என்றார்..

கலங்கிய பிரியங்கா காந்தி

இந்த சம்பவத்தை நாடாளுமன்றத்தில் 75-வது அரசியலமைப்புச் சட்ட விவாதத்தின்போது நான் பதிவு செய்தேன். உரையை முடித்துவிட்டு வெளியே வந்தபோது பிரியங்கா காந்தி என்னை அணுகி, "ஸ்டாலினுக்கு உண்மையிலேயே இப்படிப்பட்ட கொடூரம் நடந்ததா?" என்று கண்கள் கலங்க கேட்டார். இஸ்மாயில் கமிஷன் அறிக்கையிலும், சர்க்காரியா கமிஷன் ஆவணங்களிலும் பதிவாகியுள்ள இந்த வரலாற்று உண்மைகளை சிலர் தங்களுடைய அரசியல் லாபத்துக்காக திரித்துப் பேசுவது கண்டிக்கத்தக்கது.

உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையிலும், பொது வெளியிலும் எழுப்பிய நியாயமான கேள்விகளுக்குக்கூட பதிலளிக்க முடியாதவர்கள், தியாகத்தின் வரலாற்றைப் புரிந்துகொள்ளாமல் பேசுகிறார்கள்.

முதலில் மனிதனாக இருங்கள்

காமராஜர் தேர்தலில் தோற்று சட்டமன்ற உறுப்பினராக இல்லாத காலத்தில் உடல்நிலை சரியில்லாமல் ஊட்டியில் ஓய்வெடுக்கச் சென்றார். அப்போது அரசு விருந்தினர் மாளிகையில் அவர் தங்குவதற்கு முதலமைச்சராக இருந்த கலைஞர் உடனடியாக அனுமதி அளித்து மரியாதை செய்தார். இதுதான் அரசியல் நாகரிகம்.

பெரிய நடிகராக இருப்பதோ, 750 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதோ, முதலமைச்சராக இருப்பதோ பெரிய விஷயமல்ல. எல்லாவற்றுக்கும் மேலாக முதலில் மனிதனாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் மானத்தையும், அரசியல் நாகரிகத்தையும் காப்பாற்ற அனைவரும் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்றெல்லாம் காட்டமாக பேசினார்.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! கடந்த தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகள் எவ்வளவு? மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டச...
12/09/2026

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! கடந்த தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகள் எவ்வளவு?

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தொகுதிகளில் எந்தெந்த கட்சிகள் எத்தனை வாக்குகளை பெற்றது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தமிழக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தவெக பெரும்பான்மை இல்லாமல் 108 இடங்களில் மட்டும் வென்றது. இதையடுத்து காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது.

இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியான போது அதிமுகவும் திமுகவும் இணைந்து ஆட்சியை நடத்தலாம் என பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அதிமுக எம்எல்ஏ சி.வி.சண்முகம் தெரிவித்திருந்தார்.

இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. அதிமுக இது போன்ற பேச்சுவார்த்தை நடத்தியதால்தான் தவெக கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவை சேர்ந்த 20 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தன.

ஒருங்கிணைந்த அதிமுகவுக்காக கட்சியில் இருந்து போனவர்கள், நீக்கப்பட்டவர்களை இணைக்குமாறு மூத்த நிர்வாகிகள் கூறியும் எடப்பாடி பழனிசாமி அவரது பதவியை காத்துக் கொள்ள முயற்சிக்கிறாரே தவிர, அதிமுகவின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ளவில்லை என்ற விமர்சனம் எழுந்தது.

இதையடுத்து திமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க அதிமுக பேச்சுவார்த்தை நடத்தியதற்கு எதிராக அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்), ஜெயக்குமார் (பெருந்துறை), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), சி.விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்)ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில் முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதை எதிர்த்து வழக்கு நிலுவையில் உள்ளது.

இதனால் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளுக்கு மட்டும் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது, அக்டோபர் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக, திமுக, தவெக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. அதில் திமுக சார்பில் மதுராந்தகத்தில் பரந்தாமன், தாராபுரத்தில் சுகன்யா, அதிமுக சார்பில் மதுராந்தகத்தில் கணிதா சம்பத், தாராபுரத்தில் கே.பானுமதி ஆகியோர் வேட்பாளர்கள் ஆவர்.

