23/11/2025
எழுத்தாளர் பண்பாளர் வித்யா சுப்பிரமணியம் முகநூலில் இருந்து...........
எழுத ஆரம்பித்ததிலிருந்து இத்தனை காலம் ஒரு எழுத்தாளராக எத்தனையோ விதமான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் இன்று எனக்கு தெரிய வந்த செய்தி புதுவிதமான ஒரு ஆச்சர்யத்தையும் அனுபவத்தையும் தந்தது.
இன்று மாலை கலைமகள் ஆசிரியர் திரு கீழாம்பூர் அவர்களிடமிருந்து அழைப்பு வர உடனடியாக எடுத்து பேசினேன். அப்போது அவர் சொன்ன விஷயம்தான் எனக்கேற்பட்ட ஆச்சர்யத்திற்குக் காரணம்.
ஆகஸ்ட் மாதம் "எந்தையும் நானும்" என்ற தலைப்பில் எனது சொந்த அனுபவத்தை சிறுகதையாக எழுதி, அது கலைமகளில் வெளியாகியிருந்தது.
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கலைமகளின் நெடுங்கால வாசகரும், கீழாம்பூரின் நண்பருமான திரு குமார் என்பவரும் அவரது மனைவி மகள் உட்பட எல்லோருமே இச்சிறுகதையைப் படித்துவிட்டு திரு கீழாம்பூரிடம் பேசி எந்தையும் நானும் கதையையும் என்னையும் மிகவும் பாராட்டியதோடு இன்னொரு வேண்டுகோளையும் அவரிடம் வைத்திருக்கிறார்கள். அது அவரது மகளின் விருப்பம் என்றும் கூறினாராம்.
அதாவது எந்தையும் நானும் கதையில் வந்திருந்த ஓவியத்தில் பாட்டிலில் உள்ள அந்த முட்டை வடிவ மிட்டாயை ஏக்கத்துடன் பார்க்கும் சிறுமியின் முகத்தில் உள்ள சோகம் தன்னை வருத்தப்படுத்துவதாகவும், அதற்கு பதில் அந்த சிறுமி சிரிப்பது போல் ஓவியத்தை மாற்ற முடியுமா என்றும் திரு குமாரிடம் அவரது மகள் கேட்டிருக்கிறாள். தவிர அவளுக்கும் அந்த மிட்டாய் சாப்பிடும் ஆசை ஏற்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறாள்.
உடனே திரு குமார் கலைமகள் ஆசிரியர் திரு கீழாம்பூருடன் தொடர்பு கொண்டு மகளின் விருப்பத்தைக் கூறியதும். கீழாம்புருக்கும் ஒருவித ஆச்சர்யமும் சந்தோஷமும் ஏற்பட்டிருக்கிறது. கலைமகள் பத்திரிகையும் கதையும் எந்த அளவுக்கு வெளிநாட்டிலுள்ளோராலும் படித்து பாராட்டப்படுகிறது என்கிற சந்தோஷம். உடனே அவரது மகளின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென விரும்பியிருக்கிறார். கலைமகள் அலுவலகத்திலேயே AI மூலம் அந்த ஓவியத்திலுள்ள சிறுமி சிரிப்பது போல மாற்றி உடனடியாக அதனை ஆஸ்திரேலிய நண்பருக்கு அனுப்பியதோடு எனக்கும் அனுப்பிவிட்டு, உடனே எனக்கு போன் செய்து மேற்படி விஷயங்களையும் கூறியதும் எனக்குள் ஏற்பட்ட ஆச்சரியம்....! நிச்சயமாக இந்த சம்பவமும் அனுபவமும் இதுவரை ஏற்படாத ஒன்றுதான்.
இருதினம் முன்பு என் அப்பா கனவில் வந்து என் தலையை வருடியதை நினைத்துப்பார்க்கிறேன். அந்தக்கதையே என் அப்பாவின் பாசத்தை விவரிப்பதுதான். இன்று திரு கீழாம்பூர் மூலம் இந்த செய்தி. இப்போது மலர்ந்து சிரிப்பது அந்த ஓவியச்சிறுமி மட்டுமல்ல. நானும்தான்.
முதல் படம் கலைமகளில் வந்த சோகமான சிறுமியின் ஓவியம்.
இரண்டாவது படம் தற்போது கலைமகள் அலுவலகத்தில் AI மூலம் மாற்றப்பட்டுள்ள சிரிக்கும் சிறுமி.
இதைக்கண்டு அந்த ஆஸ்திரேலிய சிறுமியும் மலர்ந்து சிரித்திருப்பாள். எங்கோ வெளிநாட்டில் வசிக்கும் சிறுமியின் விருப்பத்தை உடனே நிறைவேற்றியிருக்கும் கலைமகளின் அன்பையும் கருணையையும் என்னவென்று சொல்ல!
'கலைமகளில் எழுது உன்னை எழுத்தாளராக ஒப்புக்கொள்கிறேன்' என்ற அப்பாவின் குரல் எனக்குள் கேட்கிறது. கலைமகளுக்கும் திரு கீழாம்பூருக்கும் நன்றி கூற வார்த்தைகளில்லை.
இதற்குதான் கனவில் வந்து தலை வருடினாயா அண்ணா?(அப்பா)😊😊
கண்களில் ஆனந்த ஈரத்துடன் - வித்யா சுப்ரமணியம்.