தவெகவை பொருத்தமட்டில் அதிமுகவில் இருந்து இணைந்த மரகதம் குமரவேல் மதுராந்தகம் தொகுதியிலும் சத்தியபாமா தாராபுரம் தொகுதியிலும் போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பொதுவாக இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிதான் ஜெயிக்கும் என்பார்கள். ஆனால் தவெகவின் செயல்பாடுகளால் மக்கள் விரக்தி அடைந்துள்ளதால் இந்த முறை தவெகவுக்கு பாடம் கற்பிக்க மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் என்கிறார்கள். மேலும் இரு தொகுதிகளுமே அதிமுகவின் கோட்டை என்பதால் எப்படியும் ஜெயித்து விடுவோம் என்று அதிமுக வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

அது போல் தமிழக சட்டசபையில் திமுக தலைவர் ஸ்டாலினை விஜய் அவமதிக்கும் போக்கையும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் நடந்த கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரச்சினைகளையும் மக்களிடம் எடுத்துக் கூறி திமுக வேட்பாளர்கள் வாக்கு கேட்டு வருகிறார்கள்.

தவெக ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளதால் எப்படியும் நாம்தான் ஜெயித்து விடுவோம் என அக்கட்சி வேட்பாளர்கள் நம்பிக்கையாக இருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த தேர்தலில் யார் யார் எவ்வளவு வாக்குகளை பெற்றன என்பதை பார்க்கலாம்.

மதுராந்தகத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் 69,284 வாக்குகளையும் தவெக சார்பில் போட்டியிட்ட எழில் கேத்ரின் 62,090 வாக்குகளையும் திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.அமுலு பொன்மலர் 59,838 வாக்குகளையும் பெற்றனர்.

நாதக சார்பில் போட்டியிட்ட ஜானகி ராமனுக்கு 4,950 வாக்குகளும் நோட்டாவுக்கு 797 வாக்குகளும் கிடைத்துள்ளது. அதிமுக வேட்பாளருக்கும் இரண்டாம் இடத்தில் இருந்த தவெக வேட்பாளருக்கு 7,194 வாக்குகளே வித்தியாசம்.

அது போல் தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் வென்ற சத்தியபாமா 81,10 வாக்குகளையும் திமுக சார்பில் போட்டியிட்ட இந்திராணி 64,373 வாக்குகளையும் தவெக சார்பில் போட்டியிட்ட கவுரி சித்ரா 46,438 வாக்குகளையும் , நாம் தமிழர் கட்சியின் திவ்யா 6,026 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

மதுராந்கத்தில் இரண்டாம் இடத்தில் வந்த தவெக, தாராபுரத்தில் 3 ஆவது இடத்திற்கு சென்றது. வரும் இடைத்தேர்தலில் மக்கள் எந்த கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இரவில் தொடர்ந்து கரண்ட் கட் ஆகிறது.. அமைச்சர் ஜெகதீஷ்வரி நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பதறிய தவெக! ராஜபாளையத்தில் அமைச்சர்...
11/09/2026

இரவில் தொடர்ந்து கரண்ட் கட் ஆகிறது.. அமைச்சர் ஜெகதீஷ்வரி நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பதறிய தவெக!

ராஜபாளையத்தில் அமைச்சர் ஜெகதீஷ்வரி நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் பொதுமக்கள் தொடர் மின்வெட்டு தொடர்பாஜ்க வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரங்களில் தொடர்ச்சியாக மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும், கேட்டால் மேலிடத்து உத்தரவு என்று அதிகாரிகள் சொல்வதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைத்து 4 மாதங்கள் கடந்துவிட்ட சூழலில், அக்கட்சி எம்எல்ஏ-க்கள் இப்போது தான் மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அமைச்சர் ஜெகதீஷ்வரி ராஜபாளையம் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து கூட்டத்தை நடத்தினார். ராஜபாளையம் தொகுதியில் ஜெகதீஸ்வரி 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அமைச்சர் புஸ்ஸி ஆனந்தின் ஆதரவாளர் என்பதால், ஜெகதீஷ்வரிக்கு உடனடியாக அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அமைச்சரான பின் அதிகமாக சர்ச்சைகளில் சிக்கியது ஜெகதீஷ்வரி தான். முதலில் தன்னுடைய பெயருக்கு மேல் அமைச்சர் கீர்த்தனாவின் பெயர் ஏன் அரசு நிகழ்ச்சியில் போடப்பட்டது என்று மாவட்ட ஆட்சியரிடம் மேடையிலேயே கேட்டு அதிர்ச்சி கொடுத்தார்.

இதன்பின் ஜெகதீஷ்வரியின் ஆடியோ ஒன்று லீக்காகியது. கட்சி நிர்வாகி ஒருவரை ஜட்டியோடு அடித்து ஓடவிடுவேன் என்று அவர் பேசியவை தவெகவினரையே அதிர்ச்சி அடைய செய்தது. இதன்பின் சட்டசபையில் ஜெகதீஸ்வரியின் சமூக நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது தப்புத் தப்பாக பதில்களை அளித்து முதல்வர் விஜய்யை திரும்பி பார்க்க வைத்தார்.

இந்த நிலையில் ராஜபாளையத்தில் நடந்த நன்றி தெரிவிப்பு கூட்டத்திலும் பொதுமக்கள் மின்சார பிரச்சனை தொடர்பாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதில் ஜெகதீஷ்வரி பேசுகையில், உங்களால் தான் இப்போது அமைச்சராக இங்கு நிற்கிறேன். நீங்கள் இல்லாமல் எதுவும் நடந்திருக்கிறது. அதற்காக என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று பேசி கொண்டிருந்தார்.

அப்போது அங்கிருந்த மக்கள், இரவில் 12 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு 12.30 மணிக்கு வருகிறது. நேற்று இந்த நேரத்தில் இதே இடத்தில் கரண்ட் போனது. அமைச்சர் வருகிறார் என்றதும் இன்று மின்சாரம் துண்டிக்கப்படவில்லை. மின்சார அலுவலகத்தில் கேட்டால் மேலிடத்து உத்தரவு என்று கூறுகிறார்கள். யாரிடம் சென்று பேச சொல்கிறீர்கள். அமைச்சரிடம் புகார் அளிக்க சென்றால், கட்சியினரே தள்ளிவிடுகிறார்கள் என்று கூறினர்.

பிரிட்டன் பறந்த முதல்வர் விஜய்.. கூடவே சென்ற முக்கிய பிரபலங்கள்! என்ன ப்ளான் தெரியுமா? தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை...
11/09/2026

பிரிட்டன் பறந்த முதல்வர் விஜய்.. கூடவே சென்ற முக்கிய பிரபலங்கள்! என்ன ப்ளான் தெரியுமா?

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதலமைச்சர் விஜய் இங்கிலாந்து சென்றுள்ளார். செப்டம்பர் 10-ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்ட அவர், செப்டம்பர் 17-ஆம் தேதி சென்னை திரும்புகிறார். இந்த பயணத்தின் முக்கிய நோக்கங்கள் மற்றும் முதல்வருடன் சென்றுள்ள அதிகாரிகள் குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டை ஆசியாவின் முன்னணி முதலீட்டு மையமாக மாற்றும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற முதல் 100 நாட்களுக்குள் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் சுமார் ரூ.8,491 கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்களை முன்வைத்துள்ளதுடன், அதன் மூலம் சுமார் 5,690 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா-பிரிட்டன் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (CETA) நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அதன் மூலம் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் புதிய முதலீட்டு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதும் விஜய்யின் பயணத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.

குறிப்பாக ஜவுளி, தோல், காலணி, வாகன உதிரிபாகங்கள், பொறியியல் பொருட்கள், மின்னணுவியல், மின்சார வாகனங்கள் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் உள்ளிட்ட துறைகளில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதுடன், ஏற்கனவே தமிழகத்தில் செயல்பட்டு வரும் பிரிட்டன் நிறுவனங்களின் முதலீடுகளை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்’ அமைக்கப்படும் என விஜய் ஏற்கனவே சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இதன் ஒரு பகுதியாக, உலகப் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டை அவர் நேரில் பார்வையிட உள்ளார். அங்குள்ள பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாக நடைமுறைகளை அறிந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய்யுடன் பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, SDAT உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, தொழில்துறை வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றுள்ளனர்.

இதனால் முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமின்றி, தொழில், வேலைவாய்ப்பு மற்றும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறைகளில் தமிழகத்திற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பயணமாக விஜய்யின் இங்கிலாந்து பயணம் அமைந்துள்ளது.

புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு.. போராட்டத்தில் இறங்கத் தயாராகும் 12 மீனவ கிராம மக்கள்!சென்னை பட்டினப்பாக்கத்தில் ...
11/09/2026

புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு.. போராட்டத்தில் இறங்கத் தயாராகும் 12 மீனவ கிராம மக்கள்!

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 12 மீனவ கிராம மக்கள் போராட்டத்தில் இறங்க முடிவு செய்துள்ளனர். இது தொடர்பான ஆலோசனை கூட்டம் 15 ஆம் தேதி பட்டினப்பாக்கத்தில் நடைபெற உள்ளது.

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலக கட்டிடம் சென்னை பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கர் நிலத்தில், ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சி தலைவர்களும், மீனவ அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கடலோரப்பகுதியில் அமைந்துள்ள அந்த இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டினால் அது மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களுக்கான வாழ்வியலையும் பாதிக்கும் என்பதால் பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது சம்பந்த மாக போராட்டக்களத்துக்கு செல்லவும் மீனவ அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

பட்டினப்பாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மீனவக் கிராம மக்களின் முதன்மை வாழ்வாதாரமாக விளங்குவது அவர்களின் படகுகள் நிறுத்துமிடம், வலைகளைப் பராமரிக்கும் பகுதிகள் மற்றும் மீன் விற்பனைச் சந்தைகளே. இப்பகுதியில் தலைமைச் செயலகம் வரும்போது மீனவர்களின் வாழ்வாதாரம் அடியோடு முடங்கும் சூழல் உருவாகும். மேலும், பல தலைமுறைகளாக அங்கு வசித்து வரும் குடும்பங்கள் வெளியேற்றப்படும் அபாயம் ஏற்படும்.

ஆமைகள் முட்டையிடும் பகுதிகளில் கட்டிடங்கள் கட்டக்கூடாது என்று நீதிமன்ற உத்தரவு இருந்தும், அரசு பட்டினப்பாக்கத்தை குறி வைத்து இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்று மீனவ அமைப்புகள் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.

புதிய தலைமைச் செயலக திட்டத்தால் முள்ளிக்குப்பம், பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், ராஜீவ்காந்தி நகர், பவானி குப்பம், இருதயபுரம், செல்வராஜபுரம், டூமில் குப்பம், நொச்சி நகர் உள்பட 12 மீனவ கிராம மக்கள் பாதிக்கப்படு வார்கள். அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். முள்ளிகுப்பம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

அரசின் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், மீனவர்களின் நிலை குறித்து ஆலோசனை செய்ய வருகிற 15 ஆம் தேதி பட்டினப்பாக்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்த இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

கருப்பு சட்டை.. "ஹார்ட்" காட்டிய முதல்வர் விஜய்.. தியேட்டராக மாறிய ஏர்போர்ட்.. வானை பிளந்த சத்தம்!தமிழ்நாடு முதல்வர் விஜ...
11/09/2026

கருப்பு சட்டை.. "ஹார்ட்" காட்டிய முதல்வர் விஜய்.. தியேட்டராக மாறிய ஏர்போர்ட்.. வானை பிளந்த சத்தம்!

தமிழ்நாடு முதல்வர் விஜய் இன்றைய தினம் அரசு முறை பயணமாக லண்டன் சென்றார். அவரை வழியனுப்ப மிக பெரியளவில் மக்கள் கூட்டம் ஏர்போர்ட்டில் திரண்டிருந்தனர். கறுப்பு நிற சட்டை அணிந்து வந்த முதல்வர் விஜய்யை பார்த்தவுடன் மக்கள் கரகோஷம் எழுப்பினர். மக்களை பார்த்து விஜய் ஹார்ட் சைகை காட்டிய நிலையில், அப்போது சத்தம் பல மடங்கு அதிகரித்து அதிர வைத்தது.

தமிழ்நாடு முதல்வராக கடந்த மே மாதம் பதவியேற்ற முதல்வர் விஜய், இப்போது முதல்முறையாக வெளிநாட்டிற்கு செல்கிறார். லண்டன் செல்லும் முதல்வர் விஜய், அங்கு முதலீடுகளை ஈர்க்க பல முக்கிய நிறுவனங்களின் தலைவர்களையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

லண்டன் புறப்பட்டார்
இன்றைய தினம் இரவு 10 மணிக்கு முதல்வர் விஜய் லண்டன் புறப்பட்டு சென்றார். இதற்காக இரவு 8.30 மணியளவில் அவர் தனது இல்லத்தில் இருந்து கிளம்பினார். இரவு 9 மணியளவில் அவர் சென்னை விமான நிலையத்தின் 9வது நுழைவாயில் வழியாக பன்னாட்டு முனையத்திற்கு சென்றார். பெருந்திரளான பொதுமக்கள் அவரை வழியனுப்பி வைத்தனர்.

வழக்கமாக இதுபோல தலைவர்கள் வெளிநாடு செல்லும்போது, கட்சி நிர்வாகிகள் ஏர்போர்ட் வந்து வழியனுப்புவார்கள். இதற்கு முன்பு திமுக ஆட்சியில் இருந்தபோதும், ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு செல்லும் போது அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் விமான நிலையம் வருவார்கள். ஆனால், விஜய் லண்டன் புறப்பட்டபோது தவெக தலைவர்கள் அல்லது நிர்வாகிகள் யாரும் விமான நிலையத்தில் இல்லை. மாறாக மக்கள் கூட்டமே அதிகளவில் இருந்தது.

ஹார்ட் காட்டிய விஜய்
விஜய் கருப்பு நிற சட்டை அணிந்தவாரே காரில் இருந்து இறங்கிய போது, மக்கள் அவரை பார்த்து உற்சாகமடைந்தனர். மக்கள் பெரும் கரகோஷம் எழுப்பிய நிலையில், அவர்களை பார்த்து முதல்வர் விஜய் கைகூப்பி வணக்கம் தெரிவித்தார். பிறகு திரண்டிருந்த மக்களிடம் ஹார்ட்டின் சைகையை காட்டினார். முதல்வர் விஜய்யின் இந்த சைகை பார்த்தவுடன் அங்கிருந்த கூட்டம் மேலும் சத்தம் எழுப்பியது. கிட்டத்தட்ட தியேட்டர் போல அங்கு சத்தம் வானை பிளந்தது. அதைத் தொடர்ந்தே முதல்வர் விஜய் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

முதல்வர் விஜய் எமிரேட்ஸ் EK547 (UAE547) விமானம் மூலம் துபாய் செல்கிறார். இரவு 10.15 மணியளவில் சென்னையில் இருந்து புறப்படும் விமானம், நள்ளிரவில் துபாய் சென்றடையும். பிறகு நாளைய தினம் அங்கிருந்து முதல்வர் விஜய் லண்டன் செல்கிறார். அவருடன் அவரது தனிச்செயலர்களும் லண்டன் செல்வதாக தெரிகிறது.

முதல் வெளிநாட்டு பயணம்
விஜய் தமிழ்நாடு முதல்வரான பிறகு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் என்பதால்.. அவருக்கு உற்சாக வரவேற்பை கொடுக்க லண்டனில் உள்ள தமிழ் சமூகத்தினரும் காத்திருக்கிறார்கள்.. செப்டம்பர் 16ம் தேதி வரை லண்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் விஜ் கலந்து கொள்ள இருக்கிறார். குறிப்பாக பல முன்னணி நிறுவனங்களின் தலைவர்களையும் விஜய் சந்திப்பார் என தெரிகிறது. முதல்வரின் 1.5 டிரில்லியன் என்ற பொருளாதார இலக்கை அடைய இந்த பயணம் முக்கிய பங்கு வகிக்கும் என தெரிகிறது.

விஜய்- அஜித் சந்திப்பு
மேலும், இந்த பயணத்தில் அஜித்தையும் முதல்வர் சந்திக்கலாம் என தெரிகிறது. ஏனென்றால் வரும் 11, 12ஆம் தேதிகளில் லண்டனில் நடக்கும் கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் அணியும் கலந்து கொள்கிறது. எனவே, அந்த ரேஸின்போது முதல்வர் விஜய்- அஜிஸ் சந்திப்பு நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி 16ஆம் தேதி வரை லண்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் முதல்வர் விஜய், 17ஆம் தேதி காலை 8 மணிக்கு துபாய் வழியாக சென்னை திரும்புகிறார்.

பாஜகவிடம் மத்திய அமைச்சர் பதவி கேட்ட திருமா! ஆதாரத்தை வெளியிட ரெடி.. உடைத்து பேசிய பாஜக மா வெங்கடேசன்பாஜகவிடம் விடுதலை ச...
11/09/2026

பாஜகவிடம் மத்திய அமைச்சர் பதவி கேட்ட திருமா! ஆதாரத்தை வெளியிட ரெடி.. உடைத்து பேசிய பாஜக மா வெங்கடேசன்

பாஜகவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அமைச்சரவை கேட்டதாக சொல்லி சமீபத்தில் தமிழ்நாட்டையே அதிர வைத்திருந்தார் பாஜக தேசிய செயலாளர் மா. வெங்கடேசன். இதற்கிடையே நமது ஒன்இந்தியாவுக்கு மா. வெங்கடேசன் அளித்துள்ள பிரத்தியேக பேட்டியில் பல்வேறு விஷயங்கள் தொடர்பாகவும் விரிவாக பேசியுள்ளார்.

தவெக தலைமையிலான தமிழ்நாடு அரசில் விசிகவும் அங்கம் வகிக்கிறது. அக்கட்சியின் வன்னியரசுவுக்கு அமைச்சரவை பதவியும் தரப்பட்டுள்ளது. மேலும், பல ஆண்டுகளாகவே பாஜக மற்றும் பாமக இல்லாத கூட்டணியில் இருப்போம் என்றே திருமாவளவன் தொடர்ந்து கூறி வருகிறார்.

மா வெக்டேசன்
இந்தச் சூழலில் பாஜகவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அமைச்சரவை கேட்டதாக சொல்லி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் பாஜக தேசிய செயலாளர் மா. வெங்கடேசன். இது தொடர்பாக அவர் ஒன்இந்தியாவுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் மேலும் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

2014ஆம் ஆண்டு திருமாவளவன் யாரிடம் பேசினார் என்பது தங்களுக்கு தெரியும் என்று கூறிய மா. வெங்கடேசன், தான் முன்வைத்த குற்றச்சாட்டை திருமாவளவன் அல்லது விசிக தரப்பு இதுவரை மறுக்கவில்லை என்றும் தைரியம் இருந்தால் திருமாவளவன் இந்த குற்றச்சாட்டை மறுக்கட்டும் என்றும் வெங்கடேசன் தெரிவித்தார். அப்படி திருமாவளவன் தனது குற்றச்சாட்டை மறுத்தால் அதற்கான ஆதாரத்தை வெளியிடத் தயாராக இருப்பதாகவும் மா. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

ஆதாரத்தை வெளியிட ரெடி
இது தொடர்பாக அவர் கூறுகையில், "2014-ல் திருமாவளவன் யாரிடம் பேசினார் என்பது எங்களுக்குத் தெரியும். அதை நாங்கள் வெளியிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் பொய்யான தகவல்களை நாங்கள் பரப்புவதாக சொன்னால்.. நாங்களும் பல உண்மைகளை சொல்ல வேண்டியிருக்கும். பாஜகவிடம் அமைச்சரவை கேட்டார் என்று நான் கூறியிருக்கிறேன். அது எப்போது நடந்தது, யாரிடம் பேசினார் என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. முதலில் திருமாவளவன் அதை இல்லை என்று மறுக்கட்டும். பின்னர் நான் ஆதாரத்தை வெளியிடுகிறேன்" என்றார்.

வைகோ
அவர் மேலும் பேசுகையில், "ஒரு முறை வைகோ மீது வன்னியரசு மிகவும் காட்டமான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அப்போது அதற்கு பதிலடி கொடுத்த வைகோ, நான் தான் உங்கள் கட்சிக்கே ரூ.30 லட்சம் கொடுத்திருந்தேன். வேறு எதாவது பேசினால் கூடுதல் உண்மைகளை சொல்ல வேண்டி இருக்கும் என சொல்லியிருந்தார். அதன் பிறகு விசிக கப்சிப் ஆகிவிட்டது.

நாங்கள் திருமாவளவனின் கடந்த கால அரசியல் தொடர்புகள் அனைத்தையும் வெளியிட வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால் எங்கள் கட்சியை கேவலப்படுத்தும் வகையிலோ, ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டு வைக்கும் வகையிலோ பேசினால், பல உண்மைகளை சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்" என்றார்.

சனாதன எதிரியா விஜய்?
மேலும், சனாதனத்துக்கு எதிரானவர் என்பதால் விஜய் கூட்டணிக்கு ஆதரவாக இருப்பதாக திருமாவளவன் கூறியிருந்த நிலையில், அதையும் மா. வெங்கடேசன் விமர்சித்திருந்தார். சனாதனத்தை எதிர்த்து விஜய் எங்கு பேசியிருக்கிறார்.. என்ன செய்து இருக்கிறார் என்பதை சொல்ல வேண்டும் என குறிப்பிட்டார். மேலும், முதல்வர் விஜய் கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்து கூறியதை குறிப்பிட்ட மா வெங்கடேசன், வேறு எந்த முதல்வர் கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்து கூறினார் எனவும் கேள்வி எழுப்பினார்.

2 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு.. மகளிரணியை களமிறக்கிய எடப்பாடி!மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக...
11/09/2026

2 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு.. மகளிரணியை களமிறக்கிய எடப்பாடி!

மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மதுராந்தகம் தனித்தொகுதியில் கணிதா சம்பத்தும், தாராபுரம் தொகுதியில் பானுமதியும் போட்டியிட உள்ளனர்.

2026 தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்த நிலையில், அதிமுகவை சேர்ந்த சில எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இதன் காரணமாக மதுராந்தகம், தாராபுரம் உள்ளிட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள அட்டவணைப்படி, அக்டோபர் 6-ஆம் தேதி வாக்குப்பதிவும், அக்டோபர் 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளதால், இரு தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.

இந்த தேர்தலில் திமுக சார்பில் மதுராந்தகத்தில் பரந்தாமனும், தாராபுரத்தில் சுகன்யாவும் போட்டியிடுகின்றனர். தமிழக வெற்றிக் கழகம் சார்பில், ஏற்கனவே அதிமுக எம்எல்ஏக்களாக இருந்த மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே அதிமுக சார்பில் வேட்பாளர்களை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டதால், அக்கட்சி போட்டியிடுமா என்ற கேள்வியும் எழுந்தது. முக்கிய நிர்வாகிகள் போட்டியிட தயக்கம் காட்டியதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இரண்டு வேட்பாளர்களை அறிவித்து எடப்பாடி பழனிசாமி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மதுராந்தகத்தில் போட்டியிடும் கணிதா சம்பத், அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினராகவும், மகளிரணி இணை செயலாளராகவும் உள்ளார். தாராபுரம் வேட்பாளர் பானுமதி, திருச்சி புறநகர் கிழக்கு மாவட்ட மகளிரணி இணை செயலாளராகவும், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர்.

திமுக, தவெக, அதிமுக என மூன்று முக்கிய கட்சிகளும் வேட்பாளர்களை களமிறக்கியுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியும் விரைவில் வேட்பாளர்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் நான்குமுனைப் போட்டியாக மாறும் சூழல் உருவாகியுள்ளது. உள்ளூர் செல்வாக்கு கொண்டவர்கள் மற்றும் சுயேச்சைகளும் களமிறங்குவதால், வெற்றி யாருக்கு என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Address

Chennai
600003

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share